மெய்பொருள் காண்பேன்

உடுத்திய இந்த உடையோடிங் கேநான்
படுத்திட ஒர்பாயும் இன்றி –நடுத்தெரு
நிற்கும் நிலையில் நிலநடுக்க நாட்டிலென்போல்
உற்றோ ரிலையோ உனக்கு.
நேற்று வரையில் நிலையான டாம்பீக
காற்றடித்த வாழ்க்கை களைந்தின்று –ஊற்றெடுக்கும்
கண்ணீர் நதிமேல் கவலை படகோட்ட
உண்ண உணவற்று நாம்.
கோடி குவித்து குவலயம் ஆண்டவரும்
மாடி மனையிடிந்து மண்ணுக்குள் –மூடி
முடங்கி ஒருநொடியில் மூச்சடக்க வைத்த
இடத்தில் துணைநீ எனக்கு.
எதுவுமில்லா வாழ்வில் எனக்கோர் துணையாய்
புதுஉறவாய் வந்து கிடைத்தாய். –இதுபோதும்
கைத்தடி கொண்ட குருடனினா தாரமாய்
மெய்ப்பொருள் காண்பேன் இனி.
*மெய்யன் நடராஜ் =இலங்கை
நன்றி -வல்லமை படம்