நான்காவது படிக்கட்டில்
நியூட்டனோடு நீயும்
இருந்திருந்தால் மூன்றாம்
விதி இல்லாது
போயிருக்கலாம்...
நீ பார்த்துச் சிரிக்கும் போது
ஒன்றும் செய்ய இயலாது
போயிருந்த
என் எதிர்வினைகளைப் போல....
பிதாகொரஸ் தேற்றம்
ஞாபகத்தில் இல்லை....
மறக்கவே முடிவதில்லை...நீ
பிதாகொரஸ் தேற்றம்
சொன்னது....
மியூஸேசி... ஆஸ்ட்ரேசி..
என பூக்களின்
குடும்பத்தில் உன் பெயர்
ஏன் விடுபட்டது...?
இருகை வேழத்து...
இல்பொருள் உவமைக்கான
எ.கா சொல்லியிருக்க..
எனக்குத் தோன்றியது..
பூக்களின் நடுவில்
பூந்தோட்டம்...
நீ பிடித்திருந்த
சோதனைக் குழாயில்
உப்புக் கரைசல்
சர்க்கரைக் கரைசலாகி
விட்டிருந்தது...
உணவு இடைவேளைக்கு
மூன்று நிமிடம் முன்னால்
இரண்டாம் மூன்றாம்
சமுத்திர குப்தன்கள்
போர்க்களத்தில் நிற்க...
நான் .... உனக்குப் பின்னால்
ப்ருத்விராஜனாகி இருந்தேன்....