ஒரே கதைக்குள் இரு கதைகள்

- அதிகாலை மூன்று மணி. ரவி அயர்ந்து தூங்குறான், இதுவே தக்க சமயம் தப்பித்துக் கொள்ள என்று முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியே வருகிறான் செந்தில். மரத்தடியில் நிறுத்தி இருக்கும் காரை கிளப்பியபடி தப்பித்தான்.
+ தப்பித்தே விட்டேன் என்று நினைத்தால், இல்லவே இல்லை, சரியாக மாட்டிக் கொண்டதாகவே தோன்றிற்று. கொஞ்சம் தைரியம் இருந்தும், பயமே மேலோங்கி நிற்கிறது. என்னையும் அறியாமல் காரை விரட்டுகிறேன். இருண்ட ரோட்டில் மின்னல் ஒளியாக பரவித் திரிகிறேன்.
- முடியாது என்று எவ்வளவு சொன்னாலும், சொந்தமும், சொத்தும் விட்டு விலகி விடக்கூடாது என்று செந்திலின் அம்மா வற்புறுத்தி, இந்த திருமண ஏற்ப்பாட்டை செய்துவிட்டாள். இன்று காலை 730 க்கு திருமணம் நடப்பதாய் இருந்தது. தப்பித்துவிட்டான்! நிம்மதி பெருமூச்சு விட்டபடி செல்லும்போது, ஒரு சந்தில் இருந்து தீடீர் என்று ஒரு ஸ்கூட்டி வெளியே வர. செந்திலால் பிரேக் போட முடியாமல் மோதி, தலையில் பலத்த அடி பட்டு, சித்த பிரம்மை கலங்கி மயங்கி கிடந்தான். ஸ்கூட்டியோடு அவளும் தூக்கி எறியப் பட்டாள்.
+ டமார் என்று இடித்ததால். காரை நிறுத்தி விட்டு, பயத்தை அடக்கிக் கொண்டு, இறங்கினேன். ஏம்பா பாத்து வரமாட்ட? இப்படியா வந்து மோதுவ? என்றார் ஒருவர். அய்யா, ஏதோ ஒரு ஞாபகத்துல வந்துட்டேன், தப்புதான் என்று மன் னிப்பு கேட்டேன். பெயரைச் சொல்லி விவரத்தைச் சொன்னேன். ஒரே ரத்த வெள்ளம், குமட்டிக் கொண்டு வந்தது.
- சிறிது நேரம் கழித்து வேகமாக இரு புறமும் தலையை ஆட்டி விட்டு, மெல்ல அருகில் சென்று பார்த்தான் செந்தில். வட்டமான முகம், பால் நிறம், பச்சை நிறச் சுடிதார், சிரித்த படி சரிந்து கிடக்கிறாள். பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. எனக்காக, என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடவுள் அனுப்பிய தேவதையாய் உணர்ந்தான், வாய் விட்டுச் சிரிக்கிறான் . மயங்கி கிடக்கிறாள், ஆனால் உடல் மட்டும் துடியாய் துடிக்கிறது.
+ தம்பி, ஒன்னும் பயப்படாதீங்க, வாங்க வந்து ஒரு கை பிடியுங்க என்றார். நடுக்கத்தோடே நாடினேன். இருவரால் பிடிக்கவே முடியவில்லை. சரிந்து சரிந்து போகிறது. லேசாக மே மெ என்று முனகல் சத்தம் வேறு. என் கைகள் பட்டவுடன் உடல் திமிறுகிறது.
- மென்மையான தேகம், மல்லிகை பூ வாசம் செந்திலை வசீகரித்தது. முடிவே செய்துவிட்டான், இவளையே மனமுடிப்பதென்று! கண்கள் மூடியே கோமா நிலையில் இருக்கிறாள். கண்கள் திறப்பதர்க்குள் தாலியே கட்டிவிட்டால் என்ன? என்று ஒரு கிறுக்கு பிடித்தவன் போல எண்ணலானான். காரின் பின் கதவை திறந்து வைத்தான்.
+ கை தாங்களாக, அனைத்தபடி காரின் பின் சீட்டில் படுக்க வைத்தேன். வைத்திருந்த துணியால் மூடிவிட்டேன். கால்களை ஒரு கயிறு கொண்டு கட்டிவிட்டேன். வயிறு மேலும் கீழும் சுருங்கி விரிந்தபடியாய் காட்சியளித்தது.
- எப்படியோ காரில் ஏற்றியாகி விட்டது. வீட்டிக்கு செல்லலாம் என்று முடிவு செய்து முன் சீட்டில் ஏறினான். இதுபோல் ஒரு வாய்ப்பு என்றுமே அமைந்தது இல்லை, ஆகவே லேசான பயம் வேறு. பிரச்சனை செய்யாமல் வருவாளா என்ற கவலை வேறு.
+ காரில் மென்மையான பாடல்கள் கசிவிட்டு செல்லும் பொழுது, பின் கண்ணாடியில் பார்க்க பார்க்க, இந்த ஜீவன் மேல் அன்பும், ஆசையும் பொங்கி வந்தது. முகம் வாடி இல்லை ஆனால் பாவமாய் பட்டது. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இன்று எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும், வாழ்க்கையை அர்பணிக்க இருப்பதற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தேன்.
- நிகழ இருந்த கல்யாணக் கவலை கொஞ்சமின்றி ஒரு பைத்திய காரனைப் போல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்திருப்பது செந்திலுக்கு தீராக் கஷ்டம் வருமென்று புரிந்து கொள்ளாமல் புறப்படுகிறான். இந்த செய்தி மட்டும் பெண் வீட்டாருக்கு தெரிய வரும்போது, முதல் காரியமாக இவளின் தலையை வெட்டி எரிவது உறுதி!
+ கடிகாரத்தை நோக்கியபடி ஒரு கூட்டமே என் காரின் வரவை நோக்கி காத்திருக்கிறது. இப்போது இருப்பது பழைய வீடு, அருகிலோ நாங்கள் ஆசை ஆசையாக கட்டி முடித்திருக்கும் புது வீடு. குடி புக குடும்ப ஜோசியர் தோஷ நிவர்த்தி சொன்னபடி ஆடோ, கோழியோ பலி கொடுக்கவேண்டுமாம். இன்னும் அது நடந்தபாடில்லை.
- இன்னும் ஒரு மணி நேரமே வீடு சென்று சேர்வதற்கு. இப்போதே அங்கு கலவரம் அரங்கேறி இருக்கும் என்று தோன்றிற்று. மொபைல் எடுத்து அன்னை தந்தைக்கு விபரத்தை பற்றி விலக்கினான். தனக்கு திருமணமே வேண்டாம் என்பதையும் தீர்க்கமாக எடுத்துரைத்தான், செந்தில்!
+ அய்யர் முதல் கட்டிட சித்தாள் வரை குழுமி இருந்தனர். தோரணங்கள் ஒரு புறம், பிளாஸ்டிக் இருக்கைகள் , வாழை மரம், சீரியல் செட் மற்றும் பாவமாய் ஒரு பசு மாடு மேய்ந்த புல்லை மேய மனமின்றி மேய்ந்து கொண்டிருந்தது.
- மணியோ 430, மாப்பிள்ளை செய்த காரியம் அறிந்த பெண் வீட்டார், செந்திலின் வீட்டில் முற்றுகை இட்டு இருந்தனர். நெருங்கிய சொந்தமாய் இருந்தும் ஆவேசமாய் கொந்தளித்தனர்.
+ எப்படியோ நினைத்தது நினைத்தபடி, பின் சீட்டில் இட்டு பிரச்சனை ஏதுமின்றி வீட்டின் தெருவடைந்தேன்.
- கார் வந்து நின்றது, செந்தில் இறங்கிய அடுத்த நொடி, திபு திபுவென்று பெண் வீட்டார் காரை நோக்கி ஓடி வந்தனர். செந்திலை முற்றுகை இட்டு, மறுமொழி கேட்டனர். செந்திலோ மிகத் தெளிவாக மணந்தால் காரில் உள்ள பெண்ணையே மணப்பேண், இல்லையேல் பிரமச்சாரியாக மீதிக் காலத்தை களிப்பேன் என்றான். செந்திலை கீழே தள்ளிவிட்டு, ஆத்திரத்தோடு யாருடி நீயி, சொத்துக்கு ஆசைப் பட்டா வந்த, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் சாவு எங்க கையில தாண்டீனு, கோமாவுல இருந்த குனவதியிடம் அலறிக் கொண்டே, பின் கதவை திறந்தனர்.
+ அலேக்காக தூக்கி, கீழே இறக்கி, வைத்திருந்த கொடக் கத்தி கொண்டு ஒருவன் வெடுக்கென்று கழுத்தைக் கீறினான். ரத்தம் பீச்சி அடிக்க, அதைப் பார்த்த நான் மயங்கி ஒரு புறம் விழுகிறேன். முண்டத்தைப் பிடித்து இழுத்தபடி, நாக்கை மடித்து கொண்டு, புது வீட்டின் நான்கு மூளையையும் ரத்தம் பதிய முட்டி முட்டி எடுத்தனர். தோஷப் பரிகாரம் நிறைவேற்றப் பட்டு, தலையில்லா முண்டத்தை வீசி எறிந்தனர்!!!