பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - தல புராணம்

"தல புராணம் " சிறுகதையின் அளவு வரையறை குறித்து ஆசிரியரின் எச்சரிக்கை கண்டு கொஞ்சம் தயாரான நிலையில்தான் வாசிக்க தொடங்கினேன். புராணம் என்கிற போதே "மிகப் பழையது" என்கிற அர்த்தம் வருவதால் ஒரு சம்பவம் எப்படி புராணமாயிற்று என்பதை இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான வேல்முருகனை வைத்தே விளக்கம் கொடுத்து விடுகிறார் ஆசிரியர்.

எப்போதுமே பெண்மையை சக்தி வடிவமாகவே பார்ப்பது நமது பண்பாடு. அதனால்தானோ என்னோவோ பெரும்பாலும் பழைய புராணங்களில் பெண்மை அழகில் துவங்கி தீமையை அழிக்கும் சக்தியாய் பரிணமிக்கும். இந்த சிறு-நெடு-கதையிலும் (ஆசிரியர் கூற்றுபடியே) பெண்மையை அப்படித்தான்
சித்தரித்திருக்கிறார். ஒரு மகளிர் தினத்தில் சமர்பிக்கப் பட்டதன் காரணமும் விளங்குகிறது.

கொங்கு நாட்டின் ஒரு பழம்பெரும் கோவிலுக்கு செல்லும் தம்பதியினரும் அவரது குழந்தைகளும் வழியில் கோடை வெய்யிலில் மயக்கமடைந்த ஒரு மூதாட்டியும் கோவில் பூசாரியும் இந்த கதையின் பாத்திரங்கள். சிறுகதையின் இலக்கணப்படியே எண்ணிக்கை குறைவாய் பாத்திரங்களை படைத்திருக்கிறார் ஆசிரியர்.

வழியில் மயக்கமுற்று கிடக்கும் கிழவியை மனித நேயத்தோடு உதவி யார் எவர் என்று கூட பார்க்காமல் காரில் ஏற்றி கொள்ளும் பண்பாடு, செயற்கை குளிர்பானத்தை தவிர்த்து குழந்தைகளுக்கு இளநீரை பழக்கப் படுத்தும் அந்தக் கண்டிப்பு எல்லாம் ஒரு நல்லகுடும்பத் தம்பதிகளாகவும் பெற்றோர்களாகவும் வேல்முருகன் இந்துமதி தம்பதியினரை கதாபாத்திரங்களாக படைத்த ஆசிரியர் எதார்த்த நிகழ்வுகளைகூட பாடங்களாய் நம் முன் புகட்டுகிறார்.

இதில் வரும் மூதாட்டி கதாபாத்திரம்தான் "தலபுராணத்தின் " கதாநாயகி என்று கூறலாம். இன்று நம் முன்னே பெண்மை சீரழிக்கப் படும் சம்பவங்கள் ஏராளம். அந்த காலத்திலேயே அப்படிப்பட்ட கொடுமைகளுக்கு ஆளான பெண்மை எப்படி அந்த அக்கிரமசெயலுக்கு தண்டனை கொடுக்கிறது என்பதை கதைக்குள் கதையாக ஆசிரியர் சொல்கிறார். அதனால்தான் அப்படிப்பட்ட சம்பவங்களை புராணமாய் சொல்வதிலும் அந்த பெண்மையை சக்திவடிவக் கடவுளாய் ஏற்றுக்கொள்வதிலும் அந்த கள்ளம் கபடமற்ற கிராமத்து மக்கள் அந்தக் கதைகளை காலத்தை வெல்லும் காவியங்களாக்கும் வழக்கமாக கொள்கின்றனரோ என்று தோன்ற வைக்கிறது.

இதில் வரும் ஒரு பெண் பாத்திரமான இந்துமதியைக் கூட இன்றைய கால கட்டத்தின் பெண்மையை பிரதிபலிக்கின்ற பாத்திரமாகத்தான் படைத்திருக்கிறார் ஆசிரியர். ஒரு சிறு கிராமத்தின் அம்மன் கோவிலின் தலபுராணத்தை கிராமத்து பூசாரி சொல்கின்ற படியே ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திக்கும் பெண்மணியாய் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்,

நிகழ்வுகளும் உரையாடல்களும் கதையை அழகாகவும் விறுவிறுப்போடும் நகர்த்தி சிறுகதையின் வெற்றிக்கு உதவுகின்றன .

கதைக் களத்தின் வர்ணிப்புகள் மூலம் நம்மை மேற்குதொடர்ச்சி மலையை அடுத்த ஒரு கொங்கு கிராமத்துக்குள்ளே அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
வேனலில் கொடுமையை அந்த மூதாட்டி மயக்கமுறும் தருணங்களும் தண்ணீர் தாகம் கொண்ட குழந்தைகளும் அதை கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட நகர இளைஞன் ஸ்ட்ரா இல்லாமல் குடிக்கும்போதும் வாசிக்கும் நமக்கும் ஒரு இளநீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுவது இந்த கதையின் வெற்றிக்கு இன்னொரு அத்தாட்சி.

முடிவில் தனது சிலை அருகிலே முகம் வைத்து பார்த்து கண்ணீர் விடும் மகேஸ்வரி என்கிற மூதாட்டியை புகைப்படம் எடுக்கும் வேல்முருகனோடு நமக்கும் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

மகளிர் தினத்தில் பொதுவாக இப்போதைய பெண்களில் சாதனையைச் சொல்லும் படைப்புக்களைதான் பார்க்க முடிகிறது . ஒரு பழைய சம்பவத்தை "தலபுராணம்" என்கிற பெயரில் பெண்மையை போற்றும் ஒரு கதையை கொடுத்திருப்பதன் மூலம் ஆசிரியர் திரு பொள்ளாச்சி அபி அவர்கள் அவருக்கே உரித்தான எழுத்தின் தனித்தன்மையை உணர வைக்கிறார்.

வாழ்த்துக்கள் அபி அவர்களே...உங்களின் எழுத்துப் பணி இனியும் தொடந்து எங்களைப் போன்ற வாசகர்களை நல்ல தரமான படைப்புக்களை நுகர வாய்ப்புத் தாருங்கள்...


=========================================================================
இந்த கட்டுரை என்னால் எழுதப் பட்டது என உறுதி கூறுகிறேன்

- ஜி ராஜன்

எழுதியவர் : ஜி ராஜன் (28-May-15, 10:28 pm)
பார்வை : 203

மேலே