என் வாழ்க்கைப் பயணம் 1
காலை நடைப்பயிற்சி என்பது எனக்கு சமீப காலமாய் , சுமார் 6 வருடங்களாய் ஒரு கனவாகிப் போன ஒன்றாகிவிட்டது . சூழ்நிலை , உடல்நிலை, நான் உட்கொள்ளும் மாத்திரைகளும் அதற்கு காரணங்கள் என்றும் கூறலாம் . ( ஏதாவது ஒன்று சொல்லணும் இல்லையா ) .
அதனால் நான் எழுந்து கொள்வதற்குள் , எனக்கு முன்னரே என் சோம்பேறித்தனமும் எழுந்துவிடும் எனக்குள். உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும் அல்லவா ...
காலையில் ஒன்றும் வேறு வேலையும் இல்லை ...வெட்டி முறித்திட .. காப்பி குடிப்பது ..காலைக் கடன்களை முடிப்பது ....பேப்பர் படிப்பது ....உடனடியாய் கணினியை ஆன் செய்வது ...முகநூலை எட்டிப்பார்ப்பது ....எழுத்து தளத்தில் நுழைந்து சற்று நிமிடங்களை கழிப்பது ...மெயில்களை பார்ப்பது ..... சிலவற்றிற்கு மட்டும் பதில் போடுவது ....இப்படி மிக முக்கியமான வேலைகள்....ம்ம்ம்ம் ( நீங்கள் திட்டுவது காதில் கேட்கிறது ) ...மற்றபடி மூட் இருந்தால் ...கவிதைகள் எழுதிட முற்படுவது .....அவ்வளவுதான் . வேறு எங்கும் செல்வதும் இல்லை. யாரவது வருவார்கள் வீட்டிற்கு ....அரட்டை அடிப்பது ....அரசியல் நிகழ்வுகளை அலசுவது .....மதியம் சரியாக 1.30க்கு சாப்பிடுவது.
பின்பு என் அறைக்கு சென்று மீண்டும் சிறிது நேரம் கணினியில் கழிப்பது.....செய்திகள். மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பது ..பார்த்த சிரிப்பு காட்சிகளையே மீண்டும் பார்ப்பது ....அப்பாடா .....மிகவும் களைத்துப் போவதால் அப்படியே படுக்கையில் சாய்வது ....சுமார் 3.30 மணி அளவில். தூக்கம் வரவில்லை என்றாலும் சுமார் 1 மணி நேரம் படுத்தே இருப்பது. 5 மணிக்கு கீழே சென்று டீ அருந்திவிட்டு , எங்கள் வீடு வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பது . ( மிகப் பெரிய வேலை அல்லவா ....? )
மீண்டும் என் அறைக்கு சென்று 6 மணி அளவில் குளிப்பது .....6.30 க்கு பொழுது போவதற்காக , நடைப்பயிற்சி என்ற போர்வையில் சிறிது நேரம் நடப்பது .... சாலைகளில் ....சந்துகளில் .... அரை மணி நேரம்தான் . அதற்குள் வழியில் நிச்சயம் யாரவது கண்ணில் படுவார்கள் ....ஒவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் பேசிவிட்டு ஏதாவது ஒரு நபரிடம் , ஒரே இடத்தில் அமர்ந்தோ , நின்றோ பேசி நேரத்தைக் கழிப்பது ....பின்பு வீட்டிற்கு 8 மணிக்கு திரும்பிவிடுவது .....உடனே இரவு உணவை சாப்பிடுவது ....அதைவிட அதிகமாய் பல மாத்திரைகளை விழுங்கிவிட்டு என் அறைக்குள் தஞ்சம் அடைவது ....10 மணி வரை சில தொலைக்காட்சிகளில் வரும் விவாத மேடை ...மக்கள் மேடை ...ஆயுத எழுத்து ...நேர்ப்படபேசு ..முடிவில் செய்திகள் ......படுப்பது . உடனேயே ரேடியோவை ஆன் செய்து சிறிது நேரம் பழைய பாடல்கள் கேட்பது .. அப்படியே அரைத்தூக்கம் தழுவ ....ரேடியோவை நிறுத்திட்டு கண்ணை மூடிகொள்வது .....இதுதான் அடியேனின் அன்றாட முழுநாள் வேலை ..ஹிஹிஹிஹ் .
இனி ....கனவுகள் வந்தால் உண்டு .. இல்லையெனில் அன்று நடந்தவற்றை ....அல்லது ஏற்கனவே முடிந்தவற்றை நினைத்துப் பார்ப்பது...நல்லவை ..கெட்டவை ...கடந்தகாலம் ...வருங்காலம் பற்றி யோசனைகள் .. அப்படியே ...விழித்திரை மூடியபின்னரும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கும். ...
இது ஒரு சாதனையாளரின் கரடுமுரடான வாழ்க்கை பயணம் அல்ல. ..
ஒரு சாதாரண மிக சாமானிய மனிதனின் கடந்த கால அனுபவம் . நினைவில் இருப்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
மீண்டும் பேசுவோம் ....தொடர்ந்து ...
( இனி கட்டுரை எழுதுங்கள் என்று என் நண்பர் முரளி சார் ....கூறியதால் அவரைப்போன்றே எழுத முயற்சிக்கிறேன் ... அனைத்தும் உண்மையே ....)
பழனி குமார்
25.06.2015