படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - நாயகி

இலையுதிர் வலி சுமக்கும்
சிறு மரமொன்றின்
கொய்யாப் பூக்கள்
கிளை தாங்கும் -இவள்

நிறமிழந்த ஆடை
அணிகள் தாராத அவ்வழகு
குறுநகை மறந்திட்ட முகமதில்
கரு விழிகளின் தீர்க்கம்
கறையற்ற பளிங்கானவள்..

காற்றின் ஓசையைக் கிழித்து
மூங்கில் பிரசவிக்கும் விடி கானம்
மார் சுரக்கும் தாய்மையின்
மடி நிறைக்கும் மழலையாய்..

எந்த தேவனும்
காத்திருப்பின் இறுதி நொடியில்
வந்து விடுவானென்றால்
முக்தியும் மோட்சங்களும்
சாகக் கடவது இவள் அகராதியில்

நொடிகள் யுகங்களாய்
நீட்சியுற்ற திறவா நாட்களின்
ஏக்கங்கள் அமிழ்ந்த நெஞ்சினில்
உயிர் பெற்ற சாந்தம்

யாவும் தோற்ற மாயைகளான
தேசத்தின் நாயகி இவள்!!

எழுதியவர் : கார்த்திகா AK (10-May-15, 10:33 am)
பார்வை : 117

மேலே