சுடு சோறு

அளவறியா அலுவல் வேலை,
அசதியில் வீடடைந்தேன்.

கை கால் முகம் கழுவி,
சொகுசு சோபாவில்
சோர்ந்தமர்நதேன்.

புத்துணர்ச்சி பெற்றிட,
முகப்புத்தகம் திறந்தேன்.

புகைப்படங்களோ புகைப்படங்கள்....!
மஞ்சள் நிற முள்ளங்கி சாம்பார்,
உதட்டை தூக்கியும்,
இறக்கியபடி செல்பிகள்,
செல்லப் பிராணிகள்,
விரைத்த புஜங்கள்,
பயந்து விழிக்கும் குழந்தைகள்
என அனைத்துக்கும் லைக்குள் இட்டேன்.

அடுத்து நண்பர்களின் நிலவரம்...!
சினிமா சென்றவன்,
ஹோட்டல் அடைந்தவன்,
காரில் இருப்பவன்,
காறித் துப்பியவனென்று,
அனைத்து அம்சங்களையும்
கண்டு ஆனந்தப்பட்டு,
ஆத்திரப்பட்டு,
ஏக்கப்பாடு,
எரிச்சல்பட்டு,
முகச் சுளிப்போடு
முகப்புதக்கத்தை மூடிவிட்டு.

கமலகாசனும், தோனியும்
இன்று என்ன செய்தார்களென்று
எட்டிப் பார்த்துவிட்டு.

ஆன்மீக சிந்தனைகளை,
அசை போட்டு விழுங்க முடியாமல்,
விழுங்கி விட்டு.

ஆயுள் முழுதும்,
அலுவலகத்தில் அசையா இடத்தை பெற்றுவிட,
முழுத் தேங்காயை உண்ண விரும்பி,
உருட்டி திரியும் நாயைப் போல,

வலைதளத்தில் கண்டதை எல்லாம்,
படித்து புரிந்துவிட்டதாய்
நம்பிவிட்டு நிமிர்ந்தால்?
முதுகுத் தண்டில் சுளீர் என்றது.

வலி மறக்க,
தொலைக்காட்சி திறந்தேன்.

பாடலில் ஆரம்பித்து,
விவாதமேடை அடைந்து,
வீதிச் சண்டை பார்த்து,
நகைச்சுவை ரசித்து,
சமையல் நிகழ்ச்சி ருசித்து,
நாடகங்களை திட்டுவிட்டு,
ஐபிஎல் லில் கொஞ்சம் ஆர்பரித்து,
சில்மிசக் கேள்விகளில் சிக்காமல்,
செய்திகளில் வந்து நின்றேன்.

அதுவும் அலுத்துப் போகவே,
உண்ண முடிவெடுத்து,
உணவு கேட்டேன்.

சாதமும், மிளகு ரசமும்,
மொரு மொரு பாவற்காய் சிப்ஸும்
தட்டில் வந்தது.

பார்த்தவுடன் பசி பற்றிக்கொள்ளவே,
பாய்ந்து விட முடிவு செய்து,
சோற்றில் கை வைத்தேன்.

கொதி (சூடு) குறையாத சோறு,
கையை பொசுக்கி விட
ஆ! என்று அலறியபடி நிமிர்ந்தால்!

தொலைகாட்சியில் ஒரு
பஞ்சாபி விவசாயி,
நாக்கு தள்ளியபடி,
மரமொன்றில் தூக்கில்
தொங்கிக் கொண்டிருக்கிறான்.......!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (24-Apr-15, 12:07 am)
Tanglish : sudu soru
பார்வை : 245

மேலே