ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம்
சதுப்பு நிலக்காட்டின் சகதிக்குள் உலுவை மீன்பிடித்து திரிந்த ஒரு விட்டேத்தி இளைஞனுக்கு ஓலோன்பிலோக்கின் புல்வெளிச்சுணைகளின் ஸ்பரிசத்தையும் உறைபனி சுவசாத்தையும்,ஓநாய்களின் தத்துவார்த்த ஞான விலாசத்தையும் பரிசாக அளித்த ஜியோங்க் ரோங்குக்கும் அந்த டென்ஞருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கணக்கில் அடங்கா மிருகங்களின் பரிபாசைகளும் தகவமைப்புகளும் நமக்கு வியப்பளித்தாலும் ஒரு சில மணித்துளிகளில் நாம் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதஇயல்பு. ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கியதில் இருந்து ஓநாயின் மீதான வியப்பும் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலும் நம்மை நம் இயல்பில் இருந்து பிரித்தெடுத்துச் செல்கிறது.இந்த புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஓநாய்களை பற்றி ஆசிரியர் சற்று உயர்வாக எழுதியிருக்கிறார் என்று தோன்றியது ஆனால் அந்த நிலையை நான் யுட்யூப்பில் பார்த்த The Secret of Block Wolves, Wolves Dairy போன்ற ஆவணப்படங்கள் மாற்றியது. சில எழுத்துகள் நம்மை வேறு உலகக்கு இட்டுச்செல்லும்போது நல்ல வேகத்தில் செல்லும் வாகனம் திடிரெனெ தாழ்வான பாதைக்கு இறங்கும்போது அதள பாதாளத்திற்குள் அழைத்துச் செல்வதுபோல் தோன்றும் அப்பொழுது நமது அடிவயிற்றில் மெல்லிய கூச்சம் உண்டாகும் இந்த உணர்வு பரம சந்தோசத்தை அளிக்கக்கூடிய ஒன்று.அந்த சந்தோசத்தை எனக்களித்த ஜியோங்க் ரோங்க் உண்மையில் ஒரு அதிசயமான எழுத்தாளர். வைரமுத்துவின் கண்ணகி கவிதையை படித்தபின்பு அவர் மீது தோன்றிய அதே மதிப்பும் மரியாதையையும் ஜியோங்க் ரோங்க்கும் பெறுகிறார்.
இந்தக் கதையின் நாயகர்கள், ஆம் நீங்கள் நினைத்தது சரிதான் ஓநாய்கள்தான்,வில்லன்கள் நவீன கலாச்சார காரணிகளும் அதன் கர்த்தாவுமான மனிதர்களும்தான்.கதையை சுருக்கமாக சொல்கிறேன் ஓநாய்களை தங்களது மூதாதையர்களாகவும் ,வழிகாட்டிகளாகவும் கொண்டிருக்கும் மங்கோலிய நாடோடி மக்கள் ஓலோன்புலாக் என்னுமிடத்தில் டெஞ்ஞர் என்னும் இயற்கை கடவுளின் ஆளுமையுடன் தங்களது மந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்த நாடோடி கூட்டத்தின் தலைவரும் பழமை விரும்பியுமான பில்ஜி மற்றும் மந்தைகளின் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் உல்ஜி இருவருமே மரியாதை வாய்ந்த மூப்பர்கள்.இவர்கள் இருவரும் இந்த கூட்டத்தையும் அவர்களது கால்நடைகளையும் அவர்களது வழிகாட்டியும் வைரியுமான ஓநாய்களிடமிருந்து எப்படி பாதுகாக்கின்றனர் என்பதையும் கலாச்சார முன்னேற்றம் மனித பெருக்கம் இவற்றினால் எப்படி இவர்களது உயிர்த்துடிப்பான ஒலோன்புலோக்கும் ஓநாய்க்கூட்டமும் அழித்தொழிக்கப்படுகிறது என்பதே மூலக்கதை.இது மட்டுமில்லாமல் இப்புத்தகம் இன்னும் பிற உட்கதைகளையும் பல சுவாரசியமான அரிய பல தகவல்களையும் உள்ளடக்கிய மாபெரும் பொக்கிசம் என்று சொல்வது மிகைப்படுத்தல் ஆகாது.
இந்நூல் ஒரு நாடோடி கூட்டத்தையும் அவர்கள் வாழ்கைமுறையையும் மட்டும் எடுத்தியம்பும் நூல் அன்று இது நாம் மறந்துவிட்ட குருகுல கல்வி முறையையும் சீனர்கள் மற்றும் மங்கோலியர்களின் வெற்றி வழிகளையும் அவர்கள் ஏன் சிற்ந்தவர்கள் என்றும் பெருமையுடன் இவ்வுலகை பார்த்து மார்தட்டி கூறும் ஒரு சரித்திரம்.இதில் இடம்பெரும் கதாபாத்திரங்கள் நம்மை நூறு சதம் மங்கோலியர்களை நேசிக்கவும்,கால்வாசியாவது மங்கோலியனைப் போல் ஒரு சில வருடங்களாவது வாழ்ந்துவிடவெண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கக்கூடியவை.ஆசிரியர் ஜியாங்க் ரோங்க் தன்னை இந்த கதையில் சென் ஜென் என்னும் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சீனாவில் இருந்து ஓலோன்புலோக்கிற்கு வரும் சீன மாணவனான் சென் ஜென்னும் அவனது நண்பனுமான யாங்க் கீயும் ஓநாய் குட்டியை வளர்க்க எடுக்கும் முயற்சிகளும் ஓநாய்குட்டி செய்யும் சேட்டைகளும் சுவாரஷ்யம் நிறைந்தவை.பில்ஜியின் மகளாக வரும் கஷ்மாய் மங்கோலிய பெண்ணின் வீரத்தையும் தீரத்தையும் பழக்கவழக்கங்களையும் நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடியை போன்றவள்,அவளின் சகோதரன் பட்டு ஓநாய் கூட்டத்துடன் ஒற்றை ஆளாய் நிகழ்த்தும் போராட்டம் மயிர்கூச்செரிய செய்பவை.இவனைப் போல் இன்னொரு சிறந்த மங்கோலிய வீரன் டோர்ஜி ஓநாய் வேட்டையில் இவன் நிகழ்த்தும் சாகசங்கள் அற்புதமானவை.இன்னும் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்பவைகள் பாவோ சுங்காய்,லாசுருங்க்,பாயர், ஓநாய்குட்டி, எர்லாங்க் எனப்படும் பெரிய வேட்டை நாய் ,எல்லோ,யிர் எனப்படும் நாய்கள்.
ஒரு அமரனையோ,அசுரனையோ,அரசனையோ ஏன் ஒரு அம்மாஞ்சியை வைத்துகூட ஒரு பெரிய நாவல் எழுதிட முடியும் ஆனால் ஒரு விலங்கை வைத்து அதுவும் மக்கள் அதிகம் மதிப்பளிக்காத ஒரு விலங்கை வைத்து இவ்வளவு பெரிய நாவலை ஒரு இடத்தில் கூட சுவாரசியம் குறையாமல் எழுதியது மிகப்பெரிய விசயம் . இதோ பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள ஒருவனிடம் தனது எழுத்தைச் சேர்ப்பித்ததோடு நில்லாமல் அவனை புளகாகிதம் அடையச் செய்த ஆசிரியரை நான் பெருமையுடன் வணங்குகிறேன் . ஒரு எழுத்தாளனின் வெற்றி இங்கனமே உறுதி செய்யப்படுகிறது,மொழிபெயர்ப்பு ஆசிரியர் திரு.சி.மோகன் அவர்களும் தன் பனியை செவ்வென செய்து முடித்துள்ளார் ஒரு மொழிமாற்று நூலை வாசிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் கதை நகர பங்காற்றியுள்ளார். ஆட்டுப் பட்டிகளையும் அதை மேய்க்கும் மேய்ப்பர்களையும் நான் மதிக்கிறேன் அவர்களின் கடிண வாழ்கை என் கண்முன் நிழலாடுகிறது.ஒரு மேய்ப்பனாக இருப்பவனின் சினேகம் வளர்க்க நிர்பந்திக்காமல் நினைவூட்டுகிறது ஓநாய் குலச்சின்னம் வாசிக்க மறவாதீர் நண்பர்களே…
“புல்வெளியே பெரிய உயிர் மற்ற விலங்குகள் அனைத்தும் ஏன் மனிதன் கூட சிறிய உயிர்தான் பெரிய உயிரை போற்றினால்தான் சிறிய உயிர்கள் வாழமுடியும்”