விளம்பரத் துரோகிகள் - சந்தோஷ்

.மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம்..!
1975 ம் ஆண்டு இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி.../ ஆடப்பட்ட முதல் போட்டியில்201 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விப்பெற்ற இந்திய அணிதான் பின்னாளில் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று ஒருநாள் கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை கைப்பற்றியது. அதிலிருந்துதான் இந்திய தேசத்தில் ஒரு பைத்தியமான மனநிலை இந்திய மக்களிடம் பரவியது. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள்... அவர்கள் சொல்வதே மந்திரம் என்றும் கருதினார்கள்.

இத்தகைய மூடநம்பிக்கை மக்களிடம் பரவிய அதே நேரம் இந்தியத் தேசத்தை குறி வைத்து வணிக வியாபாரத்தை ஆதிக்க சக்தி மிக்க நாடுகள் தங்களது நாட்டில் விற்பனைக்கு உட்படுத்த முடியா குப்பைகளை பளபள பாக்கெட்டில் அடைத்து விற்க .. இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்திய மக்களின் மூட நம்பிக்கை பலவீனத்தை தந்திரமாக கையாண்டது. இதே காலகட்டத்தில் தான் தொழில் நுட்ப புரட்சியில் ஊடகங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது.. விளம்பரங்களின் வருவாயில் ஊடகங்கள் நியாயங்களை ஏப்பம் விட துணிந்தன. ஜனநாயகத்தின் ஒரு தூண் வலுவிழக்க ஆரம்பித்தது.


பூச்சிக்கொல்லி மருந்துகளையும் குளிர்பானம் என்று விற்கும் அளவிற்கு துணிந்து இறங்கியது அந்நிய வியாபார வணிக நிறுவனங்கள். பொப்சி எனும் குளிர்பானத்தை இந்திய கிரிக்கெட்டின் அவதாரக் கடவுள் தச்சின் பண்டுல்கர் குடிப்பது போல ஒரு விளம்பரம்... ஊடகத்தில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்ப.. மக்கள் தனது நாயகனின் பரிந்துரையை ஏற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து பழகினர். தர நிர்ணயம் செய்ய வேண்டிய மத்திய அரசும் தனது பொறுப்பை கார்ப்பரேட் பணநாயக போதையில் மதிமயங்கி விட்டுவிட்டது(?)..

அழுகிப்போன வெங்காயத்தை வறுத்து... அதை சாப்பிட்டுதான் டோகுல் பாவிட் ரன் மழை பொழிவதாக விளம்பரப்படுத்த.. வெங்காய சிப்ஸ்.. அமோக சேல்ஸ்...

இப்படியாக கெட்டுப்போன , புழுத்துப்போன எல்லா பொருள்களும் சர்வதேச குப்பைத்தொட்டிகளிலிருந்து இந்தியச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட ,கிரிக்கெட் தோழர்கள்.. சினிமா நடசத்திரங்களுடன் போட்டி போட்டு சேவை புரிந்தனர். அந்த சேவையில் பாதிக்கப்பட்ட ஒருவள் தான் ரிசானா ராவ்.

ரிசானா ராவ். ! கேப்டன் போனியின் பின் ஜடை முடியில் மயங்கியும்.. அவரின் பிரம்மாண்ட வளர்ச்சியில் பெருமிதத்தும் வீழ்ந்த மும்பை தாராவி வாசி. போனி விளம்பரப்படுத்திய ஒரு குளிர்பானத்தை போனியை நம்பியே வாங்கிக்குடித்தாள்.. நாளைக்கு 5 முறை.. என குடித்து குடித்து ,, போனியை காதலித்தாள் மானசீகமாக.

போனிக்கு திருமணம் ஆனப்போது தன் கையில் பிளேடால் கீறி தனது இயலாமை முட்டாள்தனத்தை காட்டிய தீவிர ரசிகையான ரிசானாவிற்கு ஒரு வருடம் முன்பு போனியை போலவே உள்ள ஒருவனை காதலித்து மணந்துக்கொண்டாள்.

அன்பான கணவன்.. நினைத்த மாதிரியே.. அழகான கணவன்.. அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த ரிசானா இல்லறத்தின் மிக முக்கிய கட்டமான தாய்மைக்கு தயாரானாள். கருவுற்ற பிறகு செய்யும் வழக்கமான சோதனைக்கு மகப்பேறு மருத்துவர் நான்சியிடம் செல்கிறாள்..!

சோதனை நடத்தப்படுகிறது. டாக்டர் நான்சியின் முகத்தில் ஒரு வித சோகம் பரவுகிறது.

"டாக்டர் .. ஏன் இப்படி இருக்கிங்க ? " ரிசானா ஏதோ சந்தேகப்பட்டவளாக கேட்க.

"ரிசானா உன் வயித்துல இருக்கிற சிசுவின் ஹார்ட் பீட்..இன்னும் கேட்கமுடியலம்மா.. மூணாவது மாசத்தில இதயத்துடிப்பு கேட்கனும். அப்போதான் அது உயிருள்ள சிசு. இல்லன்னா வெறும் பிண்டம்தான். "

" அய்யோ டாக்டர். முதல் தடவயே இத சொல்லிதான் கருவ கலைச்சிங்க.. இப்போவுமா.?.எப்படியாவது குழந்தைக்கு உயிர் கொடுங்க டாக்டர்.. இன்னொரு தடவ கருவ கலைக்க என் உடமபுல சக்தி இல்ல, மலடின்னு பேரு வாங்க மனசுல சக்தி இல்ல. " ரிசானா துடிக்கும் அழக்குரல் விசும்ப..

"ரிசானா...மலடின்னு சொல்லாதே.. அது தப்பான வார்த்தை.. உனக்குதான் கரு உண்டாகுதே.. உயிர் இருக்கமாட்டிங்குது.. அதுதான் பிரச்சினை.. உன் ஹஸ்பெண்டுக்கும் ஏதும் பிரச்சினை இல்ல. சரி உன்னோட எல்லா டெஸ்டும் வரட்டும்... என்னான்னு பார்ப்போம்...

சில மாதங்கள் கழிகிறது.

வான்கடே கிரிக்கெட் மைதானம். பலத்த பாதுகாப்புடன். 340 ரன்கள் எடுத்த. ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னும் 50 ரன்கள் தேவை. 30 பந்துகள் மீதம். இந்தியத் தேசமே.. இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்கிறது. இந்திய அணியின் முக்கிய விக்கெட் நான்காவது விக்கெட்டாக வீழ்கிறது. ஐந்தாவதாக களமிறங்குகிறார் கேப்டன் போனி.. மைதானத்தில் ஒரே சத்தம். போனியின் அதிரடி ஆட்டத்தை ரசிக்க விண்ணை பிளக்கும் வரவேற்பு கைத்தட்டல்கள். போனி மைதானத்தின் எல்லைக்கோட்டில் காலடி வைக்கும் நேரத்தில்... பாதுகாப்பு வேலிகளை கிழித்து தகர்த்து உள்ளே பாய்ந்த ரிசானா போனியின் கழுத்தை இறுகப்படித்து... தனது வலதுகையில் இருந்த சிறுகத்தியை போனியின் மார்பில் வைக்க... அரங்கம் பரப்பரக்கிறது.
டிவி கேமராக்கள் போனியையும் ரிசானாவையும் சுற்றி வளைத்து படமெடுக்க.. எடுக்க நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அதில் ஒரு கேமராமேனை... ஆவேசமாக அழைக்கிறாள் ரிசானா..

" இங்க வா... நான் பேசறதை அப்படியே ரிலே பண்ணு.. இந்த கேப்ல விளம்பரம் கிளம்பரம் எதுவும் போடக்கூடாது. இல்ல... " போனியின் மார்பில் சிறு கீறல் போடுகிறாள். ரிசானா. பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கி ஆயுத்தமாகிறது. அப்போது அரங்கத்திலுள்ள ரிசானாவின் கணவன் கையில் வெடிக்குண்டு இருப்பதாக மிரட்ட..காவல் துறைக்கு ஏதும் செய்ய முடியாத சூழ்நிலை.


ரிசானா .. கேப்டன் போனியிடம்..

" மிஸ்டர் கேப்டன்.,.. உங்க வீட்டுக்கார அம்மாக்கு எப்போ பிரசவம்.....? "

" ஹே யூ. வாட் யூ வாண்ட் ....லீவ் மீ..இடியட்....."

" அடச்சீ புறம்போக்கு .. எச்சிலை திங்குற உனக்கு கோவம் வருதா"

" மொக்கா போலாவா நீதானே வாங்கி குடிக்கச்சொன்ன. உன்னை நம்பிதானே நானும் குடிச்சேன்..? "

" ஒகே அதுக்கு என்னா இப்போ... ? "

"கேப்டன் சார். நீங்க அத தினமும் குடிப்பிங்களா... உங்க வெய்ப் குடிப்பாங்களா ? "

"அது உனக்கு தேவையில்லாதது."

"எனக்கு தேவையில்லாததுன்னா. என்ன மயிருக்குடா என்னை வாங்கச்சொல்லி விளம்பரத்துல நடிச்ச...."

" ஹே இட்ஸ் யுவர் சாய்ஸ்.. அதுனால இப்போ என்ன? "

" திமிரு...ம்ம்ம்ம்.. உன்னை நம்பி... உன்னையே ரசிச்சி.. நீ குடிப்பேன்னு நானும் குடிச்சி குடிச்சி... இப்போ என் வவுத்துல ஒரு புழுப்பூச்சிக்கூட வளரவிடாம சாக அடிக்குதுடா கேப்டன் போனி.... .. நீ வித்தது கூல் டிரிங்க்ஸ் இல்ல. விஷம்.. உன்மேல கேசுப்போட்டா.. என்னை லூசுன்னு நினைக்குது இந்தியச் சட்டம்... ஏன் டா என்னிக்காவது நீ சாலை விதிகளை மதிங்க. தலைக்கவசம் போடுங்கன்னு காசு வாங்காம விளம்பரத்தில் பேசி இருக்கியா.. அப்படியே நடிச்சாலும் அதுக்கும் வரிச்சலுகை வாங்குற பிச்சக்காரந்தனே நீ.... அதான்... உன்னை நம்பி நாசாம போயி.. என் தலைமுறையே அழிஞ்சிப்போன என்னை போல எவளும் எவனும் நாசாமா போககூடாதுன்னு உன்னை......... உன்னை......... "
இந்நேரத்தில் .....

ரசிகர்களின் ஒருவனாக இருந்த மைக்கேல் ஆவேசம் எழும்ப தீடிரென மைதானத்திற்குள் ஒடிவர.. மீண்டும் உச்சக்கட்ட பரபரத்த காவல்துறை.. அவனை விரட்ட எத்தனிக்கும் நேரம்....

ரிசானா..கேப்டன் போனியின் நெஞ்சில்.... ஆழமாக ஒரு கீறல் போட்டு எதோ சொல்ல சொல்ல ......ஆவேசம் ஆவேசம் இந்தியா எங்கும் ஆவேசம் .

கேப்டன் போனியின் பணத்தாசையின் காரணமாக.. அவரை நம்பிய ரசிகர்களின் உள்ளங்கள் இப்போது தங்கள் மீதே காறி உமிழ்ந்துக்கொள்ள முடியாமல் டிவி முன் தலைக்குணிந்தாலும் அடுத்து என்ன நடக்கும் ..என்ன செய்யப்போகிறாள் ரிசானா என ஆவலுடன் எதிர்பார்க்க .. அந்த காட்சி அனைவரையும் திடுதிடுக்க வைக்க...............


" சார்... சென்னை சென்ட்ரல் வந்துச்சி. டிரெயின் செட்டுக்கு போகுது.. " ரயில்வே ஊழியர் ஒரு பயணியிடம் ஒரு மார்க்கமாக பார்த்து உரைக்க..

"அட ச்சே.. எப்போ நான் கதை படிக்க ஆரம்பிச்சா மட்டும் இந்த ட்ரெயின் ரொம்ப துல்லியமான நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு வந்திடுது. மற்ற நேரத்தில பாரு.. ரொம்ப லேட் ஆகும்... " கேப்டன் போனி என்னானருன்னு விடை தெரியாமல் பயணி சந்தோஷ் கடுப்புடன் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.

--------------------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Jun-15, 6:18 pm)
பார்வை : 387

மேலே