காலைச் சாரல் 04 - நான்

அதிகாலை விழிக்கும் பொழுது தோன்றும் எண்ணங்கள்....

23-6-2015

நான்....

நான் நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நான் நானல்ல.
நான் வேறு. என்னை உங்களுக்குத் தெரியாது.

ஏன் எனக்கே என்னை முழுமையாகத் தெரியுமா என்று தெரியாது...
ஆனால் எனக்குத் தெரிந்து நான் பிறந்ததிலிருந்து அப்படியேதான் இருக்கிறேன்.

வாழ் நாள் முழுதும் என் மேல் விழுந்த அடுக்கடுக்கான அனுபவப் படிவை நீக்கியபின் இருக்கும் நான், நான் தான்.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம் விருப்பு வெறுப்பை வைத்தே நம்மைப் புரிந்து கொள்கிறார்கள்..,

இவன் ரொம்ப சாது யார் வம்புக்கும் போகமாட்டான்.
இவனிடம் சண்டைக்குப் போனாலும் ஒதுங்கி விடுவான்
இவனிடம் நாம் என்ன உரிமையும் எளிதாக எடுத்துக் கொள்ளலாம்
இவன் முன் கோபக்காரன், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இவன் கஞ்சன், இவனிடம் ஒன்றும் பெயராது.

இப்படி நம்மிடம் உள்ள பலவீனங்களை வைத்தே நம்மைப் புரிந்து கொள்கிறார்கள்.... அடுத்தவர் பலவீனம் என்ன என்பதில் பலருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

இந்த உலகமே இதன் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது....

உங்களுக்கு தலையில் முடி இல்லையா.... ?
*** உங்களுக்கு முடி வளர எண்ணை விற்கப் பார்க்கிறார்கள்.

நீங்கள் மிக குண்டாக இருக்கிறீர்களா.... ?
*** நீங்கள் இளைக்க வழிமுறை விற்கப் பார்க்கிறார்கள்.

நீங்கள் மிக ஒல்லியாக இருக்கிறீர்களா....?
*** நீங்கள் உடல் வலு பெற மருந்து விற்கப் பார்க்கிறார்கள்

நீங்கள் மேனி எழில் குறைவாக இருக்கிறீர்களா...?
*** அதற்கும் கைவசம் ஏதோ களிம்பு வைத்திருக்கிறார்கள்.

உங்களிடம் பணம் இல்லையா..,?
*** பணம் பண்ணும் சுலமான வழி கற்றுத் தர காத்திருக்கிறார்கள்.

உங்களுக்கு மன அமைதி இல்லையா....?
*** மன அமைதியையும் அளிக்க சிலர் தயாராக இருக்கிறார்கள்.

இன்னும் பல...

இப்படி இல்லாததை நம்பியே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது...

அதாவது வாழ்ந்து கொண்டு இருக்கிறது....
அதாவது பிழைத்துக் கொண்டிருக்கிறது....

மற்றவர்களின் குறைகள் பலருக்கு லாபகரமாக முடிகிறது...

***
அதெல்லாம் சரி.... உன் பலம் என்ன என்கிறீர்களா.... ?
அதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்!
-------- முரளி

எழுதியவர் : முரளி (23-Jun-15, 7:10 am)
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே