இன்னும் இன்னும் எத்தனை
அம்மா அடிப்பாள் என
எதற்கோ அழுகிறது
கண்ணீரின்றி ஒரு குழந்தை...
சிக்கலின்றி
சூரியனை எதிர்க்கிறது
கையை கண்களுக்கு
குடையாக்கி நடக்கும் மூதாட்டி..
உதட்டை பக்கவாட்டில் தள்ளி
விரல்களின்றி நடத்துனரின் விசில்
கூட்டத்தை கிழித்துக்கொண்டு
ஓட்டுநரின் காதை அடைகிறது..
திருவிழா கூட்டத்தில்
பாவாடை தாவணியோடு
முறைப்பெண்கள் எனை சுற்றி
அடிக்கும் இரகளை..
வேகமாய் சென்று
பேருந்தை நிறுத்தியவன்
பின் வரும் அம்மாவை
மெதுவாய் வாம்மா என்கிறான்..
நெஞ்சில் அணைத்த புத்தகத்தோடு
ஒரு பெண் நடந்து வர
வீதி விளக்குகள்
விட்டு விட்டு அணைகின்றன..
இன்னும்
இன்னும்
எத்தனை..
தினமும்
உதிக்கும் சூரியனை
ஒவ்வொரு நாளும்
மேகங்ளோ
பறவைகளோ
கதிரை பிரித்தெழுதும்
மரங்களோ
புதிதாக்குகிறது..
மழை ஒவ்வொரு
மனிதருக்கும்
வெவ்வேறு திரைக்கதை
எழுதுகிறது...
கிட்டத்தட்ட
ஒரு கோடி
காதல் கவிதைகளில்
பிறந்திருக்கும் நிலா
இன்னும் குழந்தையாகவே..
தண்ணீர் மட்டும்
ஊற்றிச் சென்று
நான் ஒரு முறை
தொடவில்லை எனில்
அந்த வாரம் பூப்பதை
நிறுத்தும் என் வீட்டு
ரோஜா செடி..
இன்னும்
இன்னும்
எத்தனை..
இனி
எழுதக் கூடாதென்ற
என் முடிவை
முறித்துவிட்டுச் செல்கிறது..
--கனா காண்பவன்