கொக்கொகோ கோஓஓ - ஒரு பக்க வித்தியாச நகைச்சுவை சிறுகதை

“பறவைகளுக்கு அதன் உரிமையைக் கொடு” என்ற ஸ்லோகனோடு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ப்ளூ க்ராஸ் அமைப்பு ஒரு சேவல் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சேவலையோ கோழியையோ பார்க்கிறவர்கள் அதை ஒரு சாப்பாட்டுப் பொருளாக பாவிக்கிறார்களே ஒழிய அந்தப் பறவைகளும் நம்மைப் போலவே உயிரும் உணர்வும் நிரம்பிய படைப்புகள் என்பதை ஏனோ மறந்து போகிறார்கள். ஊர் உலகத்துக்கு “சிக்கன் பிரியர்கள்” இருப்பதைப் போலவே சேவல் பிரியர்களும் உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சேவல் வாக், சேவல் பந்தயம், திருவாளர் சென்னை, திருவளர் சென்னை - கோழியழகிப் போட்டி, சேவல் கலந்துரையாடல், சேவல் விற்பனை போன்ற நிகழ்ச்சிகள் அதில் இடம் பெற்றன. கலந்து கொள்ள விரும்பும் சேவல்கள் தங்கள் ஓனர்களோடு காலையிலேயே வந்து விட வேண்டும். பார்வையாளர்களும் வரலாம்.....

நானும் என் கணவரும் எங்கள் சேவல் மகன் கோபால கிருஷ்ணனோடும் அவன் ஜோடி ஶ்ரீவித்யாவோடும் புறப்பட்டோம். என் மகள் (மனித மகள்!) பூரணி கோபால கிருஷ்ணனை விட ஒன்றரை வயது இளையவள். அப்போது அவள் தம்பி கணேஷ் பிறந்திருக்கவில்லை. பூரணி கோபால கிருஷ்ணனை “போ (Bho) அண்ணன்” என்று தான் அழைப்பாள் !

நாங்கள்தான் பறவை விலங்கு என்று மருகி ஊரார் வாயில் விழுகிறோம் என்றால் எங்களைப் போலவே நிறைய “பைத்தியங்கள்” தங்கள் செல்லங்களோடு வந்திருந்தார்கள்.

பொதுவாக சேவல்கள் மனிதர்களை மிரட்சியோடு பார்க்கும்; மனிதர்கள் கை பட்டாலே மரண ஓலமிடும் சேவல்களும் உண்டு.

ஆனால் அன்று வந்திருந்த பறவைகளின் கண்கள் பயமின்றி ஒளியுடன் பிரகாசித்தன. மனிதர்களின் கையிலும் தோளிலும் கவலைப்படாமல் ராஜ்ஜியம் நடத்தும் சேவல்களிடம் இயல்பாகவே ஒரு நாகரிகமும் தோழமைத்தனமும் இருந்தன. உதாரணமாக எங்கள் சேவல் காரில் போகும்போது கழியாது. ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலை பாயும். வெளியில் விட்டால் அதன் வேலையை முடித்துக் கொண்டு உள்ளே வரும்.

பறவைகளை எடுத்துச் செல்ல கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நான் ஒரு கூண்டில் செய்தித்தாள் விரித்து ஶ்ரீவித்யாவை விட்டேன். அவள் ரெக்கை கோத ஆரம்பித்தாள். “போ ராஜா” அவன் அப்பாவின் கையில் உட்கார்ந்தான்.

காலை ஒன்பது மணிக்கு சேவல் பந்தயம்...

இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான் போட்டி நடக்கும். இங்கும் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உண்டு. ஒரு வயதுக்குட்பட்ட சேவல்கள்தான் போட்டியில் பங்கேற்க வேண்டும். (என் பையனுக்கு அப்போது நான்கு வயது.) பங்கேற்கும் சேவல்களுக்கு கண்டிப்பாக ஒரு பெயர் வைத்திருக்க வேண்டும்...! முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் வெற்றி பெறும் சேவல்களுக்கு முறையே ஆயிரம், எழுநூற்றி ஐம்பது, ஐந்நூறு ரூபாய் பரிசுகள் உண்டு.

நாங்கள் குடும்பத்துடன் பார்வையாளர்களாக உட்கார்ந்து கொண்டோம்.

ப்ளூ கிராஸ் மெம்பர்கள் தவிர எங்களைப் போலவே சேவல், கோழி பூனை, நாய், லவ் பேர்ட்ஸ் என்று கதம்பமாக வளர்த்து வருபவர்கள் வந்திருந்தனர். நாற்பத்தேழு நாய் வைத்து பராமரித்து வரும், நாய்களுக்காக திருமணத்தை தவிர்த்த அமுதா வந்திருந்தார். பால் வற்றிய பசுக்களையும் ஓய்ந்து போன எருதுகளையும் கோசாலை வைத்து காப்பாற்றிக் கொண்டிருந்த முருகதாஸ் காணப்பட்டார். ஒரு வனவிலங்கு போட்டோகிராபரும் வந்திருந்தார்.

போட்டி துவங்கியது.

“ உய்யோ உய்...ய்ய்ய்.....! ”

மனுசப்பயல்கள் விசிலடிக்க, ரெக்கைப்பயல்கள் “ கொக்கோ கொய்....ய்ய்ய்ய்ய்... ! ” என்றன.

சேவல் சண்டைக்கு சிடி பிளேயர் வைத்துப் பாட்டு...!

“ முக்காமுழம் போட்டே மருக்கொழுந்து... கப்புன்னு மாட்டிப் பிடிச்சு...பிஸ்தா சும்மா கீரா..! சோமாறி ஜமாய்க்கிறாயா...! டம்மாலே..டம்மா டம்மா டம்மாலே...! டங்கு ணக்கர டேடே..! டணக்கு ணக்கர டேடே..! டங்கு ணக்கர டணக்கு ணக்கர டே டே டே டே டே.... !”

இதுகளுக்கு ரன்னிங் கமெண்ட்ரியும் உண்டு...!

“ திருவாளர் முல்லையும் திருவாளர் பப்புவும் ஏற இறங்கப் பார்க்கின்றனர்.. ! இப்போது சுற்றி வருகின்றனர்.. ! கழுத்தை சிலிர்த்துக் கொள்கின்றனர்... ! தாவப் போகின்றனர்.. ! தாவப் போகின்றனர்! எந்த நிமிடத்திலும் தாவலாம்...! ஹலோ, டைம் முடியப் போகுதுங்க...! முல்லை இரண்டடி பின்னால் நடக்க, பப்பு முன்னால் வருகிறார்.. ! தாவப் போகிறார்..! ஊஹூம்.. ! ” என்கிற பாவலா சண்டைகளும்...


“ அய்யோ, யார் எங்கேன்னே தெரியலியே, முழுக்கப் புழுதி, நாலாப்பக்கமும் ரெக்கை, அடடா, மிஸ்டர் சடையாண்டி மல்லாந்து கிடக்கிறார்... ! ! ஒண்ணும் ஆகலியே? சடையாண்டி ஒரே எம்பு எம்புகிறார். யப்பா ! ! கட்டி புரண்டு உருள்றாங்க..... ! ! மிஸ்டர் கருப்பு ஜெயிக்கிறார்.... ! ! ! ” போன்ற கொத்து மாய்க்கான்களின் அனல் பறக்கும் நிஜச் சண்டைகளும் அரங்கேறின.

ஆனால் யாருக்கும் சீரியஸான காயமில்லை. சில பார்வையாளப் பசங்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்கள் ஓனர்களோடு மல்லுக்கு நின்றன.

இன்னொரு பக்கம் மருத்துவ முகாம் போய்க் கொண்டிருந்தது. ராணிக்கட் தடுப்பூசியும் விட்டமின் ஊசிகளும் போடப்பட்டன.

எங்களுக்கு டீயும் பிஸ்கட்டும் வந்தது. ஶ்ரீவித்யா ஒரு தேநீர் பைத்தியம். பாதி கப் டீயை காலி செய்தாள். அடுத்து நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை போட்டு ஊற வைத்த சோளம் வந்தது நமக்கில்லைங்காணும்....!

சோளத்தைக் கண்டதும் நிறைய பேர் “உச்சு உச்சு உச்சு” சத்தம் கொடுத்து இனத்துடன் சாப்பிட்டனர்.

காலை பதினோரு மணிக்கு வானம் லேசாக மேக மூட்டம் போட்டது. ஒரு பயல் ரெக்கையடித்து கொக்கொ கோவினான். அடுத்தடுத்து அத்தனை பேருக்கும் வந்து விட்டது வாய் நிறைய கொக்கொ கோ. முக்கால் மணி நேரம் வெளுத்துக் கட்டினர் நான்- ஸ்டாப் கொக்கொ கோயன்கள் ! ! ! !

ஒருத்தர் கொக்கொகோவில் எத்தனை வகையுண்டு என்று சொன்னார்.

“ காலங்காத்தால சூரியனை வரவேற்கோனும். நெஞ்சு நிறைய காத்தை ரொப்பிகிட்டு ரக்கைய படபடன்னு அடிச்சிகிட்டு, உசரமான இடத்துல நின்னு எட்டூரு கேக்க கூவோனும். இல்லாட்டி விடியாதுல்லா? அடுத்து பெட்டைய கவர் பண்ண கூவுறது. ராகமா அதுக்கு மாத்திரம் கேக்கற மாதிரி கூவுக, கொக்கக கோஓஒ ன்னு. விருந்தாளியோ, நாயோ வந்துட்டா விரட்டிட்டு கூவுறது இன்னொரு வகை. கொக்க கொக்க..கொக கோ கோ. கூவிகிட்டே தரையிலேர்ந்து எழும்புங்க. சாயந்தரம் பெண்டு புள்ளைய கூடடைய வைக்கிறதுக்கு. ஒரு தெரு கேக்கற அளவு நீளக் கூவல், அப்பறம் மெல்..ல்..லிசா கொக்கரிப்பு, பெறகால நீளக் கூவல். கொக்..கொக்...கொக்க கோ. கொக்..கொக் கொககோ- இப்படி போகும். வீரமான பயலுவ. என்னைப் பொருத்த வரைக்கும் சேவலை வெட்றதும் ஒண்ணு, தலைப்புள்ளய வெட்றதும் ஒண்ணு. ”

இன்னொருத்தர் சந்தேகம் எழுப்பினார்.

“ ஏன் சார், க்ரீட்டிங் கொக்கொகோ- (அதாவது சூரியனை வரவேற்கக் கூவுவது)- உயரமான இடத்துல நின்னுதான் கூவணுமா?”

“ அப்படித்தான் இந்திய அரசியல் சாசனம் சொல்லுது.(?????) ஏன் அதுக்கென்ன? ”

“ ஒண்ணுமில்ல, எங்க வீட்டுல உயரமான இடம் டிவி வைக்கிற டீப்பாய்தான். இந்தப் பயல் அதுல ஏறி நின்னுடறான். அங்கிருந்து பார்த்தா சீலிங் ஃபேன் உயரமாத் தெரியுது. அதும் மேல தாவிடறான். சில சமயம் பிளேடு வழுக்கிடுது. இதனால எங்க மிஸஸ் சீலிங் ஃபேன் பிளேடுக்கு பின்புறம் தெர்மோகோல் ஒட்டி வைக்க வேண்டியதா இருக்கு...! ”

“ ஐயையோ, ஓடிட்டிருக்கும் போது தாவுறானா? ”

“ ஓடிட்டிருக்கும் போது பிளேடு தெரியாதில்லையா? ஓடாத போதுதான் தாவுறான்... ”

“ சரி, சரி,..... பத்திரமா பார்த்துகோங்க.. ! என்ன பண்றது? காலம் மாறிடுச்சில்ல? முன்ன கழுகு காக்கையப் பார்த்தா “ஃபிர்ர்ர்ரு”ன்னு ஒரு சத்தம் கொடுப்பாய்ங்க. ! இப்ப தாறுமாறா வர்ற மோட்டார் வண்டிகளைப் பார்த்தும் தண்ணி லாரிகளப் பார்த்தும் சத்தம் கொடுக்குதுங்க.. ! நாம எச்சரிக்கையா இருக்க வசதியா இருக்கு ! அதுகளும் அப்டேட்டா ஆயிடுதுங்க..! ”

இது இன்னொரு உரையாடல்:

“ உங்க பயலுக்கு கால் நல்ல பலம்... ! ”

“ ஆமாங்க, குப்பை மேட்டுக் குப்பையை ரெண்டு கிண்டு கிண்டி நடு வாசலுக்குக் கொண்டு வந்துடுவான். அங்கிருந்து படபடாக்குன்னு ரெக்கையடிப்பான். குப்பை வீட்டுக்கு வந்திடும்! தெரு “ஸ்வஸ்த பாரத்” ஆயிடும்! அவங்கம்மா நீ சேவலா, ஏவலான்னு கத்துவாங்க ! இல்லடா?? ” அப்பாவும் பையனும் மூக்கோடு மூக்கு உரசிக் கொண்டனர் - இதெல்லாம் “எங்களுக்கு சகஜம்” என்பது போல்...!

“ அடடா, நீங்க ஸ்டிக்கர் பொட்டு வச்சிருந்தா அவளைத் தூக்காதீங்க ! அவ ஒரு ஸ்டிக்கர் பொட்டு முழுங்காயினி ! நெற்றிப் பொட்டை நேக்கா முழுங்கிடுவா... ! ”

“ எங்க வீட்டுக்காரருக்கு ஆரம்பத்துல இவங்களை வளர்க்கிறது பிடிக்கலை. அவரு கையெல்லாம் நிறைய மரு மருவா இருக்கும். கோழி எச்சத்தை சுத்தம் பண்ண ஆரம்பிச்சதும் மரு போயிடுச்சு. அதுலேர்ந்து அவரு மாறிட்டாரு ! பசங்களும் அவர் மேல பிரியமா இருக்காங்க. கூடு அடையலேன்னா அவர் பைக் சத்தம் கேட்ட அடுத்த நிமிஷம் எங்கிருந்தாலும் ஓடி வந்துடுவாங்க. ரெக்கையை தழைச்சிகிட்டு “ சைங்..சைங்..” பண்ணுவாங்க....! ”

“ ஓ ! இரண்டாம் பரிசு வாங்கினவர் வரார் ! பேர் என்னங்க? ”

“ பொற்குடத்தான் ! இவன் தம்பி பேர் குக்குடத்தான் ! ”

“ அவர் எங்கே? ”

“ அவனோட தாத்தா கூட வெத்தலை வாங்கப் போயிருக்கான்... ! குக்குடத்தான் ஒரு குளியல் பேர்வழி. எல்லாத்துலயும் குளிச்சுடுவான்- மண்ணுல, துணியில, கோதுமை மாவுல, காபியில- மொபைல் போனுங்களை கழட்டிப் போட்டு வச்சிருப்பேன்- அதுலயும் குளிச்சிடுவான். இவன் ரெக்கைக்குள்ள சிம் கார்டு தேட வேண்டியிருக்கும்.... ! ”

“ பொதுவா ரெக்கையில செல்லுங்கதான் இருக்கும்; இங்க சிம் கார்டே இருக்குதா?? பேஷ் ! ! ! ”

எல்லா சேவல்களும் படல் அமைத்த நீண்ட குகை வாயில் போய் வெளி வந்தன. அதுதான் சேவல் வாக். வெடுக் வெடுக் என்று தலை திருப்பி கம்பீரமாக மிலிட்டிரி ஸ்டெப் போட்டு வரும் போது சேவலைப் பாருங்கள். ரெக்கையில் செருகிய ஏகே ஃபாட்டி செவன் தெரியும்...!

அழகன் அழகிப் போட்டியில் எல்லோருமே அழகு என்று தீர்ப்பளித்தனர். ஒரு கருப்பு சேவலை கொஞ்சிய பெண்மணி, “ நீ முட்டையிலிருக்கும் போது உங்கம்மா நிறைய குங்குமப்பூ சாப்பிட்டாளா? என்று கேட்டார்.

வந்திருந்த எல்லா கோழிகளுக்கும் சேவல்களுக்கும் தலா ஒரு எவர் சில்வர் கிண்ணமும் தட்டும் கிடைத்தன.

வீடு கிளம்பும்போது மைதானத்தைப் பார்த்தேன். பறவைகளின் இறகுகளும், அதன் எச்ச வாடையும், சிதறிய தானியங்களும்...! கூடவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகிற பெருமக்களின் காலடிச் சுவடுகளும்....!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (2-May-15, 12:35 pm)
பார்வை : 1533

மேலே