மாசாணம்

புதுப் பள்ளிக்கூடத்தில் முதல் நாள் அனுபவம். என்னைப் போன்ற அரசாங்க அலுவலில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இது போன்ற முதல் நாள் அனுபவம் பல முறை வாழ்வில் வந்து போகும். அதுவும், கண்டிப்பான பெற்றோர்கள் எனில் பணி ஓய்வு பெறுவதற்குள் ஓரளவிற்கு தமிழ் நாட்டையே ஒரு சுற்று சுற்றி வந்து விடலாம்.
முதல் நாள் என்னைப் பள்ளியில் சேர்க்க அம்மா என் சான்றிதழ்களுடன் என்னையும் கூட்டிக் கொண்டு செல்வாள். என் உயரத்திற்கு மேல் தொங்கும் நீளமான துணிப் பையின் தோள் பட்டையின் நடுவில் ஒரு பெரிய முடிச்சு போட்டு என் உயரத்திற்குச் சுறுக்கி, முந்தைய பள்ளியில் கொடுத்த நோட்டில் எழுதாத பக்கங்களைக் கிழித்து தைத்த ஒரு புது நேட்டையும், பென்சில் டப்பாவையும் அந்தப் பையினில் வைத்திருப்பாள். நெற்றியில் மெலிதான திருநீற்றுக் கீற்றுடன், தோளில் தொங்கும் பையின் பட்டையின் போட்ட முடிச்சு ஒரு முயலின் காது போல என் வலது காதில் உரச, அவள் பின்னாலேயே பணிவுடன் செல்வேன். பிறகு தலைமை ஆசிரியருடன் ஒரு சந்திப்பு. ஒரு சிறிய குடும்ப விசாரிப்பு. கிராமத்துப் பள்ளிக் கூடமெனில் விசாரிப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அலுவலக உதவியாளர் என்னை அழைத்துக் கொண்டு எனக்கான வகுப்பு ஆசிரியரிடம் “நியூ அட்மிஷன், சார்” என்று ஒரு ரொபோ போல கூறிவிட்டுச் சென்று விடுவார். ஆசிரியர் அனுமதித்த பிறகு தயக்கத்துடன் வகுப்பினுள்ளே செல்ல ஏதாவது ஒரு மாணவன் மட்டும் தன்னருகில் வந்தமர செய்கையால் அழைத்து, முகம் மலரச் சிரிப்பான். கிடைத்தாயிற்று அந்தப் பள்ளிக் கூடத்தில் என் முதல் நண்பன்.
இப்படிக் கிடைத்த நண்பர்களுள் ஒருவன் தான் மாசாணம். எங்கள் வகுப்பிலேயே மிகவும் அழகானவன் அவன் தான். அவன் வேகமாக நடக்கும் போது அடர்த்தியான கோரை முடி நெற்றியில் மெல்லச் சரிய, தன் இடது கையால் வெகு அலட்சியமாக மேலே கோரி விடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மாநிறம். திட்டமான உடல் வாகு. அந்த வயதில் நாங்கள் அனைவரும் விருப்பி ஏற்கும் அனைத்து தகுதிகளும் அவனிடம் இருந்தது. அவனுக்கு பெற்றவர்கள் இல்லை. சிறு வயதிலிருந்தே அவனை எடுத்துத் தன் மகனைப் போல வளர்த்துவரும் சாரம்மாதான் அவனுக்கு அனைத்தும். அவனுடைய நெருங்கிய நண்பர்களுள் நானும் ஒருவன் என்ற வகையில் அவனைப் பற்றி அதிகம் எனக்குத் தெரியும். எங்களைப் போல எந்த ஒரு விஷயத்தையும் சரி அல்லது தவறு என்று விரல் தொடும் பழக்கம் அவனிக்கில்லை. கணக்கற்ற கேள்விகள் anஅன்னாளிலேயே அவனிடம் இருந்தது.
“மாசாணம், ஸ்கூலுக்கு நேரமாச்சுய்யா” என்று சாரம்மா குரல் கொடுத்துக் கொண்டே அவன் சுருண்டு படுத்திருந்த இடத்தைக் கடந்து போனாள். பாத்திரம் கழுவும் சப்தம் கேட்டு மறுபடியும் திரும்பிப் படுத்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். இதைக் கவனித்த சாரம்மா “மாசாணம் எந்திரிய்யா” என்று மீண்டும் குரல் கொடுத்து அவன் போர்த்தியிருந்த அவளின் கிழித்த புடவையை உருவி விட்டு “வேகமா குளிச்சிட்டு சாப்பிட வாடா” என்றாள். இப்போது சாரம்மாவின் குரலில் கொஞ்சம் கண்டிப்பு தெரிந்தது.
அரைத் தூக்கத்துடன் எழுத்து நேராக கழிப்பறைக்குச் சென்றான். கழிப்பறை என்றவுடன் தூய்மைக் கேடான இடம் என்ற அவன் நண்பர்களின் ஒட்டு மொத்தக் கருத்தை ஆமோதிப்பதாக இருந்தது அவன் வீட்டு சிறிய கழிப்பறை. துருப்பிடித்த தகரக் கதவு. அதில் ஆங்காங்கே உதிர்ந்து போன ஆணிகளின் வெற்றிடம். அதன் வழியாக நுழைந்த கற்றையான சூரிய ஒளி சுவற்றில் விழ தெளிவாகத் தெரிந்தது மற்றக் குடித்தனத்தில் இருக்கும் விடலைப் பையன்கள் அங்கு எழுதி வைத்த சில சங்கேதக் குறியீடுகள், இதயத்தைக் இரண்டாகக் கிழித்து முறிந்து போன அம்புகள், ரகசியமாக கிறுக்கி வைத்த கை பேசி எண்கள்
“இன்னுமோர் ஆப்பம் வைச்சுக்கொய்யா. வளர்ர பையன் நல்லா சாப்பிட வேண்டாமா”? சாரம்மாவின் குரலில் வழக்கம் போல நூறு சதவிகிகத அன்பு தெரிந்தது. “ ஐய்யா, உனக்கும் ஒன்னு வைக்கவா? சொதியும் தேங்காப் பாலும் இருக்கு” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே என்னிடம் “இன்னைக்கு மாசாணத்தின் பொறந்தநாளுய்யா. இப்போதான் எல்லாம் நடந்தது மாதிரி இருக்குது. கண் மூடி கண் தொறக்கரத்துக்குள்ளே பதினாறு வருஷம் போயிடுச்சு” என்றாள். திண்ணையில் அமர்ந்து பாடப் புத்தகங்களைச் சரிபார்த்து துணிப்பையில் அடுக்கிக் கொண்டிருந்த மாசாணத்தின் கவனத்தை ஈர்த்தது வாசலில் நின்ற விலை உயர்ந்த கார். மாசாணத்தை நோக்கித்தான் அந்த நவநாகரீகச் சீமாட்டி வந்து கொண்டிருந்தாள். “சாரம்மா இருக்காளா” அந்தச் சீமாட்டியின் கேள்வியின் ஆளுமையும் அதிகாரமும் மாசாணத்தை நொடியில் தடுமாற வைத்தாலும் , அதைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ம்” என்று சுறுக்கத்துடன் வீட்டினுள் சுட்டிக் காண்பித்தான்.
சாரம்மாவும் அந்தச் சீமாட்டியும் வெகு நேரம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து கண்ணைத் துடைத்துக் கொண்டே அவனை நேக்கி வந்தாள் சாரம்மா. “மாசாணம், ரொம்ப நாளா உங்க அம்மாவைப் பத்திக் கேட்டுக்கிட்டே இருந்தயே, இவங்கதாண்டா உங்க அம்மா. எல்லா விபரத்தையும் அவங்க சொன்னாங்க. அவங்க சொன்ன விபரத்தைப் பாத்தா நம்பர மாதிரிதாய்யா இருக்கு” என்று தடுமாறியபடி வார்த்தைகளை தேடித் தேடிப் பேசினாள் சாரம்மா. தன் கணவரிடம் இருந்து பழைய நாளிதழில் சுற்றிய கற்றை நோட்டுக் கட்டுகளை சாரம்மாவின் கைகளின் திணித்தாள் அந்தச் சீமாட்டி. 16 வருஷங்கள் தன் பிள்ளையாக வளர்ந்தவன் இனிமேல் தனக்கில்லை என்ற உண்மையை சாரம்மாவால் துளியும் ஜீரணிக்க முடியவே இல்லை. மாசாணத்தின் பாடப் புத்தகங்கள், அவன் உடைகள், பள்ளிச் சான்றிதழ்கள் என்று பலவற்றை அதிகாரத்துடன் கேட்டு வாங்கி முழுக் கவனத்துடன் பரிசீலனை செய்தாள் அந்தச் சீமாட்டி.
அவனுடைய பள்ளிச் சான்றிதழைப் பரிசீலித்த சீமாட்டி, “எதுக்கு இந்த ஜாதியை போட்டிருக்கீங்க” என்ற கேள்விக்கு பதில் ஏதும் கூற முடியாமல் குற்ற உணர்ச்சியில் இருந்தாள் சாரம்மா. கோபத்துடன் அந்தச் சீமாட்டி தன் கணவரை நோக்கி “ இதோ பாருங்க, முதல் வேலையா மாற்று ஜாதிச் சான்றிதழுக்கும், புதுப் பெயருக்கும் விண்னப்பிக்க வேண்டும். அப்புறம்தான் எல்லாம் சரியா” என்று கேட்டாள்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மாசாணம், சாரம்மாவை நோக்கி வந்தான். அவளை தன் வலது கையால் இறுக அணைத்துக்கொண்டு “இதுதான் சாரம்மா. மொதல்லே இருந்து கடைசி வரை இவங்கதான் என்னோட அம்மா. இதிலே எந்த மாத்தமும் இல்லை. இனிமேலும் இருக்காது. யாருக்காகவும், எதுக்காகவும் நான் எதையும் மாத்திக்க முடியாது .உங்களின் கழிப்பறையையே நொடியில் சுத்தம் செய்யும் சாரம்மா, அவளோட வீட்டை கூட்டிப் பெறுக்கி எவ்வளவு சுத்தமா வைச்சிருப்பாங்க? இனிமே இங்கே வந்து இது மாதிரி குப்பைகளை போடாதீங்க” என்று கூறி. சாரம்மாவின் காலடியில் கிடந்த கற்றை நோட்டுக்களை அந்தச் சீமாட்டியின் கைகளில் திணித்து வாசலைக் காட்டினான் மாசாணம்.

எழுதியவர் : பிரேம பிரபா (20-Jun-15, 5:56 pm)
பார்வை : 248

மேலே