ஐடீ ஐயப்பன் அறை எண்-111
![](https://eluthu.com/images/loading.gif)
உலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஊர் சுற்றுவார்கள்- அவர்கள் யார்? கடிகார முட்கள்.
ஆம்..மேலே சொன்னது போல உலகமே உறங்கியிருந்தது கடிகார முட்கள் சத்தம் மட்டும் 'டக்..டக்', 'டக்..டக்' என்று தொடர்ந்து கேட்டு கொண்டிருக்க
'லொள்..லொள்..லொள்..
பவ்..பவ்..பவ்'வென்று இரவு முழுவதுமாய் ஓயாது குரைத்த நாய்களின் சத்தம் அடங்கி போயிருந்தது.
மெத்தை மீது அங்கும் இங்குமாய் புரண்டவன் 'டப்..டப்..டப்'என்று தன்னைத்தானே கைகள் மீதும் முதுகின் மீதும் அடித்துக் கொண்டிருக்க
லேசாக குளிர்காற்று ஜன்னல் வழியே அறைக்குள்ளே வீசியது.
பறவைகளின் சத்தம் 'க்கா..கா..கா..கீச்..கீச்..கீச்'
என்று காதுகளில் நுழைந்து விடிந்ததாய் மூளைக்கு தகவல் கொடுக்க திடுக்கிட்டு எழுந்தான்.
கடிகாரத்தில் சிறிய முள் நான்கையும் பெரிய முள் ஒன்பதையும் காட்டியது.
எழுந்தவன் 'ஆவ்', 'ஆவ்' என்று இரண்டு முறை சத்தமாக கொட்டாவி விட்டு ஜன்னல் வழியே வெளுத்த வானத்தை பார்த்தபடியே மொபைல் போனை கையில் எடுத்து 'வாட்ஸ் அப்', 'பேஸ்புக்', 'டிவிட்டர்' என எல்லா சமூக வலைதளங்களை திறந்து பார்க்க 'டிங்.டிங்.டிங்'கென்று பீப் டோன் கேட்க எல்லாம் திறந்து பார்த்துவிட்டு ஒரு தளத்தில் 'குட் மார்னிங்' என்றும் இன்னொரு தளத்தில் 'காலை வணக்கம்' என்றும் பதிவிட்டான்.
சட்டென்று தலையணையை உற்று பார்த்தான் அதில் கொத்தாக கொட்டியிருந்த தலைமுடிகளை பார்த்ததும் 'வந்தா மல போன முடி' அந்த வசனம் தேவையில்லாமல் அவன் மூளையை தொட்டுச் சென்றது.பிறகு மொபைலில் 'க்ளாக் ஆப்சனில்' வெறும் ஐந்து நிமிடத்திற்கு மட்டும் அலாரம் வைத்துவிட்டு சுவரை ஒட்டி அந்த தலையணை போட்டு தலைகீழாக நின்றான்.அதன் பிறகு அலாரம் அடிக்குமா? அடிக்காதா? என்ற சந்தேகம் வேறு, அலாரம் அலறும் முன் அவன் அலற.. ஒரு வழியாக அலாரம் 'கிகீக்' 'கிகீக்' என்று அலறியது பூமியை நோக்கி தன் கால்களை இறக்கினான்.
இப்படி விசித்திரமாக இருக்கும் இவன் யார்? இவனுடைய பிரச்சினை தான் என்ன?
இவன் பெயர் ஐயப்பன். அறை எண் - 111, இவனிருக்கும் இந்த 'காக்கா' விடுதியில் எல்லோரும் இவனை 'ஐ.டீ.ஐயப்பன்' என்று தான் அழைப்பார்கள்.
இந்த விடுதிக்கு 'காக்கா விடுதி' என்ற பெயர் வர காரணம் மனிதர்களை விட விடுதியின் மரங்களில் காகம் இனம் தான் அதிகம் குடியிருந்தது எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்'.
ஐ.டீ.ஐயப்பன் - நிஜமாகவே இவன் ஐ.டீ பிரிவில் 'டெவளெப்பராக' வேலை செய்கிறான். ஐ.டீ. வேலைக்கு சிபாரிசு மற்றும் பயிற்சிகாக இவனை தேடி வருபவர்கள் அதிகம்.இதன் காரணமாகவே சாதரண ஐயப்பன் ஐ.டீ. ஐயப்பனாக மாறி போனான்.
இவனுடைய முதல் பிரச்சினை முடி..இரண்டாம் பிரச்சினை மூட்டைப் பூச்சி. ஆமாம், மூளை அதிகம் இருந்தால் முடி இருக்காது என்பார்கள் அதுபோல எல்லோருக்கும் ஒரு நாளைக்கு சாதரணமாக
100 முடிகள் கொட்டினால் இவனுக்கு 300 முடிகள் கொட்டும் தினமும் தலையணை பார்த்து தலையில் கையை வைத்துக் கொள்வான்.
'மூட்டைப் பூச்சிக்காக வீட்டை எரித்தான்' என்பார்கள் ஆமாம், அதனோடு படும் பாடு பெரும் பாடு...எல்லோருடைய அறையிலும் ஒன்று இரண்டு மூட்டைப் பூச்சிகள் இருக்க இவன் அறையில் மட்டும் கூட்டம் கூட்டமாக இருந்தது.
இதனால் இரவு முழுவதும் தூங்காமல் மூட்டைப்பூச்சி கடிக்கும் இடத்தில் 'டப்..டப்..டப்' என்று தன்னைத்தானே அடித்துக் கொண்டான். தினமும் காலையில் ஐந்து நிமிடம் தலைகீழாக நின்றால் முடி வளரும் என்று யாரோ சொல்ல தினமும் இப்படி விசித்திரமாக தலைகீழாக நிற்கிறான்.
பிரச்சினையை சமாளிக்க 'கூகுள்' செய்தான்.'முடி வளர' என டைப் செய்தான் அது பல வகையான மருந்து
பொருட்களை காட்டியது அதில் ஒரு 'ஸ்ப்ரே' வை ஆன்லைனில் புக் செய்தான். அடுத்து 'மூட்டைப் பூச்சியை ஒழிக்க' என டைப் செய்து பூ வாசனை கலந்த 'ஸ்ப்ரே' வை புக் செய்தான். இரண்டும் வீட்டை அடைந்தது இன்றோடு முடி பிரச்சினை தீர்ந்தது மூட்டைபூச்சி ஒழிந்தது என சந்தோஷம் அடைந்தான்.
ஆனால் அதை உபயோகம் படுத்த அடுத்த நாள் இன்னும் அதிகமாக கொத்து கொத்தாக தலைமுடி கொட்டியது.மூட்டைப் பூச்சியும் ஒழிந்த பாடில்லை.
மன உளைச்சல் அடைந்த ஐ.டீ.ஐயப்பன் தலைமுடி இல்லாமல் தான் அழகில்லை இவ்வுலகில் வாழ தகுதியில்லை என்று எண்ணி தற்கொலை செய்ய மூட்டைப் பூச்சி மருந்தை எடுக்க...'உஷ்ஷ்ஷ்' என்று பயங்கரமாக பேய்க்காற்று வீசியது 'டம்..டம்' என்று ஜன்னல் கதவுகள் திறந்து மூடியது.அறைக்குள் குளிர்க்காற்று வீசியது அவனுக்கு உடல் சிலிர்க்க, எதிரில் நிழல் போல ஓரு உருவம் தோன்றி 'நான் செய்த தவறை நீயும் செய்யாதே' என்றது...பயத்தில் என்னை எதுவும் செய்து விடாதே என அலறினான்.
பயம் வேண்டாம் நான் உன்னை எதுவும் செய்ய போவதில்லை என்றது.
உடனே யார் நீ? என்று கேட்டான்.
அழுதவாரே நான் ஒரு முட்டாள் என் பெயர் சரவணன்.5 வருடம் முன்பு இதே அறையில் தங்கியிருந்தேன் உன்னை போலவே முடி..மூட்டைப் பூச்சி பிரச்சினையால் அவதிபட்டேன்.
தலையில் முடியில்லை என்பதற்காக 8 வருட காதலை மறந்து என்னை கைவிட்டாள். அதை தாள முடியாத நான் இதே அறையில் மூட்டைப் பூச்சி மருந்தை குடித்து உயிரை விட்டேன்.
அதன் பிறகு தான் எனக்கு உண்மை புரிந்தது இந்த பிரச்சினைக்கு காரணம் சுத்தமின்மையும்,தாழ்வு மனப்பான்மையும் தான் என்று.
ஆமாம், உன் அறை சுத்தமாக இல்லாததால் தான் மூட்டைப் பூச்சிகள் குடியேறுகிறது..அவை இரவு முழுக்க உன்னை கடிக்க நீ உன் உறக்கம் தொலைக்க மன உளைச்சலால் உன் தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. தலைமுடி இல்லாததால் உன் தன்னம்பிக்கையை நீ இழந்து தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு வாழ்வில் சுகமின்றி தவிக்கிறாய்.
இது தான் உண்மையான பிரச்சினை என்று சொல்லி சரவணனின் ஆவி மறைந்தது.
'சுத்தம் சுகம் தரும்' என்ற வாசகத்தை சாலையோர சுவரொட்டியில் பார்த்து தனக்குத்தானே புன்னகை செய்து அறையை சுத்தம் செய்து வண்ணம் பூச தேவையான பொருட்களை கையில் வைத்திருந்தான் ஐ.டீ.ஐயப்பன்.
இப்போது சொல்லுங்கள், உலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஊர் சுற்றுவார்கள்- அவர்கள் யார்? கடிகார முட்களா? யார் சொன்னது. 'இ..இ..இ' இல்லை இல்லை!
பேய்கள், ஆவிகள், பிசாசுகள் தான் இரவில் ஊரைச் சுற்றும் புரிந்ததா..!!!