வெளிச்சத்தினுடையவன்
இவ்வுலகில்
இதுவரையெது சொந்தமென
எங்கும் தேடிக்களைத்தேன்
"என் நிழல் "
எனக்குச் சொந்தமோவென
என் மனம் நினைக்க ...
என் நண்பன் சரவ்
நிழலை ...நீ
வெளிச்சத்தினுடையவன்
என்றான் புரிதலால் ...
என்னுள் குழம்பி
எங்கும் நான் தேட
என் முன்னால்
என் பின்னால்
எனைச்சுற்றி
எப்போதுமிருந்தான்
இரவு பொழுதுகளில் மட்டும்
இல்லாது போனான் ஏனோ ....?
இதயம் தேட ...
எனக்குள்ளேயோ
எனக்குவெளியிலோ
எங்கேயோ மறைந்து
பகலில் மறவாது
பளிச்சிட்டான் ...
மேகக்கூட்டத்தின்
உருவங்கள் தரும்
உயிர்ச் சித்திரங்களாய்
உலவுகிறான் ...
என் பின்னால் எப்போதும்
என் மனவோட்டத்தைப்போல்
ஆனாலும்
என் நிழலே
எல்லாப் பொழுதிலும்
எனக்குச் சொந்தமில்லையெனில்
நான் ...
யாருக்குச் சொந்தம்....?
உயிர் பிரிந்தால்
உடன் வர ...
யாருமில்லையிங்கு ...
ஆணவத்தின் உச்சிஏறி
ஆங்கார முகம்பூண்டு
ஆடியது போதும் ...
அடங்கும்முன்
ஆன்மாவை உணர்
அடங்கியபின்னும்
அர்ப்பணிப்பு செய்
உடல் உறுப்புகளை பல
உயிர்கள் வாழ ...!
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்