அவளொரு தொடர்கதை

சமையலறையில் கருகிப்போகிறாள்..
படுக்கையறையில் வியர்த்துப்போகிறாள்…
கம்பிகளற்ற சிறைச்சாலையில்,
சீருடை அணியா ஆயுள் கைதியவள்…

சுவர்களுக்கும் செவியிருந்தால்,
அவள் அழுகுரல் கேட்டு விழித்திருக்கும்
சுவர்களும் கற்றுக்கொண்டதோ…!
ஆணாதிக்கத்தை…..

இந்தச்சுவர்.
அவள் வாய்விட்டு அழும் போது கூட
காதடைத்து தான் இருந்தது
இந்த ஆண்களைப் போலவே....

அதிகமாய்ப் பேசாமலும்
அளவாய்ப் பேசாமலும்
அவளுக்குள்ளேயே பேசிக்கொள்கிறாள்
அவள் கதைகளை.....!

அவள் கனவுகளெல்லாம் அடுப்பங்கரையில்
தொடங்குவதாளென்னவோ ...
அங்கேயே,அதுவும் எரிந்து சாம்பலாகிவிடுகின்றது.....!

தேவைக்கு மட்டுமே தேவைப்படுவதால்
தேவையற்ற நேரங்களில்
அவள் தேவையற்றுப் போகிறாள்
இந்த இதயமற்ற ஆண்களுக்கு….....

அவள் வலிகளை சொல்லப்போனால்
மொழிகளில் பற்றாக்குறை...
ஒன்றா,இரண்டா மொழிகளும்.வலிகளும்

பண்டிகைக் காலமாயினும்,
கோடைக் காலமாயினும்
விடுமுறையில்லா வேலைக்காரியாகிறாள்,,,,
உறக்கத்திலும் உளறிக்கொண்டிருக்கின்றாள்,,,,
நாளைய சமையல் குறிப்புகளை...

அவள் வீட்டில் இல்லையென்றால்
வீடே குப்பைத் தொட்டியாகும்....
அவள் நாட்டில் இல்லையென்றால்
நாடே சவப்பெட்டியாகும்.....

இவள் நாக்கு,
பேசுகிறதோ தவிர
நீதி கேட்கவில்லை
வீட்டுக்கு அடங்கிப்போவதாய் நினைத்து
வாழ்நாள் வரை முடங்கிப்போகிறாள்
இவளுக்கு ஓய்வென்பது
இவளின் இதயம் ஓய்வெடுக்கும்போது மட்டும் தான்

எழுதியவர் : அகத்தியா (30-Apr-15, 3:29 am)
பார்வை : 82

மேலே