பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி-ரகு

மெய்ப்பொருள் காண்பது அறிவு -
-----------------------------------------------------
வண்ணமயமான உலகம் கண்முன் விரிந்துகொண்டிருக்கின்றன.வேரோடு மரங்களை
புலம் பெயர்த்தும் அதிசயம் அரங்கேற சூரியனுக்குப் பிறகொரு மாற்றுச் சூரியக் கட்டமைக்கான கனவுகளும் கூடத் துரிதப்பட்டிருக்கலாம் இன்றைய நாளில்.இப்படியான எந்திர காலத்தில் துணிச்சலோடுக் கையில் பேனா ஏந்தும் எழுத்தாளுமைகள் புடைசூழப் புறப்படும்
தருணங்களை எவ்வாறு வரவேற்று ஆராத்தி எடுக்குமோ அறிவியலாகி
பரபரத்துக் கிடக்கும் இம்மகா பிரபஞ்சம்.

ஒன்று தெளிவாகிறது, இலை மறைக் கனிகளென படிப்பார்வம் துளிர்ந்திருக்கிறது
எந்திரமாய்ச் சுழல்கிற மனிதர்களுக்குள்ளும்.அதனாலேயேப் புரவியேறி வெற்றிப் பயணம் துவங்க எத்தனிக்கின்றன கவிதைகளும் கதைகளும் அது சார்ந்தவைகளும்.

பொள்ளாச்சி திரு.அபி அவர்களும் அப்படியான பயணத்திற்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகத் தொடர்கிறார் செவ்வனே.

//மெய்ப்பொருள் காண்பது அறிவு// சிறுகதையில் சமத்துவமேவிய
சான்றோர்களுக் கெதிரானவர்கள் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் என்பதை சற்று ஆதங்கத்தோடு தெளிவுபடுத்துகிறார்.

கதையின் தொடக்கத்தில் விமானத்திலிருந்து இறங்கும் சண்முகம் தற்போதைய
நாகரிக உலகத்துக்காரனாக இருந்தும் நம் பண்பாடு மாறாத வாழ்வியக் கட்டமைப்புக்குள்
வாழ்ந்து வருகிறான் என்பதை அவனின் கார் தேர்விலும் இசை ரசிப்பிலும் மெய்ப்பட
வைத்திருப்பது ஆசிரியரின் டச்.

பறை இசை ஜாலத்தை வார்த்தை ஜாலத்தால் அபி மிக அற்புதமாக நிரப்புகிறார்
மனசெங்கும்.சர்வதேச மனிதர்கள், சர்வதேச இசை இவற்றின் விவரணைகளில் நாமும் சர்வதேசத்திற்குள் நுழைந்து திரும்பிய உணர்வில் மெய்சிலிர்க்கிறோம்.

"பாட்டயாவின் நினைவில் கண்ணீர் வரக் காரணமில்லாமை, வெயில்ல டீ குடிக்கலாம்",
இப்படிச் சிற்சில நெருடல்கள் இருந்தாலும் இன்னும் சாதீயம் தலைவிரித்தாடுவதை
சிறிய 'பிளாஸ்டிக் கப்' மூலம் உணரச் செய்வது அவ்வித நெருடல்களைத் தகர்த்தெறிகிறது.

சண்முகம் பயணிக்கும் காரின் பின்சீட்டில் அமர்ந்து போனதைப் போன்ற உணர்வும்,
டீ கடையானது கண்முன் காட்சியாய் விரிவதும்,சாதீயத்தால் கண்ணீரே மிச்சமாகும் என்று
கதை நிறைவுறுவதும் கதையின், படைப்பாளியின் வெற்றி.!!

இந்தப் படைப்பு என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்
-சுஜய் ரகு-

எழுதியவர் : சுஜய் ரகு (4-Jun-15, 3:26 pm)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே