மாற்றம் காணும் மனிதர்

ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
மூன்றுகால் என்றே முடிவெடுங்கள் –தோன்றும்
நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
அலையில்லை வாழ்க்கை அமிழ்து

பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
ஈர வயலாய் எழில்பூத்து – சாரல்
மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
தழைத்திருக்க்கும் வாழ்க்கை வயல்.

முறிந்திருக்கும் காலோடு முன்னேற்றப் பாதை
அறிந்தெடுத்து வைக்கும் அடியால் – நெறிவழுவா
நேர்வழி செல்லும் நிஜங்கள் உருக்கியே
வார்த்ததென் நம்பிக்கைத் தூண்

வகையற்று வாடும் வரலாற்று சோக
புகைப்பட மல்ல இதுவே –முகைபோல்
விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட
தெரிந்த உணர்வின் திறம்.

பரிதாபம் கொண்டு பரிபாஷை இன்றி
அரிதாரம் இன்றி அரங்கில் –விரிவான
நாடக வேஷம் தரித்து நடிக்கின்ற
சாடல்கள் வேண்டா மெமக்கு.

ஊன விழியால் உணர்வுகளைத் துண்டாடும்
ஈன குணமென்னும் இல்லாத – ஞானத்தால்
வானத்தை தாண்ட முயற்சிக்கும் வாழ்க்கைக்கு
ஊனத்தை காட்டல் உவர்ப்பு.

மனஊனம் கொண்டு மணவாழ்வில் நொண்டும்
சனம்கோடி உண்டு. இருந்தும் –தினமூன
மென்றே விழிகாண நேர்கின்ற எங்களில்
நின்று வருத்தல் நிறுத்து.

நாங்களும் நானிலத்தில் நல்ல பிரஜைகள்
தீங்கிலா தெங்கள் திறமைகள் – மூங்கிளுள்
காற்று நுழைந்து முனகுகின்ற பாடலாய்
மாற்றங்கள் காணும் மகிழ்ந்து.

*மெய்யன் நடராஜ்

படம் வல்லமை நன்றி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-May-15, 1:49 am)
பார்வை : 136

மேலே