விழுதான மகள்

.....................................................................................................................................................................................................

தொழில் தொடங்க பணம் கேட்டாள்;
மறுத்தேன்....
தொடர்ந்து படிக்க தொகை கேட்டாள்;
மறந்தேன்.
பெண்ணென்றால் திருமணம் தானே?

எதிர்த்தறியாள் மகள்; எனினும்
போவாள்! போனது போல் வருவாள்....!
கற்கிறாளோ?
உளியும் சிற்பியுமாகி தனைச்செதுக்கு கின்றாளோ?
உலகு தெரியா பெண் ! !

பனிரெண்டு பவுனுக்கு முடித்தேன் என்றேன்
அதில்
பாதி தானே கேட்டேன் என்று
பதம் பார்த்தாள்..!
பெண்ணென்றால் திருமணம் தானே??

இன்று மணவறையில் மகள்..
போட்டதில் குறைகிறது நான்கு புள்ளி ஆறு கிராம் என்றார்.... !
மேலும்
அதிகப்படி இரண்டு பவுன் எங்கே?
அதிரடி பிள்ளை வீட்டார்...!

என் தேவதைக்கு
மூக்கு பெரிதாம்; முகத்தில் தழும்பாம்.....!
அதற்காக அதிகப்படி இரண்டு பவுன்.. !
சேர்த்துதான் பனிரெண்டென்றேன்;
சேர்க்காது வேண்டும் என்றார்..

எங்கு போவேன்? யாது செய்வேன்?
நீர் வறண்டு விட்டதே; நெஞ்சைப் பிடித்தேன்;
“ வந்தால்தான் திருமணம்!” வாயடைத்துப் போனேன்... !
கை கூப்பி கெஞ்சினேன்; கண் மங்கினேன்... !

இடியும் இரும்பும் அறச்சினம் கொள்ள,

பெண் குரலாயிற்றே இது?

“ எதுவும் கிடையாது; எந்திரிச்சுப் போங்க ! ”

எழுதியவர் : அருணை ஜெயசீலி (19-May-15, 3:13 pm)
பார்வை : 89

மேலே