தோல்வி கொடு
தோல்வி வேண்டுமெனக்கு
தோல்வி அற்புதமானது !
தோல்வி அழகானது !
தோல்வி விலைமதிப்பில்லாதது !
வெற்றியின் வேட்டைக்காரர்களே
உங்கள்
அம்புராத்துணியில்
தோல்விகளின் அம்புகளை
மட்டுமே
அடுக்கி வையுங்கள்
ஏனெனில் -
வெற்றியின் வெளித்தெரியா
விலாசத்தை
தோல்விகளால் மட்டுமே
கண்டறிய முடியும் ...
வெற்றியென்பது
முயற்ச்சியின் முற்றுப்புள்ளி
தோல்வி யென்பது
வியர்வையின் தொடர்கதை -
தோல்வியின் வியர்வையில்
மட்டுமே
வெற்றியின் பூக்கள் பூக்கும் ...
முன்னேற்றத்தின் கையில்
தோல்வி ஒரு பிரம்பு
அது தான்
அடித்து அடித்து
வெற்றியின் அர்த்தம் சொல்கிறது ...
புறமுதுகு காட்டா
தோல்வி -
விழுப்புண்களற்ற
வெற்றியை விட
சிறந்ததல்லவா ...
மறைந்திருக்கும்
ஒரு சொட்டுத் தோல்வியிடம்
கேளுங்கள்
அது சொல்லக்கூடும்
கைநழுவிப்போன
வாழ்வின் கதைகளை ...
இராவணத் தோல்வி
வேண்டுமெனக்கு -
எத்தனை அற்புதமானதது
இறைவனே அவதாரமெடுத்து
" இன்று போய் நாளை வா " யென
வாய்ப்பளித்த
மகோன்னதத் தோல்வியல்லவா ...
முயல் வேட்டையில்
கிடைக்கும்
வெற்றியின் முனகலை விட
யானை வேட்டையில்
கிடைக்கும்
தோல்வியின் பிளிறல்
பேரின்பமல்லவா .....
குனிந்து கொட்டிடும்
குறைகளேதுமளிக்காது
எம்பிக் கொட்டிடும்
எதிரிகள் கொடு ...
எனக்கு என் எதிரி
என்னிலும் ஒரு படி மேலென்பது
எத்தனை ஆனந்தம் ...
வேறெவரும்
நெருங்கத் தயங்கும்
தோல்வியை எனக்களிக்கும்
மிகச் சிறந்த எதிரிகளை
நானே சுயமாய் தேர்ந்தெடுக்கும்
சுயம்வரம் வேண்டுமெனக்கு ...
வெற்றி கிளர்ச்சியானது ...
வெற்றி மமதையானது...
வெற்றி போதையானது ...
கர்வக் குழிபறித்து
குப்புறத்தள்ளும் வெற்றியை விட
மனித நரம்பில்
குதிரை பாரமிழுக்கும்ம்
தோல்வி வேண்டுமெனக்கு .

