மீட்போம் வாரீர்

மீட்போம் வாரீர்
பாவலர் கருமலைத்தமிழாழன்

நாடின்று போகின்ற போக்கு தன்னை
நாமின்னும் வாய்மூடிப் பார்த்தி ருந்தால்
வீடின்றி வாசலின்றி நிற்ப தற்கு
விரலளவு நிழல்கூட இருக்கா திங்கே
காடின்றிப் போனதுபோல் நதிகள் கூட
கண்முன்னே ஓடினாலும் மாநி லங்கள்
ஊடிநின்று கைகலக்கும் சிக்க லாலே
ஊருக்குப் பயனின்றிப் போகும் நாளை !

மலைபிளந்து விற்கின்றார் பொன்வாத் தென்று
மணலள்ளி ஆறுகளை மலடு செய்தார்
விலைபேசி விளைநிலத்தை மனைக ளாக்கி
விற்கின்ற கொடுமைக்கும் மேலாய் இன்று
அலைகடலைக் கடந்துவந்து வணிகப் பேரால்
அடிமைசெய்த அன்னியர்போல் நாடாள் வோரே
விளைநிலத்தைப் பறிப்பதற்குச் சட்டம் செய்து
விலங்கிட்டார் உழவர்க்கே! தாரை வார்க்க !

அரசுதர வேண்டியநற் கல்வி தன்னை
ஆயிரமாய் விலைபேசித் தனியார்க் கீந்தே
வரவிற்காய் உயிர்குடிக்கும் மதுவை வீதி
வழிந்தோட விற்கிறது கடைகள் வைத்தே
நரபலிக்கு மதச்சாதி பகைபெ ருக்கி
நன்றாக வளர்க்கிறது ஊழல் தன்னை
இரவலராய் நாமாகு முன்னே நாட்டை
இழிவுசெய்வோர் கரத்திருந்து மீட்போம் வாரீர் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (17-Jun-15, 12:38 pm)
பார்வை : 110

மேலே