மஞ்சிப்புல் வாசம்
எங்கள் வீடு!
மண்குழைத்த சுவரு
மஞ்சிப்புல் கூரை!
சாணம் தோய்த்தத் தரை
கதையளக்க ரெட்டைத்திண்ணை!
திண்ணையிலும் வீட்டிலும்
மொத்தமாக மூன்று குதிர்!
தானியங்கள் தீர்ந்தபோக
கண்ணாமூச்சி கிணறாகும்!
அடுக்குப்பானை ஐந்து வரிசை
அத்தனையும் காய்ந்திருக்கும்
எங்கள் வயிற்றுக்கு துணையாக!
பேருக்கு பரண் இருக்கும்
அதில் நாளுசுள்ளி விறகிருக்கும்!
தெக்கத்தி மூளையிலே
ரெட்ட அடுப்பு ஒண்ணிருக்கும்
எப்போதாவது விறகெரியும்
மத்தநேரம் எல்லாமே
பூனை தூங்க மெத்தையாகும்!
வீட்டைச்சுற்றி வேலிமரம்
திருடுபோக ஏதுமில்ல!
ஒற்றைத்தூரல் விழுந்தாலும்
ஒண்டிக்கொள்ள இடமில்ல
அத்தனையும் ஓட்டையாகும்!
நிலாகாயும் நேரமெல்லாம்
மல்லாக்க படுத்திருந்து
விண்மீன ஒவ்வொண்ணா
விரல்விட்டு எண்ணிடுவோம்!
பட்டபடிப்பு படிச்சி வந்தா
மாடிவீடு கட்டாலும்னு
ஒண்டிக்கிடந்த ஒத்தகுடிசை
அடமானம் போயிருச்சு!
பட்டபடிப்பு முடிஞ்சிபோச்சி
ஒத்த குடிசை மூழ்கிப்போச்சு!
வேலைதேடி ஓய்ஞ்சுபோச்சு
வேதனையே ஏக்கமாச்சு!