நீதிக்கு தூக்கு-----அஹமது அலி---
செத்துவிட்ட
சட்டப்புத்தகத்தை
எரிப்பதா?
புதைப்பதா?
சொல்லுங்கள்.......
0
சட்டங்களில்
ஓட்டைகள் இருக்கலாம்
ஓட்டைகளே சட்டங்களானால்
ஏற்புடையதா?
கூறுங்கள்.......
0
சாதிக்கொரு
நீதி சொல்லி
ஆதிக்க வெறி பிடித்தலைந்த
அறியாமைக் காலத்துக்கும்
அறிவியல் காலத்துக்கும்
என்ன வித்தியாசங்கள்.....
0
கோடிகளை அமுக்கியவர்கள்
பெரும் புள்ளிகளாயினர்
கொலைபல புரிந்தவர்கள்
கோட்டை ஏகினர்.....
0
தண்டனைக் குற்றவாளிகள்
கண்டபடி ஜாமினில்
வெளியில்....
விசாரனைக் கைதிகளோ
வாழ்க்கை முழுவதும்
சிறையில்...
0
இந்தியா ஏழை நாடு என்பதை
மறந்து விடுங்கள்
இது ஏமாற்றுபவர்களின் நாடு...
0
சட்டம்
அனைவருக்கும் சமமென்பது
ஏட்டில் மட்டுமே
நாட்டிலெங்கே தேடுங்கள்....
0
பணக்காரனுக்கு
இந்த சட்டம் பொருந்தாது
என்றொரு அறிவிப்பாவது
செய்து விடுங்கள்...
0
நீதி தேவதை
கற்பிழந்து விட்டாள்
காசெனும் காமுகனிடமும்
பதவியெனும் பலகீனத்திடமும்...
0
இவள் கண்கள் கட்டப்பட்டிருந்தும்
அடையாளம் காண்கிறாளே
கண்கட்டி வித்தையில் இவள்
கெட்டிக்காரி தான்...
0
ஒவ்வொரு ஊரிலும்
ஆலமரத்தை நட்டு வைப்போம்
நீதிமன்றத்தில் நம்பிக்கை
வரும் வரை......
0
எல்லோருக்கும்
சமமில்லாத சட்டம்
மயிருக்குச் சமம்...
0
பிடித்தவன் தலையில் வைத்துக்
கொண்டாடு
பிடிக்காதவன் என்னைப் போல்
குரல் கொடு .....
0
குற்றவாளிகளை
தூக்கிலிடுவது நீதி
நீதியே தூக்கில் தொங்குவது
என்ன நியதி ?