பணிக் கொடை

ஏங்க..சாப்பாடு கட்டியாச்சு..
கணவனிடம்..!
ஏம்பா..துணியெல்லாம்
துவைக்க எடுத்துப் போட்டுட்டு
கெளம்பு..
பையனிடம்..!

இந்தா..வேற கட்டு கொடு..
எட்டு ரூபா கீறிய
பத்து ரூபான்னு
ஏத்திட்டியா..?
கீரைக்காரியுடன் பேரம்..!

துவைத்த துணியை காயப்போட்ட
பத்து நிமிஷத்தில் வந்த மழையிடம்
கோபம்..
வீட்டைப் பெருக்கி
தரையைத் துடைத்து
பூஜை சாமான் விளக்கி
சாமி கும்பிட்டு
வெறும் வயிற்றில்
கந்த சஷ்டி கவசமும்
லலிதா சகஸ்ர நாமமும் படித்து முடித்து..
ராகுகால பூஜைக்கு
பக்கத்து தெரு கோயிலுக்கு பொய்
திரும்பும் வழியில் ரேஷன் சர்க்கரை வாங்கி
வீட்டுக்குள் வந்தபின்
மின்சாரம் போயிருந்தபடியால்
பேப்பரை எடுத்து விசிறியபடி
விரதம் முடித்து
துணிகள் மடித்து
இஸ்திரிக்கு கொடுத்தனுப்பி..
மாலையில் காபி போட்டு
எல்லாம் தயாராக வைத்து
தொலைக் காட்சி முன் அமர்ந்து
பாதியிலே எழுந்து
சப்பாத்தி மாவு தேய்த்து
இரவு சாப்பாடு போட்டு முடித்து
கதவெல்லாம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறதா
என்று பார்த்து
கலைந்திருக்கும் பேப்பர் புத்தகங்கள்
எடுத்து வைத்து
படுக்கைக்கு வந்து படுத்தவுடன்
கணவர் ..கேட்டது..
"கொஞ்சம் காலை பிடித்து விடு..
ஆபீசில் நாள் முழுதும் மீட்டிங்
முழங்கால் வலிக்கிறது"
அதையும் செய்து விட்டு
அயர்ந்தது
அந்த மனைவி இயந்திரம்!

எழுதியவர் : கருணா (21-May-15, 12:16 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 110

மேலே