விருத்தமும் வருத்தமும் - கே-எஸ்-கலை

வாடிக் கிடக்குது தாய்நாடு – பல
வாதைகள் செழித்திடும் இங்கே – மனம்
ஆடித் திரியுது பேயாய் – பெரும்
ஆழிக் கடலினைப் போலே ! – நாம்
தேடித் துடிப்பது அன்னம் – நம்
தேவையை அறிந்திடா அரசு – தினம்
வேடிக்கைச் செய்வது கண்டு – கடுங்
கோபத்தில் வெடிக்குது மனசு!

அலறும் குழந்தைகள் கண்டு – எம்
அகிலம் கருகுது காண்பீர் – தினம்
புலரும் புலருமென எண்ணி – எம்
புலனும் சோர்ந்தது காண்பீர்- தினம்
மலரும் முகம்கொண்டு வந்து – எம்
மக்களின் வாக்கினில் வென்றீர் – தினம்
அலரும் வறுமைத்தீ போக்கி – எம்
உதரத்தின் உயிர்ப்பிணித் தீர்ப்பீர் !

வாக்குகள் வாங்கிட மட்டும் - இங்கு
வாசலில் பெருகிடும் கூட்டம் – எங்கள்
நாக்குகள் காய்ந்திடும் போது – தம்
வார்த்தையை மாற்றிடும் கோலம் – இப்
போக்குகள் மாறிட வேண்டும் – இல்லை
புண்பட்ட மக்களின் வாழ்க்கை – புறம்
போக்கென ஆவது திண்ணம் – அதைப்
பொறுத்திட லாகாதுநன் மக்காள் !

கட்சிகள் ஆயிரம் உண்டு – அங்கு
களவுகள் லட்சமாய் கண்டு – பின்
பட்சிகள் போல்மனம் கொண்டு – அவர்
பாதியில் பறப்பதும் உண்டு ! – எம்
அட்சியில் வடிந்திடும் ரத்தம் – அதை
அணைத்திட ஆளில்லை இங்கு – எமை
ரட்சிக்க ஓருயிர் வேண்டும் – இல்லை
ரணத்துடன் மரணிக்கும் வாழ்வு!

எழுதியவர் : கே.எஸ்.கலை (25-Apr-15, 10:02 am)
பார்வை : 170

மேலே