எங்கேயும் எப்போதும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதி;இலக்கியத்தின் ஒரு வடிவம்;இலக்கியம் என்பது ஒரு கலை;சிறுகதையானது ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரசியமிக்கதாக அதாவது 100M ஓட்டப்போட்டி,குதிரை பந்தயம் போல் பயணிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.அவ்வகையில் இச்சிறுகதைக்குள் நுழையும் முன் மேலைநாட்டு சிறுகதையாசிரியர் 'ஸாமர்செட் மாம்' அவர்களின் கருத்தை முன்வைக்கின்றேன்."சிறந்த சிறுகதையில் நல்ல கதை அம்சம் இருக்க வேண்டும்.அது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மட்டுமே விவரிப்பதாக இருக்க வேண்டும்.ஒரு மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாக அதை அமைக்க வேண்டும் அது தனக்கென ஒரு தனிப்பண்பைக் கொண்டிருக்க வேண்டும்.படிப்போர் மனத்தில் ஆழப்பதிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்த வேண்டும்.ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தொய்வின்றி ஒரே சீராகச் செல்ல வேண்டும்."

'எங்கேயும் எப்போதும்'தலைப்பே ஒரு புதுமையான விடயத்தை கதை சொல்லப்போகிறது என்பதை உணர்த்திவிட்டது.மூவின கலாச்சார மக்களையும் மூன்று விதமான களத்தையும் உத்தியாக எடுத்தாண்டு உலகில் தினந்தோறும் நேரும் கற்பழிப்பு,கொலை,கொள்ளை போன்ற கொடுமைகளை கதை அரங்கேற்றுகிறது.அவை இன,மத,குலங்கள் பாகுபாடுயின்றி அணைத்து மதத்தினரும் பாவத்தை செய்கின்றனர்.உள்ளத்தில் நல்லண்ணம் செத்துவிட்டது.குறிப்பாக பெண்ணை உலகில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் இடத்தில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றாள் என்பதை கதை தெளிவாக உணர்த்துவதால் தலைப்போடு கருவும் பொருத்தமுற அமைகிறது.

நியூயார்க்கிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் தேவலாயத்தின் முன்பு காதலன் இராபர்ட்டால் அவன் காதலி சாரா பலாத்காரம் படுத்தப்பட்டு கொல்லப்படுதல்,;இலங்கையிலிருந்து தன் கல்யாண கனவுக்காய் வீடு கட்ட கரைகடந்து அரேபிய நாட்டுக்கு சென்ற பதினெட்டு வயதான ரிஸானா தன் எஜமானால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவள் கனவை விழிகளுக்குள் அழித்தல்;இந்தியாவிலுள்ள காளிகோயில் முன்னாலுள்ள வளாகத்தில் செல்வி காம மிருகங்களால் அடித்து கொல்லப்படுதல் என்பவற்றின் மூலம்
உலகை ஆட்சி செய்யும் மூவினை கடவுள்களின் உள்ளம் மனிதனைப் போல் கல்லாகிவிட்டதா? பார்வை குருடாகிவிட்டதா? தன் கண்ணெதிர நேரும் கொடுமையைக் கூட இறைவன் தட்டிக்கேட்காமை ஏன் என்று கேள்வி எழுப்புவது மிக மிக அருமை என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்று விதமான நாடுகளை கையாண்டு கதை அமையப்பெற்றுள்ள போதிலும் வேற்றுமொழி,வட்டார மொழி,பிரதேச கிளை மொழி என்பவற்றை கையாளாமல் கதாசிரியர் விட்டது ஒரு வாசகனை கவரும் உத்தியே தவிர குறை ஒன்றாகயில்லை.காரணம் எழுத்து மொழியில் ஒரு படைப்பு அமைந்துள்ள போதுதான் எத்தகைய வாசகன் படித்தாலும் கதையின் கருவை புரிந்து கொள்ள முடியும்.மாறாக பேச்சு மொழியில் அமைந்தால் அந்த பிரதேச மக்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்துதான் ஆசிரியர் கதையை எழுத்து மொழியில் பூரணமாய் படைத்துள்ளார் என்பது அவருடைய கலை ரசனையையும் அவருடைய அனுபவத்தையும் எடுத்துரைக்கிறது.

கதையின் போக்கில் ஒரு குறை தென்பட்டது.இலங்கை,இந்தியா ஆகிய நாடுகளில் நேரும் சில அசாதாரண நிலைமைகளை கதையில் சொல்லப்பட்டுள்ளது,குறிப்பாக கர்த்தால்,ஒடுன்குப்புற மலசல கூடம் என்பன ஆனால் நியூயார்க்கில் நேரும் பல அசாதாரண நிலைமைகள் உண்டு அதையும் சொல்லியிருக்கலாம் இது குறையாக காணப்பட்டாலும் கதையுள்ள ஏனைய சிறப்புக்கள் அதனை நிவர்த்திசெய்கின்றது,

இறுதியில் கதையில் ஆசிரியரால் விளிக்கப்பட்டுள்ள"“கடவுளே.. உனக்கு இரக்கம் என்பதே இல்லையா..?” என்று.எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டே,அந்தந்த நாட்டு மக்கள் படித்துக்கொண்டும்,பார்த்துக் கொண்டுமிருந்தனர்."மேற்படி வரிகள் மூலம் உலகில் என்ன கொடுமை நடந்தாலும் வாழும் மக்கள் கைகட்டி வேடிக்கைதான் பார்ப்பார்கள் தவிர தட்டிகேட்டு அநிதியை ஒழிக்க யாரும் முன் வருவதுவில்லை இந்நிலையே எங்கேயும் எப்போதும் என்று சொல்வதால் கதையின் கருவிற்கும் தலைப்புக்கும் குறிப்பாக ஆசிரியருக்கும் மகுடம் சூட்டுகின்றது.திரு.அபி அவர்கள் இன்னும் பல கதைகள் எழுத வேண்டும் எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் மேற்படி திறனாய்வை முற்றுப்பெறச் செய்கிறேன்,


மேற்படி திறனாய்வு கட்டுரை எனது சொந்த படைப்பாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Jun-15, 8:12 am)
பார்வை : 1688

மேலே