காது மடல்களை மடித்தாளும் விடமாட்டேன்

தமிழ் சமூதாயம் கேட்டே ஆகவேண்டிய குற்றச்சாட்டு இது. வேலை நிமித்தமாக பூனா சென்றிருந்த போது நிகழ்ந்த அனுபவம் இது. உழைப்பிலும் அறிவிலும் தமிழன் சிறந்தவன் என்பதை இங்கு நன்றே அறிந்துகொண்டேன். இருந்தும் ஏதோ ஒரு மனதளவிலான வேறுபாட்டை உணர்ந்தேன், மாற்றம் தெரிந்தது, சென்னைக்கும் பூனாவிற்கும். நேர்மறையானது அது.

அது என்ன என்ற தேடல் மனதில் ஊறிக்கொண்டே இருந்தது. தேடிக்கொண்டே இருந்தேன். அது என்ன தமிழனிடம் இல்லாத நல்ல குணம்? அந்த உண்மையை கண்டெடுத்ததும் தலைகுனிந்து போனேன். அந்த தருணத்தில் முதலில் நினைவில் வந்தது, ‘ரிதம்’ படத்தில் அர்ஜீன் மூலமாக வெளிப்படும் ‘தமிழ் நண்டு கதை’ தான். ஒரு நண்டு வெளியேற முயற்சித்தால் இன்னோரு நண்டு கால்களை பிடித்து இழுக்கும். கால் உடைந்த நண்டுகள் எல்லாம் மேல போய் ரொம்ப நாள் ஆகியாச்சி, ஆனா நல்ல கொளுத்த நண்டுகள் மட்டும் இன்னும் அடியிலயே கிடக்கு. வரலாற்று அறிஞர்கள் சொல்வதுண்டு ‘ஒரு மாபெரும் இனத்தை அழிப்பதற்கு வேறு இனம் வருவதில்லை, அந்த இனமே உடைந்து தன்னைத் தானே அழித்துவிடும்’ என்று. தமிழுக்கும் இது பொருந்துமோ??

இல்லை இது மரபோ?? உலகின் மற்ற அரசுகள் மாபெரும் அரசுகளாக விரிவடைந்து இந்திய தீபகர்ப்பத்தை முழுமையாக கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த காலத்திலும், அசோகர் முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்திற்குள் மற்ற பேரரசுகளின் காலடி கூட வைக்க முடியாத அளவு போர்த்திறன் கொண்டிருந்தனர் மூவேந்தர்கள். ஆனால் செந்தமிழ் பேசிய மூவேந்தர்களும் தங்களுக்குள் வெற்று காரணங்களுக்காக, வீராப்பிற்காக அடித்துக் கொண்டு, ஒருவர் கட்டிய கோவில்களை மற்றவர் இடிக்க, மன்னர்களை கொலை செய்ய என ஒருவருக்கொருவர் கார்புணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். அதை அடியாக பயன்படுத்தி நாயக்கர்களும் மற்ற அரசர்களும் நுழைந்து மூவேந்தர்களின் ஆட்சிகளை குழைத்தனர். இந்த மரபு குணமும் ஓர் காரணமோ என யோசிக்க தோன்றுகிறது.

இது தான் தமிழ் பண்பாடா? தமிழன் என்று யாரைப் பார்த்தாலும் பெரும்பான்மையாக இரு விதமாக பிரிக்கலாம். பிறரை தாழ்மைப் படுத்துபவர், தன்னை தாழ்மையாக நினைப்பவர். இந்த தாழ்வுமனப்பான்மை நோய் தமிழனிடம் பரவலாக காணப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு ஆகவில்லை. தவறுசெய்யும் போதெல்லாம் தலையில் கொட்டி உனக்கு தெரியாது, உன்னால முடியாது, நீ வேலைக்காக மாட்ட, விட்டுவிடு, லூசு, அறிவில்லாதவன் என எதிர்மறை கருத்துக்கள் காதிற்குள் அழுக்காய் படிந்து, என்னை நானே தாழ்த்தும் அவலம் நிகழ்ந்தது. தோல்வியின்றி வெற்றி மட்டும் நாடுகிறதா சமூகம்? முயற்சியை ஊக்கப்படுத்தாத ஒரு சமூகம் எப்படி வெற்றியை அறுவடை செய்யும்? பெரிய மனத்திடம் உள்ளவன் மட்டும் தான் நீந்திக் கடப்பானா, மற்றவர்க்கு கரையில் இடம் இல்லையா?


நாங்கள் பெரிய திறமைசாலிகள் இல்லை தான், நிறைய தவறுகள் செய்பவர்கள் தான். அதற்காக அடக்கி முடக்கிவிடுவது சரியில்லை. பொன் வேண்டாம் பொருள் வேண்டாம், ஊக்கம் அளித்திடலாமே. அது போதும் வேர் ஊன்றிட. என் வாழ்வின் ஒரு நிகழ்வை குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் மிகப்பெரிய பாடகன் இல்லை, ஆவதற்கு ஆசையும் இல்லை. ஆனால் பாடல்களின் அதன் வரிகளின் பெரிய இரசிகன். பாடுவதற்குப் பிடிக்கும். ஆனால் சரியான ஏற்ற இறக்கத்துடன் பாடத்தெரியாது. இது குறையோ பிழையோ, பள்ளி பருவத்தில் பாட முயற்சித்த போதெல்லாம் அவமானம் தான். நெருங்கிய நண்பர்களும் ‘தயவு செய்து நீ பாடாத’ போன்ற எண்ணங்களை என்னுள் பதித்து அது ஆழ் மனதில் பதிந்து, பாடுவதை அவமானமாக மட்டும் மாற்றிவிட்டேன். மற்றவர்கள் முன்னிலையில் பாடுவதை பள்ளிகாலத்திலே நிருத்திவிட்டேன். அதையும் தாண்டி கல்லூரி, அலுவலகங்களில் சிறு முயற்சி துளிர்விட்டபோதும் அதே அவமானம். பின் அந்த ஆர்வம் அப்படியே நசுங்கியே இருந்தது.

பூனாவிற்கு வந்து சில நாட்களில், அலுவலகத்தில் நல்ல நண்பர்கள் கூட்டம் அமைந்தது. எங்கள் கூட்டமே ஒரு கலாச்சாரக் கூடல் தான். ஒரு மலையாளி, ஒரு தெலுங்கு நண்பர், ஒரு கன்னடிகா, ஒரு போபால் தோழி மேலும் சில மராட்டியர்கள். சமயங்களில் நாங்கள் பாட்டுக்கு பாட்டு விளையாடுவது உண்டு. அவரவர் மொழிகளில் பாடுவோம். அப்போது நான் மிகவும் தயங்கினேன். ஆனால் அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய விதமே அற்புதமானது. என்னை நானே மதிக்க ஆரம்பித்ததே அப்போது தான் எனலாம்.

அவர்கள் தந்த ஊக்கத்தில் பின் மராட்டி பாடல்கள் சில மனனம் செய்து, பொது நிகழ்ச்சியின் போது பாடினேன். அதற்கும் பெரும் ஆதரவு தந்தனர். பின் பொழுதுபோக்கிற்காக சேரும் சமயங்களில் என் பாடல்கள் அரங்கேறுவது வழக்கமானது. இன்று வரை என் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசும் போது அவர்கள் என்னைப் பாட சொல்லி மகிழ்வது வழக்கம். இருப்பினும் எனக்கு நன்கு தெரியும் என் பாடல் திறன் எந்த அளவு மோசமானது என, ஆனால் அவர்கள் கொடுத்த ஆதரவு என்னை ஒரு தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றியுள்ளது.

தமிழர்களே தயவு செய்து பிறர் குறைகளை எள்ளி நகையாடி அவர்களை ஒதுக்காதீர்கள். நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். தோள் கொடுங்கள் நம் சகோதரர்களுக்கு.

எழுதியவர் : ந.நா (29-May-15, 11:29 pm)
பார்வை : 271

சிறந்த கட்டுரைகள்

மேலே