சென்றது மீளாது இனி

#சென்றது மீளாது இனி ..!

கடவுளிடம் கேட்டாலும்
கைவருமா மீண்டுமே
படைகூட்டி அழைத்தாலும்
பார்க்காது காலமே..!
கடந்துவிட்ட நாட்களையே
காசுபணம் மீட்குமா
கடைத்தெருவில் கேட்டாலும் காசுக்கது கிடைக்குமா..?

விரல்களுக்குள் சிறைப்பிடிக்க
வேந்தர்களால் ஆகுமா
வேண்டிவேண்டி அழைத்தாலும் வினாடியும் திரும்புமா..?
அரசனாண்டி யாவர்க்கும்
காலமது பொதுவில்தான்
ஆண்டுவிட இயலாது
அடம்பிடித்து ஓடுந்தான்..!

வியர்வைசிந்தும் காலம்யாவும்
வெற்றிக்கொடி நாட்டுந்தான்
வீணராகத் திரிபவர்க்கு
வேதனையைக் கூட்டுந்தான்..!
உயிருக்கு ஈடாகும் உன்னதமாய்க் காலந்தான்
உணர்ந்துநாளும் நடப்பவர்க்கு உயர்வுமேலும் மேலுந்தான்..!

எதிர்காலம் சிறந்திருக்க
இன்றுஉழைக்க வேண்டுமே
ஈட்டும்பணம் சிறிதெடுத்து
சேர்த்துவைக்க நன்மையே
முதுமைவந்து சேரும்போது உறவொதுக்கக் கூடுமே
பதவிப்பணம் இருக்கப்பா
சாங்குக்கூட்டம் நாடுமே..!

துன்பந்தந்த காலங்களைத்
தோள்சுமக்க வலிகள்தான்
தூரவெறிந்து நடந்துபாரு
தொடருமின்ப மினியதாய்
வன்மமகற்றி வாழ்ந்துபாரு
வாழ்வுமிளிரு மழகுதான்..
இனியகாலம் நிகழ்காலம்
எனப்பழகு மகிழ்வுதான்..!

மாண்டுவிட்டக் காலமெண்ணி
மயங்கிநிற்றல் தொலைத்துப்பார்
மக்கிப்போன நாள்மறந்து
வாசநிகழ்வில் வாழ்ந்துபார்
ஆண்டுகடந்தும் வசந்தம்வருடும்
அகில்மணக்கும் வாழ்வுதான்
ஆகாயத்தை மண்ணிறக்கும் அந்தக்காலம் அருமைதான்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (26-Dec-24, 11:10 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 27

மேலே