இளையோரே புரிந்திடுக இன்பம்பெற
விரிந்திட்ட கடலும்
பரந்திட்ட பூமியும்
பாரினில் சொந்தமே எவருக்கும் .....
பொழிந்திடும் மழையும்
வீசிடும் காற்றும்
உலகோர்க்கு உறவே என்றும் .....
இயற்கையே இவ்வுலகில்
இருப்போர்க்கு சொந்தமெனில்
பிரித்திடும் சாதிமதம் நமக்கேன் ....
இருந்திட்ட இனமொழி உணர்வும்
இறந்திட்டப் பின்னாலே ஏனோ
இருந்திடும் உயிரும் நமக்கேன் ....
சுயநலமே கொள்கையெனில்
சுற்றிடும் பூமியில்தான்
பொதுநல வேடமும் ஏனிங்கு ....
பிரித்தாளும் சூழ்ச்சிதான்
பிழைப்புக்கு வழியென்றால்
பிளவுபடுத்தும் அரசியலும் ஏன் ...
பிறந்திட்ட எவருக்கும் புவியில்
இறப்பு என்பது உறுதியானதால்
சிந்திக்காமல் செயல்படுவது ஏனோ ....
வருவதோ உலகிற்கு ஏதுமறியாமல்
வாழ்வதோ பல்வேறு பிரிவுகளாய்
வாதமும் பேதமும் நமக்குள்ஏன் ....
இருப்போர் இல்லார் என்பதாய்
இருவகை இருக்கும் இவ்வுலகில்
இருகூறாய் ஆனதும் நாம்தானே ...
உதவிடும் உள்ளங்கள் குறைகிறது
உள்ளவரை ஏய்ப்போர் பெருகுகிறது
உண்மை நிலையும் இதுதானே ....
மாறட்டும் மண்ணிலே இந்நிலை
வாழட்டும் மக்களும் சமநிலையில்
தழைக்கட்டும் மனிதமும் இங்கே ....
வழிதனை முன்மொழிக மூத்தோரே
வளர்ந்தோரே வழிமொழிக வாழ்ந்திட
இளையோரே புரிந்திடுக இன்பம்பெற !
பழனி குமார்