கள்ளிப்பால் கனவு -Mano Red

இந்த முறை நிச்சயம்
ஆண் பிறக்குமென
சாமியார் அடித்து சொன்னதில்
தலை கால் எட்டாத
மகிழ்ச்சி அவர்களுக்கு..!

முதலிலிருந்து
மூன்று குழந்தையும்
பெண் என்பதால்,
ஆணாய் பிறக்கப் போகும்
நாலாவதை பார்க்க
நாள் கணக்கில் காத்திருந்தனர்
மாமியார் சாமியார் சூழ....

பரம்பரை காக்க
துரை வரப்போகிறான் என
மாமியார் பரபரக்க,
இனிமேலாவது
புகுந்த வீட்டில்
தகுந்த மரியாதை இருக்குமென
மருமகள் வலி பொறுத்தாள்
போலிச் சாமியாரின்
கேலிப் பேச்சை நம்பி...!!

குழந்தை பிறந்தது
அழுகையும் உடன் பிறந்தது..,!
சுகமான பிரசவம்
பிற சவமாக தெரிந்தது போல
பிறந்தது பெண் என்பதால்...!!
கட்டியணைக்க காத்திருந்தவர்கள்
எட்டிக் கூட பார்க்கவில்லை..!!

தாயும்
பெண் சேயும்
அனாதையாய் வீடு திரும்ப
ஆரத்தியெடுக்க ஆள் யாருமில்லை,
சிறிது நேரத்தில்
தாயின் கண்ணீர் நிரம்ப
வெள்ளிச் சங்கில் ஊற்றிய
கள்ளிப்பாலுக்கு இரையானது சேய்..!!

ஆரவாரமின்றி
கோர உறவினர் சூழ,
பெண்ணாகி பிறந்ததால் என்னவோ
மண்ணாகி போனாள் அவள்..!
விட்டிருந்தால்
விஞ்ஞானி ஆகியிருப்பாள்,
பிழைத்திருந்தால்
பிழைக்க வைத்திருப்பாள்..!!

இப்படியாக
கள்ளிப்பால் ஊற்றியும்,
கழுத்தை நெறித்தும்,
நெல் உமி ஊட்டியும்,
கனவு காணும் முன்பே
பெண்ணால் ஒரு பெண்
புதைக்கப்படுவதும்
ஒருவித
இனப்படுகொலையே..!!

*******************************
உண்மைச்சம்பவம்:
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை

எழுதியவர் : மனோ ரெட் (10-Jun-15, 9:28 am)
பார்வை : 469

மேலே