வல்லரசுக் கனவுகள் - கற்குவேல் பா

நம்
வீட்டுப் பெண்கள்
இங்கே
இன்புற்றிருக்க ..

காஸ்மீரி
பெண்ணொருத்தி
பாலியல் வன்முறைக்கு
பலியானால் நமக்கென்ன ??

* * *

வெளிநாட்டிற்கு
கோடிகளில் ஏற்றுமதிக்காய்
திருட்டாய் நடக்கும்
சந்தனமரக் கடத்தலுக்கு ..

கூலிக்கு
அறுக்கச் சென்ற
தமிழர்களின் உயிர்கள்
சிறிது அறுபட்டால்
அவனுக்கென்ன ??

* * *

கல்வி கற்பிக்கவே
ஆசிரியர்கள்
கல்வித் தொண்டாற்றவே
கல்விக் கூடங்கள் ..

கற்றுக் கொடுப்பவன்
கல்விக் கருவறையில்
மாணவியைத்
தொட்டுப் பார்த்தால்
பிழையா என்ன ??

* * *

மக்களுக்கு
தொண்டாற்றவே
மத்திய அரசு
மாநில அரசு ..

மக்களின்
தாகம் தணிக்கும்
இரவு நேர
சாராயத் தொண்டு
தவறா என்ன ??

* * *

தினம் உயரும்
மக்கள்தொகை
அவ்வாறே உயரும்
விலைவாசி ..

சில மதக் கலவரங்கள்
சாதிக் கலவரங்கள்
அதில்
மக்கள் தொகைக்
குறையுமென்றால்
அவசியம்தானே ??

* * *

சென்செக்ஸ் புள்ளிகள்
மும்பை பங்குச்சந்தை
ரெப்ரொ ரேட்
ரிவெர்ஸ் ரெப்ரொ ரேட்
அத்தனையும்
அவசியம் எனும்போது ..

கிளெர்க் முதல்
நீதிபதிகள் வரை
லஞ்சமும்
தொண்டன் முதல்
முதல் மந்திரி வரை
ஊழலும்
அவசியம் தானே ??

* * *

கல்வி மந்திரி
கல்லா நிரம்புவது
முக்கியமாகவே
இருந்து போகட்டும் ..

மதிப்பெண் பெற்ற
மாணவனுக்கு
கல்விக்கடன்
முக்கியமா என்ன ??

* * *

தானியம் முதல்
தனியா வரை
காய்கறி முதல்
பழங்கள் வரை
அத்தனையும்
இறக்குமதியில் கிடைக்க ..

வடக்கே
பஞ்சாப் மாநில
விவசாயி ஒருவன்
தூக்கில் தொங்கினால்
நமக்கென்ன ??

* * *

இன்டர்நேஷனல்
கல்விக் கூடங்கள்
அநேக நகரங்களை
அலங்கரித்தபோதும் ..

இன்றும்
தீக்குச்சி தொழிற்சாலையை
தாண்டிராத சிறுவனின்
எதிர்காலம்
பற்றிய கவலை
எதற்கு நமக்கு ??

* * *

நம்மில்
ஆயிரம் பெண்கள்
உலக அரங்குகளில்
பேசப்படும்போது ..

ஏதோ ஒரு மூலையில்
டாக்டர் முத்துலட்சுமிகளும்
கல்பனா சால்வாக்களும்
கள்ளிப்பாலுக்கு
இரையாகிக் கொண்டிருந்தால்
குற்றமா என்ன ??

-- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (24-Jun-15, 12:22 pm)
பார்வை : 675

மேலே