எங்கேனும் முட்டிக்கொண்டிருக்கலாம்

கம்பத்தில்
ஒலிப்பெருக்கும்
குழாய்களை அமைத்துவிட்டு
சொன்னார் ஒருவர்
கத்தி கத்தியே உயரத்தில்
சென்றுவிட்டது நம்மூரு
அரசியல் வாதிகளை போல...

முடிதிருத்தும்
நண்பர் நக்கல் செய்தார்
பொன்னாடை
போர்த்திவிட்டால்
கொஞ்ச நேரமாவது எங்கும்
தலை சாயக்கூடாது.

இப்போ தான்
செவுரு அழகாயிருக்கு.
கிறுக்கிய குழந்தையை
முத்தமிட்டுவிட்டு வீட்டிற்கு
வெள்ளையடித்து முடித்தவர்
சென்றார்.

சோற துப்பக் கூடாதும்மா
என்ற அம்மாவிடம்
நிலா மாமா மட்டும் துப்பியிருக்கு
என்று நட்சத்திரங்களை காட்டுகிறது
அந்தக் குழந்தை.

எங்கிட்ட பேரம் பேசுனிங்கல்ல
அந்தக் கோபம் என்று சிரிக்கிறார்
நேற்று வாங்கிச் சென்ற
செருப்பு கடிக்கிறது என்றதற்கு
கடைக்காரர்..

மீட்டருக்கு மேல் கேட்டு
விடாமல் வாதம் செய்தவரை
நொந்துக்கொண்டார் முதியவர்
நான் பிடிச்ச ஆட்டோவுக்கு
மூனு காலு..

அறிவியல் கேள்
ஓசைகளை குவித்தால்
ஓம் என்றார் சித்தி
திருச்செந்தூர் கோயிலில்.

காற்றுக்கென்ன வேலி என்று
அவள் பாடும் போது
இயக்குநர் ஏன் துள்ளுகின்ற
கன்றுக்குட்டியை காட்டினார்?
அவரே கேள்வி கேட்டுவிட்டு
விடலை மனசு என
விடை சொன்னார் அப்பா.

தங்கையின் கூந்தலில்
மஞ்சள் ரோஜாவை வைத்து
இராத்திரி வானில்
சூரியன் வந்தது
என்றார் அம்மா..

நான் சர்க்கரையை போட்டு பின்
பாலை ஊற்றுவது போல
கவிதை வந்த பின் சிந்தனையை ஊற்று
வார்த்தைகள் வருமென்கிறார்
தேனீர் கடைக்காரர்.

பலருக்கு
வேடிக்கை பேச்சிலேயே
வந்து விழுகிறது கவிதை.

பெருசா
என்னத்த எழுதிவிட்டேன் என
எங்கேனும் முட்டிக்கொண்டிருக்கலாம்
நேற்று பரிசு வாங்கிய
ஒரு கவிஞன்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (31-May-15, 9:06 am)
பார்வை : 116

மேலே