வயலும்இல்லை,வாழ்வும்இல்லை-Mano Red
எந்த கிரகத்தில் இருக்கிறோமோ.?
இந்த கிரகம் பிடித்து ஆட்டுகிறது,
வாடிய பயிரைக் கண்ட போது
வாடிய காலமெல்லாம்
வழக்கத்தில் இல்லை..!!
பசி போக்கிய வயலின்
பல்லைப் பிடித்துப் பாரத்து
பங்கு வைப்பது சரியா...??
அடிமையாகி பிழைப்பதற்கு
அடி வயிற்றில் அடிப்பது முறையா..??
பச்சைப் புல் என்பது
பச்சக் குழந்தைக்கு சமம்..!!
பிஞ்சு புல்லுக்கு
நஞ்சு உரமிட்டு
நட்டு வைப்பதற்கு பதில்
நசுக்கி கொலை செய்வது மேல்...!!
விளை நிலங்கள் இப்போது
வெறும் நிலமல்ல ,
ரசாயன விசம் தூவிய
மண்புழுக்களின்
சுடுகாடுகள் ...!!
முண்டாசு கட்டிய விவசாயியோ
முக்காடு சாத்திக் கொண்டான்,
முப்போகம் விளைந்த வயலும்
மலடியாகி விட்ட கவலையில்
புல்லுக்கு ஏங்கித் தவிக்கிறது..!!
வயலும் வாழ்வுமாய்
வகுந்து வாழ்ந்தவர்கள்
வறுமையில் அலைகிறார்கள்,
நாற்று நட்ட வயல்களில் இப்போது
நாதியின்றி திரிகிறார்கள்..!!
சோறு போட்ட நிலத்தையெல்லாம்
கூறு போட்டு விற்கவே
கூலிப் படைகளாக
காத்து இருக்கும் தரகர்கள்
நிலம் தின்னிகள்....!!
விளை நிலமெல்லாம்
வீடாக மாறியது,
கரும்பு இருந்த காட்டில்
இரும்பு சூழ் பேய் குடி வந்தது,
நகரம் ஆக்க முனைந்தே
நரகம் ஆக்கிவிட்டனர்...!!
கடைசியில் எல்லோரும்
காசுக்காக மட்டுமே
காடு கரைகளை அழித்து,
கஞ்சிக்கு வழியின்றி
கலங்கி நிற்கப் போகிறோம்..!!