அன்பென்றாலே அம்மா -Mano Red

தாய்ப்பாலுடன் சேர்த்து
தாய்ப்பாசத்தை
விற்பனைக்கு கொண்டு வரும்
விளம்பர உலகமிது..!!
அப்படியிருக்க
பத்து மாசம்
பார்த்து பார்த்து சுமந்தவளை,
பத்து விரல்களாலும்
பாதுகாக்க வேண்டும்..!!
அப்பாவின்
கோப வெயிலிலும்
பாச மழையிலும்
குடும்பத்திற்காக
குடை பிடித்தவள் அம்மா..!!
வயதில் பெரிதாய்
எதுவுமே இல்லை..!!
எத்தனை வயதானாலும்
குறையின்றி
கொஞ்சுபவள் அம்மா..!!
சேட்டை செய்யும் மகனுக்கு
சூடு வைத்து விட்டு,
வேண்டுமென்றே
வெறும் கையில்
சுடு தண்ணீரை தூக்குபவள் அம்மா ..!!
கடை கடையாய்
தேடி எடுத்த
பட்டுப் புடவையில்
மகனின் வியர்வை துடைத்து
பாசமாய் திட்டுபவள் அம்மா..!!
இந்த அம்மாக்கள்
கடுகு டப்பாவில் பணத்துடன்
பாசம் புதைப்பவர்கள்,
அஞ்சறை பெட்டியில்
அன்பு செய்பவர்கள்..!!
உங்களின்
பகுத்தறிவையும்
மேதாவித்தனத்தையும்
அவளிடம் காட்டாதீர்கள்..!!
அவள் அதற்கும் மேலானவள்..!!
அவள் நமக்காக
காத்திருந்தவள்,
காத்து இருப்பவள்,
காத்து இருக்க போகிறவள்..!!