ஒற்றைக் கால் சனி பகவான்

கிளியும் குயிலும்
மலரும் நிலவும்
மட்டும் தான் கவிதையா..?

தினமும் கூடிவிடும் - எங்கள்
வீட்டு காக்கை கூட்டங்களும்
அழகிய கவிதைகளே...!

முதல் ஆளாய் வந்துவிடும்
ஒற்றைக் கால் காக்கை அண்ணன்
கத்தி கத்தி சேர்த்துவிடும்
தன் சொந்தம் அனைவரையும்…

பிசைந்த பால் சாதமும்
எங்க ஊர் காரச்சேவும்
அள்ளி எடுத்துக் கொண்டு,
அடி மேல் அடிவைத்து
அவைகளை நெருங்குவேன்…

என் வருகையறிந்து
விருட்டென்று பறந்து
பின், நான் திரும்பியவுடன்
சட்டென்று கூடிவிடும்...

வாசல் ஓரம் சென்று
ஒளிந்து நின்று ரசிப்பேன்
கொத்தி கொத்தி உண்ணும்
கள்ளமில்லா என்
கறுமை கண்மணிகளை…

சனிப் பெயர்ச்சி பலன் படித்து
குழம்பினேன் பின் ஒரு நாள்..
திருநள்ளாறு செல்வதா ..
குச்சனூர் செல்வதா..

பெயர்ச்சி நாளன்று காலையிலேயே
கா கா கா என்று கானம் பாடியது
எங்கள் செல்ல காக்கைகள்…

வாசல் சென்று பார்த்தேன்
என்றுமில்லா அதிசயமாய்
ஒற்றையாய் வந்திருந்தது - அந்த
ஒற்றைக் கால் காக்கை....

சட்டென என்னுள்ளே
ஒரு தோற்ற மயக்கம்…
வைரமாய் மின்னியது
அதன் கண்கள்…
தங்கமென ஜொலித்தது
அதன் இறெக்கைகள்…

அறிந்தும் அறியாமலும்
என் இரு கை கூப்பினேன்..
தத்தி தத்தி நடந்து
ஆசிர்வாதமாய் தலை ஆட்டியது..

பரிகாரமும் பரிதவிப்பும் வேண்டாம்
"இனி எல்லாம் சுகமே"
என்று சொல்லிப் பறந்தார் - அந்த
ஒற்றைக் கால் சனி பகவான் ...!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (24-May-15, 12:49 pm)
பார்வை : 214

மேலே