விடியும் முன் தொடங்கும் இரவு

"அத்தை பால் வந்துடுச்சா"வில்
ஆரம்பமாகிறது காலை ஓட்டம்
பால் காய்த்து
ரொம்ப தண்ணியாட்டம் இருந்தா இவருக்கு பிடிக்காது
சர்க்கரை அதிகமாயிட்டா அவங்களுக்கு பிடிக்காது
இப்படியாக
எல்லோருக்கும்
பிடிக்கற மாதிரியாக
காபி போட்டுத் தந்துவிட்டு

"அத்த கொஞ்சம் வெங்காயம் மட்டும் உறிச்சி தரிங்களா"
கொஞ்சம் கொஞ்சம் வேலைகளை
கொஞ்சி கொஞ்சி வாங்கி
காலை இட்டிலியும்
மதியம் ரசம் வரையும் முடித்து

"பாப்பூ நேரமாச்சு"
இரண்டாம் முறை உலுக்கிய பிறகு
லேசாய் சிணுங்கும் மகளை தூக்கி
"எப்பவும் நீங்க தான் என்ன ரெடி பண்ணணும்"
செல்ல மகளின் அன்பு கட்டளையால்
உம்மா தந்து பள்ளிக்கு அனுப்பும் வரையும்
கூடவே இருந்து

"இருக்கறதே ஒருநாள், இன்னைக்கும் துணி துவச்சிட்டே இருப்பியா"
ஞாயற்றுக் கிழமைகளின்
புலம்பல் நினைவில் வர
வேகமாய் துணிகளைத் தட்டி
"அத்த கொஞ்சம் காயப் போட்டுடரிங்களா"
(மீண்டும் ஒரு கொஞ்சல்)

"நேரமாச்சு இன்னும் கிளம்பளையா"
பக்கத்து வீட்டு பாட்டி அலாறம் அடிக்க
இதோ கிளம்பிவிட்டேன் அலுவலகத்திற்கு
அவசரத்திற்கு சுடிதாரும்
ஐந்து நிமிடம் முன் எழுந்தால் புடவையுமாக

அலுவலக பணியினூடே
"நாளைக்கு என்ன சமைக்கலாம்"
"பாப்பாவிற்கு என்ன கொடுத்துவிடலாம்" என்ற
எண்ணங்களும்
கொஞ்சம் எழுத்திலும் கலந்து
மணியும் ஏழாகிவிட்டது

இதோ கிளம்பியாகிவிட்டது
எல்லோருக்கும் முன்பாக

மகள் வீட்டு பாடங்களொடும்
அத்தை இரவு உணவுக்கான பட்டியலோடும் காத்திருப்பார்கள்...

எழுதியவர் : மகாலட்சுமி (12-May-15, 5:12 pm)
சேர்த்தது : Mahalakshmi
பார்வை : 104

மேலே