ஓதுவோரும் ஊதுவோரும்

ஓதுவோரும் ஊதுவோரும்
-------------------------------------------

அன்று . . . .

தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன.

இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திரையை ஓட்டுபவர்களாக’ உருவாக்கியர்களாவர். இந்த ஓதுவோர்களின் உதவியின்றி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்க விரும்பாத சமூக அங்கத்தவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்று அவர்களும் ஒதுவோர்களாகி இளைப்பாறும் ஒதுவோர்களின் இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலை உலகின் ஒவ்வொரு சமூகத்திற்கும் பொதுவானதாக அமைந்திருந்தது.

இன்று . . .

தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியும் வேகமும், சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வும், ஒரு சமூகம் ஒரு நாடு என்ற எல்லைகளுக்கு அப்பால் உலகம் முழுவதிலும் பரந்து வாழ்வதற்கான வாய்ப்புக்களளையும் வசதிகளையும் உருவாகியிருக்கின்றன. இந்த விரிவாக்கம், குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தக் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருவதற்கான அரிய வாய்ப்பாகும்.

ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் சார்ந்துள்ள சமூகம் குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வருமானால் தமது சுய இலாபம் பாதிக்கப்பட்டுவிடுமே என்பதால் அந்தச் சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட வைத்திருப்பதற்கு இன்றைய ஊதுவோர்கள் மிகவும் தந்திரமாகவும் வேகமாகவும் செயற்பட்டுவருகிறார்கள்.

யார் இந்த ஊதுவோர்கள்?


இவர்கள் வேறு யாருமல்ல. உருமாற்றம் பெற்றுள்ள ஓதுவோர்கள். தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை தமக்குச் சாதகமாக்கி கடுகளவு விடயம் ஒன்றை மலையளவு பெரிதாக ஊதி (ஊதுவதால் - ஊதுவோர்) அந்த விடயம் சரியா அல்லது தவறா என்ற சிந்தனைக்கு இடமளிக்காமல் உணர்ச்சிகளைத் தூண்டி சுய இலாபம் அடைபவர்கள்.

இந்த ஊதுவோர்களில் ஒரு பகுதியினர் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்பவற்றின் ஊடாக அவர்களுக்குள் ஏற்படுகின்ற போட்டி காரணமாக குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது உணர்வையும் தூண்டி தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுய பொருளாதார வளத்தைப் பெருக்குகிறார்கள். மறுபகுதியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக எத்தனை பேர் விருப்பம் (Like) தெரிவிப்பதன் மூலம் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிரார்கள்.

ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அன்றைய ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ செய்ததை இன்றைய ஊதுவோர்கள் அறிந்தே செய்கிறார்கள் என்பது தான் அது.

அதுமட்டுமல்ல. ஒவ்வெரு மனிதனும் தனது தலையில் இருந்து இறங்கி இதயத்துக்குள் நுழையும் வரை குண்டுச் சட்டிக்குள் தான் குதிரையை ஒட்டிக்கொண்டிருப்பான்.

நன்றியுடன் – KG Master.
வாழ்க்கை கட்டுரை

எழுதியவர் : KG Master. (20-May-15, 11:14 am)
பார்வை : 64

மேலே