மலேசியக் காதலிக்கு ஒரு தமிழ்க்காதலனின் மறுமொழி

244655-மலேசியா அபியின் பாடலுக்கு எதிர்ப்பாட்டு :
காதலியே! ஆருயிரே!
காத்திருத்தல் மிகசுகமே!
ஆதலினால் பொருள்தேட
அனுப்பினையோ! உயிர்விளக்கே!
நேரத்தே வந்துனது
நெடுங்கழுத்தில் மாலையென
நான்விழுந்து கிடந்தாட த்
தூரத்தில் ஒதுங்கிடினும்
துடிக்குதடி என்,இதயம்!
என்னை அனுப்பிவிட்டால்
இசையுனக்கும் இனித்திடுமோ?
என்னை அனுப்பிவிட
இசைந்ததுமே இனித்ததுவோ?
எங்கோ நீயிருக்க
எப்படி,நான் இழுத்தணைப்பேன்!
கண்ணீரைத் தேக்கிவைத்துக்
காவிரியில் விட்டுவிடு!
உண்ணா திருக்கின்ற
உழு,நிலங்கள் வாழட்டும்!
ஈரமுடன் அவையிருந்தால்
இனிவரும்,நம் தலைமுறைகள்
சாரமுடன் வாழ்வதற்குச்
சாத்தியமும் ஆகிடலாம்!
தாரமென உனைப்பற்றித்
தாகமெலாம் போக்கிடுவேன்!
பாரமான இதயத்தைப்
பாடலாக்கி எழுத்தினிலே
பதிந்துவைத்துக் காத்திருப்பாய்!
வேரெனவே இறங்கிடுவேன்!
விழுதுகளாய் அணைத்திடுவேன்!
சாரமான சந்ததிகள்
நாம்பெறுவோம் கவலையறு!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (14-May-15, 8:39 am)
பார்வை : 90

மேலே