மரம் சொல்லும் கதை - கற்குவேல் பா

மரம் சொல்லும் கதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலிழந்த ஒருவனுக்கு
ஊன்றுகோல் செய்ய
என்னை வெட்டியபோது
நான் அழுததில்லை ..

அவன் குளிர்காய்வதற்கு
என் கிளைகளை ஒடித்து
கொளுத்திய நொடிகளில்
மனம் கனத்ததுண்டு ..

* * * * *

வீடற்ற அகதிகளுக்கு
குடிசையிட உடைத்தபோது
என்னில் இழப்புகள்
ஏதும் தோன்றியதில்லை ..

மின்சார கம்பிகளை
உரசிய என் கைகளை
உடைத்து எரிந்தபோது
இரத்தம் வடித்ததுண்டு ..

* * * * *

ஏழைக் குழந்தைக்கு
புத்தகம் தயாரிக்க
என்னை அரைத்தபோது
கோபம் கொண்டதில்லை ..

பண முதலைகளுக்கு
கட்டில் மெத்தைக்காக
என்னை பிடுங்கியபோது
ஆத்திரம் கொண்டதுண்டு ..

* * * * *

காசில்லா இளைஞன்
காதலை தெரிவிக்க
பூக்களை திருடியபோது
வேதனை கொள்ளவில்லை ..

கனிகளைப் பறித்து
வீதியில் மூட்டையிட்டு
கூவி ஏலமிட்டபோது
வேதனை உணர்ந்ததுண்டு ..

* * * * *

ஐந்திற்கும் குறைவான
அறிவுள்ள உயிரிகளுக்கு
இருப்பிடமாகியபோது
சுமையாக தோன்றவில்லை ..

விளம்பர பலகைக்கு
சிலுவையாக மாறி
ஆணிகள் ஏற்றபோது
கண்ணீர் சுமந்ததுண்டு ..

-- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (24-May-15, 10:51 am)
பார்வை : 316

மேலே