இதுவும் வாழ்க்கைதான்

...................................................................................................................................................................................................
பூஜையறை இல்லாமல் வீடு கட்டுகிறீர்;
பூஜை நடக்கிறது.
வாகனமில்லாமல் நிறுத்தத்தில் நிற்கிறீர்
பயணம் தொடர்கிறது..

திருமணமாகாத பெண் நான்...!
எனக்கு வாழ்க்கை ஓடாதா?

எத்தனை கேள்விகள்?
பலமுறை பதிலளித்தும்
வற்றாத கேணிகள்.....!

“வரதட்சணை கொடுமையா”
“காதல் தோல்வியா”
“காரெக்டர் சரியில்லையா? ”
“உடம்பில் குறையா? ”

இது ஒரு புறம்..!

வயது வித்தியாசம் இல்லாமல்
வீட்டில் மனைவியைக் கூட மறந்து விட்டு
“ வாழ்வு” தருவார்களாமே?
ஐயோடா !
நான் என்ன ஐசியுவில்
ஆக்ஸிஜன் வைத்துக் கொண்டா படுத்திருக்கிறேன்?
இவர்களை விட நன்றாக இருக்கிறேன்... !

“எப்படி முடிகிறது உங்களால்? ” – அக்கறையற்ற விஷமக் கேள்வி !
ஏனய்யா, ஏனம்மா,
நான் என்ன
எவரெஸ்ட் சிகரத்திலா ஏறி விட்டேன்?
அல்லது
நீவிர் பிறக்கிற போதே
கல்யாணம் பண்ணிக் கொண்டா பிறந்தீர்?
இழந்தவரும் பிரிந்தவரும் உமது
இல்லத்தில் இல்லையோ?

எனக்கும்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு உண்டு.
உணவு உடை உறையுள் லட்சியம்
உரிமை காப்பு ஆனந்தம் இத்துடன்
தத்தெடுப்பு மையம் மூலம் வாய்த்த
மகனும் மகளும் உண்டு.. !

திருமணம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி..!
முக்கியமான நிகழ்ச்சியென்று நீவிர் கருதுகிறீரா?
நன்று; மகிழ்ச்சி !
எனக்கு அப்படி படவில்லை யெனில்
போங்களேன்....!

நான் கேட்கிறேனா வேலை மெனக்கெட்டு?
கேட்டால்தான் சொல்ல முடியுமா உங்களால்....
“ நீவிர் ஏன் கல்யாணம் செய்து கொண்டீர்கள்” என்று?

................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-May-15, 1:14 pm)
பார்வை : 171

மேலே