பனங்குட்டி

என் மண்ணை
மாற்றிக் கொண்டபோது
என் தாயகத்தின் நினைவாக
ஒரு பனங்குட்டியை
எடுத்து வந்தேன் !

தஞ்சம் புகுந்தயிடத்தில்
புலம்பெயர்தலின்
புறக்கணித்தலினூடே
மிகு அக்கறையுடன்
வளர்த்தேன் !

அதன் ஆண்டுவளையம்
ஒவ்வொன்றும் அடுக்கடுக்காய்
வலையல்களணிந்த
ஒரு வளைகாப்புக்காரியின்
கரங்களைப் போல்
கருமுருளை வளையம் மின்ன
வளர்வதையும்
பருவமாற்றங்களைத் தாண்டி
பூப்பெய்து பூம்பாளை மலர
வெயிலிலும் மழையிலும்
செழிப்பது கண்டு
மலைத்து நின்றேன் !

இப்படித்தான்
என்னையும் என் நிஜ மண்ணிலிருந்து
கதறக் கதற வேறு வழியின்றி
வேரறுத்து தஞ்சம் புகுந்தயிடத்தில்
நட்டிருக்கிறேன் !

நான் மரணமடைந்த பிறகாவது
என்னை என் மண்ணில்
புதையுங்கள் -
என் உடல்
விடுதலையின் குருத்து விட்ட
ஒரு பனையாகட்டும் !

என் கால்விரல்கள்
வேர்களாய் ஓடி
என் தாய்மண்ணின்
நீர் அருந்தட்டும்
என் நீள் கரு தலைமுடிகள்
பனையின் விசிறியோலைஎன
விரியட்டும்
என் கைவிரல்களனைத்தும்
பூம்பாளைகளென மலரட்டும் !

என் இதயக்குருதி
பதநீராகட்டும்
காற்றிலசையும் பனைஒலைகளின்
சலசலப்பு
என் வார்த்தைகளாகட்டும்
என் மண்ணின் மடியில்
நான் வளர்ந்து நிற்ப்பேன் !

என் குருத்தோலை
என் உப்பங்கழிக்காற்றின்
பாச நீவலின்
உயிர் சுவாசமுணரும் -
நிறை நாழியில் மின்னிடும்
இனிப்புச் சுவைகூட்டி
இளநுங்காய் என்னை
என் சந்ததியினருக்கு
அடையாளம் காட்டுவேன் -
என் வம்சம்
என் நிழலில் சுதந்திரக்காற்றை
சுவாசித்து இளைப்பாறும் ............

தயை கூர்ந்து
என்னை என் மண்ணில் புதையுங்கள் .........

எழுதியவர் : பாலா (20-May-15, 9:00 pm)
Tanglish : panai
பார்வை : 133

மேலே