வட்ட கிணறு

வட்ட கிணறு.

வயகாட்டு நடுவில
நெடுங்குளத்து பூசாரி
நீர கண்டு குறி சொல்ல .....

ஊர்கூடி தோண்டிய
வட்டகிணறு ....
ஊசாடி மகன்
உசிர் விட்ட கிணறு ....

உழுவை மீனு
நழுவி போக ...
தூண்டியில
கோமணம்தான் மாட்டிபோக
என்னை பார்த்து சிரித்த கிணறு ..

காளி கோயில் கரகம்
வந்து கரைச்ச கிணறு
மேலதெரு மருதாயி
மஞ்சள் அரைச்ச கிணறு ..

நிதம் தோறும் நாங்க
குளிச்ச கிணறு
சலிச்சு புளிச்சு
வந்து பலர் கண்ணீர்
கலந்த கிணறு ...

மூச்ச அடக்கி
தரைய தொட்டு வர
போன கீதாரி
மூச்ச விட்ட கிணறு ....

பேய் இருக்கும் என்று
பேசிகிட்டே பயந்து
பயந்து குளிச்ச கிணறு ....

பொழுது போனா யாரும்
தேடாத கிணறு
பொடுகின்னு ஒத்தையில
உக்காந்து இருக்கும் கிணறு

உழவு தரை எல்லாம்
பிளவா போனாலும்
ஊத்து வத்தாத கிணறு

ஓங்கி அடிச்சு அடிச்சு
துவைச்சாலும்
கத்தாத கிணறு ...

என் வயதுக்கு முன்னாலே
பிறந்தும்
நீ இன்னும் இளமை கிணறு ....

தவக்களையும் தட்டானும்
ஒன்னா பேசும் கிணறு
பச்சை பச்சையா
பாசம் புடிச்ச கிணறு ....

பாவி பய மனுஷன்
என்ன உன் வாயிலும்
மண்ணள்ளி போட்டனா ?
மோசம் போனியா?
வட்ட கிணறு

எழுதியவர் : கவிஞர் செந்தூர் பாண்டியன (25-Apr-15, 8:31 am)
பார்வை : 371

மேலே