பெண்ணே துளிரட்டும் உன் நம்பிக்கை

தோழி!
நம் தேசத்தின் மாதா மட்டுமல்ல நீ..
மகளும் நீயே..
மண்ணுண்டு மரித்து
பிறந்த இடமும் வாழ்ந்த தடமும்
அறியாமல் போக
இனவிருத்திக்காக மட்டும்
வந்தவளல்ல நீ!
மக்களை பெற்றெடுக்கும்
மாவேளையிலே
உன் மனதிற்கும் உரம் போடு..
சாதனையாளர் ஏட்டினில்
உன் பெயரும் ஏறிட
ஏதேனும் ஒரு வழி தேடு..
மும்மூர்த்திகள் அருள் பெற்ற
உன்னால்
உயிரை படைக்க மட்டுமல்ல
நம்பியோரை காக்கவும்
நாசத்தை அழிக்கவும் முடியுமென்பதை
உலகிற்கு மட்டுமல்ல
உன் உள்ளத்திற்கும் உரக்க கூறிடு..
முட்டுக்கட்டை நீயாக இருந்தால்
மட்டம்தட்ட
மானுடர் பலர்
வரத்தான் செய்வர்..
கட்டுப்பாடுகள் தேவை தான் தோழி !
ஆனால் வட்டம் போட்டு
அதற்குள்ளே சுற்றிவர
வாழ்க்கை ஒன்றும்
விளையாட்டல்ல ..
கணக்குபோட்டு சரிபார்க்க
காலசக்கரம் கணிதமும் அல்ல..
சென்றால் சென்றது தான்..
திரும்பி வராது..
உனக்குள் உறங்குபவளை தட்டி எழுப்பு..
சோம்பல் உன் உடலுக்கு என்றால்
ஒரு குடம் தண்ணீர்போதும் எனக்கு..
ஆனால் வாடியிருப்பதோ உன் உள்ளம்
எனவேதான் தேடுகிறேன் எழுதுகோல் மையை அதற்கு..
சட்டென்று வீழ்ந்து மறைந்துபோக
நீ ஒன்றும் மழைத்துளி அல்ல..
மண்ணுள் மறைந்துள்ள மாபுதையல்..
தோண்டு.. தோண்டு..
உனக்குள் உன்னையே தோண்டு
தேடி கண்டபின்பே
மற்றவர்க்கு ஒப்பில்லா ஒளியாவாய்..
அதுவரையில் பயனற்று தோற்றே போவாய்..
நிமிர்ந்த நன்னடை..
நேர்கொண்ட பார்வை..
இதழ்களில் புன்னகை ..
இதயத்தில் கருணை ..
இவை மட்டுமா பெண்ணின் அழகு..
சோர்வில்லா தைரியமும் தன்னம்பிக்கையுமே
பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் பேரழகு..
அதனாலே கூறுகிறேன் தோழி!
எட்டாக்கனி என்று எதுவுமில்லை..
நம்பிக்கையோடு முயன்றால்
தொடுவானம் கூட தூரமில்லை..