கவிஞன்
கவிஞன்..
21 / 09 / 2025
கவிஞர்கள் என்றும் ஏமாளிகள்
வெறும் கற்பனையிலேயே
வாழ்ந்துமுடியும் பித்தர்கள்
மலரையும் மண்ணையும்
விண்ணையும் பெண்ணையும்
வியந்து வியந்து
புகழ்ந்து புகழ்ந்து
தமிழிலில் அர்ச்சனை செய்யும்
கையாலாகாத அர்ச்சகர்கள்.
வரும்படி கம்மிதான் - ஆனால்
வறட்டு கௌரவம்
எவரெஸ்ட் சிகரம்தான்.
ஒவ்வொரு சொல்லிலும்
வீரம் கொப்பளிக்கும்
மீசை துடிதுடிக்கும்
கண்களில் தீப்பொறி பறக்கும்.
நிஜத்தில் எல்லாம்
நீர்த்துப்போய் சிரிக்கும்.
கன்னியின் கண்களை
கண்டுவிட்டால் காதலூற்று
பொங்கி பிரவாகிக்கும்
நிஜத்தில் காதலுக்காக
ஒன்றும் செய்யமுடியாமல்
கைபிசைந்து நிற்கும்.
பாராட்டி பாராட்டி
பட்டயங்கள் பலநூறு
வாங்கி குவிக்கும்
சீராட்ட ஒன்றுமில்லாமல்
சீர்குலைந்து தடுமாறிநிற்கும்.
எத்தனை வந்தாலும்
எத்தனை போனாலும்
கவியே..
உனக்கு நிகர் நீதான்.
உன் எழுத்துக்கள்தான்
மொழியின் ஆணிவேர்.
தமிழின் உயிர்த்துடிப்பு.
உன் எழுத்துக்கள்தான்
நீ இறந்தாலும்
உன்னை உயிர்ப்போடு
வைத்திருக்கும்.
கவிஞன்..
உணர்வு மயமானவன்
குழந்தையானவன்.
சட்டென கோபப்படுவான்.
பட்டென அழுத்திடுவான்.
கைகொட்டிச் சிரித்திடுவான்.
காதலும் பாடுவான்.
காமமும் பாடுவான்.
தத்துவம் பேசுவான்.
போடா என்று
சலிப்பையும் காட்டுவான்.
இயற்கையை ரசிப்பான்.
இறையையும் போற்றுவான்.
தூக்கி எரிந்து
நாத்திகமும் போதிப்பான்.
ஒரு சோக இழை
ஒவ்வொரு பாடலிலும்
பின்னி இருக்கும்..
சோகத்தில் அவன் சொல்லும்
ஒவ்வொரு சொல்லும்
தத்துவத்தின் உச்சம்.
வாழ்வில் அடிவாங்கிய
அனுபவத்தின் எச்சம்.
பிறப்பொன்று இருக்கு
அவனுக்கு
இறப்பொன்று இல்லை
வாழ்ந்தவன்.
வாழ்ந்து கொண்டிருப்பவன்.
யுகம் தோறும்
அழியாமல் வாழ்பவன்.