தெய்வம் சான்ற திறல்
தத்துவப் பேராசிரியர் ஒருவர் கல்லூரி வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். ”கடவுள் இருக்கிறார” என ஒரு மாணவன் கேள்வி கேட்டான்.
“கடவுள் இருப்பதாக இதுவரை எவரும் நிரூபித்தது இல்லை. அது மட்டுமல்ல, கடவுள் என ஒருவர் இருந்தால் அவருக்கு நான் 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கிறேன். அவர் வந்து என்னை கீழே தள்ளி மிதிக்கட்டும். இது கடவுளுக்கு நான் விடும் சவால்” எனக் கூறி கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
வாசலில் தாமதமாக வந்த ஒரு மாணவன் அவர் தன்னைப் பார்த்தால் அவரது அனுமதியுடன் வகுப்பினுள் வரலாம் எனக் காத்து நின்றான். ஐந்து நிமிடம் ஆயிற்று. மாணவர்களிடையே சலசலப்பு அதிகரித்து விட்ட நிலையில், அதனை அடக்கும் வகையில் அந்தப் பேராசிரியர்,
“ஏ கடவுளே, நீ இருந்தால் உடனே வா”
என மேல் கூரையைப் பார்த்து கிண்டலாகக் கூறி விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டார். பத்து நிமிடம் ஆயிற்று. கடவுள் வரவில்லை. பேராசிரியரும் கண்கள் திறப்பதாய் இல்லை. வாசலில் அதற்காகக் காத்து இருந்த மாணவன் ஓடி வந்து அவரது இருக்கையைத் தள்ளி அவரைப் புரட்டிக் கீழே விழச் செய்தான். திடுக்கிட்டுப் பயந்து கடவுள்தான் வந்து விட்டாரோ என அவர் கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த மாணவன் குறும்புச் சிரிப்புடன் அங்கு நிற்கக் கண்டார்.
“ஏன் இப்படிச் செய்தாய், யார் நீ” என அவர் அவனை அதட்டினார்
“கடவுள் ரொம்ப பிஸி, அதனால் அவர் சார்பாக நான் வந்தேன் என்றான்.
இந்த நிகழ்வு நகைச் சுவைத் துணுக்குத்தான். ஆயினும் இவ்வாறு கடவுளின் பிரதிநிதியாக மக்கள் பலர் வரிந்து கட்டிக் கொண்டு தம் உடன் இருப்போரை துன்புறுத்துவதும், கடவுள் தண்டிக்கும் கடவுள் என்ற பாணியில் அவரைக் காட்டுவதும் தவறானதே. அப்படியானால் உண்மையாகக் கடவுள் இருக்கிறாரா, அவர் ஏன் வரவில்லை ஏன்ற கேள்வி நம்முள் எழுகிறது.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனும் தத்துவஞானி, மார்ச் 6, 1927, இலண்டன் மா நகரில் தேசிய மதச்சார்பிலா சங்கத்தில் பேசியதும், பின்னர் 1957ல் புத்தகமாக வெளியிடப்பட்டதுமான “ நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல” எனும் புத்தகத்தில், கடவுள் இருக்கிறாரா எனும் கேள்விக்கு,
“இது ஒரு மிகப் பெரிய கேள்வி. இதற்கான விடையை நான் அளிக்க வேண்டுமெனில் உங்களை இறை ஆட்சி வரும்வரை காத்திருக்கச் செய்ய வேண்டும் அப்போதுதான் நான்கூறுவதை நீங்கள் மன்னித்து ஏற்க இயலும் என்றும், . , அச்சத்தின் காரணமாகவே சமயங்கள் தோன்றின என்றும், இறைவன் என்ற ’கருதுகோள்’ கீழ்த்திசை மன்னர்களால் கொணரப்பட்டது என்றும் சுதந்திர மனிதர்க்கு அது தகுதியற்ற கருதுககோள் என்றும் கூறுகிறார்.
மனிதர் தாம் வாழும்போதும், இறந்த பின்னும் துன்பமடையாமல் நம்மை,, நம்மை விட ஒரு பெரிய சக்தி காக்க வேண்டும் என அஞ்சி அடைக்கலம் புகுவர். இந்த அஞ்சுதலே பல்வகை மதங்களின் அடிப்படை ஆகும் என சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரும் கூறுவர்.
தம் சக்திக்கு மீறி பெரிய அளவில் உதவிடும் சூரியனையும் சிறிய அளவில் உதவிடும் நிலவினையும் , பழ மரங்களையும், அதைப் போன்ற பிற படைப்புப் பொருட்களையும் போற்றி வணங்கிடக் காரணம் எதுவெனக் கேட்டல் அது நன்றி கூறுதல் பற்றியதாகும்.
அதைப் போலவே வீரத்தில் சிறந்த மறவர்க்கும் பத்தினிப் பெண்டிர்க்கும் கல் நட்டு விழா எடுத்தனர் நம் முன்னோர்.
மக்களை அரவணைத்துக் காத்து அன்பு செய்த அரசன் மறைந்தால் அவன் வடிவில் சிலை செய்து படையல் இட்டு வணங்கியதற்கும் அன்பே காரணமாகும். மனிதர் தாம் வாழ்ந்த நில வகை, தாகம் தணிந்து பயிர் வளர்க்க உதவிய பேராறுகள், செய்த பெருந்தொழில், நன்மைப் பேறு, காதல் பண்பு, காதல் தீங்கு ஆகிய ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாக காலப் போக்கில் கருதி வழிபட்டது ”கருதுகோள்” ஆகும்.
மறுபிறவி உண்டு, கடவுள் என்பவர் வாழும் இடம் சொர்க்கம், இது உண்மை எனக் கண்டு பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சி.
மக்கள்தம் அறிவு நிலைக்கேற்ப மதம், சிறுதெய்வ வணக்கம், பெருந்தேவ மதம், கடவுள் சமயம் எனப் பாகுபடுத்த இயலுவதாய் உள்ளது.
உணவு சமைத்துப் படைத்தும் அதனுடன் பிற உயிர்களைக் காவு கொடுத்தும் வணக்கம் செய்வது சிறுதெய்வ வணக்கம்.
இறைவனை நாள்தோறும் வழிபட்டு உயர்திணை அஃறினை ஆகிய இருதிணை உயிர்கட்கும் தீங்கு செய்யாமல் இயன்றவரை தீங்கும் நினையாமல் நன்மை செய்வது பெருந்தேவ மதமாகும்.
ஒரு உருவம் இல்லாமல், இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவனைப் போலவே தூய்மையாக இருக்க அழைக்கப்பட்டோம் என நம்பி அனைத்து உயிர்கட்கும் நன்மையே செய்து வீட்டு கதி பெற விழைந்து ஒழுகுவது கடவுட் சமயம் ஆகும். இவ்வகையில், சிவனியம், மாலியம், யூதம், கிறிஸ்தவம், இசுலாம், முதலிய எல்லா மதங்களையும் கடவுட் சமயம் என்று பொதுவாகக் கூறி விடலாம்.
அறிவியல் வளர்ச்சி ஆகாயத்தைத் தொட்டு விட்ட இந்நாளில் கூட உலகில் வாழும் மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே கடவுள் இல்லை எனச் சொல்லச் சொல்ல அது நம்பா மதத்தினரின் மேம்பாட்டிற்கும் ஏமாற்றிற்கும் அரண் செய்வதாகிறது.
மாந்தரின் மனதை இறுகப் பிணிக்கக் கூடிய பற்றுகள் பல உள்ளன. இவற்றுள் மிகுந்த வலிமையுடையது மதப்பற்று அல்லது கடவுள் பற்று. மதவியல் முற்றிலும் மனதைப் பொறுத்தது. அதனை எவரும் அழிக்க இயலாது. கனவு காணாது நீண்ட உறக்கத்தில் இருக்கும் நேரம் தவிர மற்றெல்லா நேரத்திலும், நடந்து செல்கையில், வேலை செய்கையில், உரையாடையில், உண்ணும்போது என தன்னைப் படைத்த இறைவனை நன்றியோடு நினைக்கவும் வேண்டவும் போற்றி துதி பாடவும் முடியும். அதனால் மனம் உள்ளவரை மதத்தை அழிக்க முடியாது.
கடவுளும் மறுமையும் “இல்லை” என்னும் கொள்கையும் ஒரு வகை “மதம்” . ஆதலால் “மதத்தை ஒழிக்க வேண்டும் என்பது செருக்கை அடக்க வேண்டும் என்றே பொருள் கொள்ளப் பட வேண்டும்.
மதங்கள் கீழ்த்திசையால் கொணரப்பட்ட கருதுகோள் எனும்போது உண்மையில் இறைவன் இருக்கின்றானா என்ற கேள்விக்குப் பதிலாக சைவ சித்தாந்தத்தின் மந்திரமாகிய திருமந்திரம்,
“ ஒன்றது பேரூர் வழி அதற்கு ஆறுள;
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்றுகு ரைத்தெழு நாயையொத் தார்களே”
(திருமந்திரம்-1558)
தமிழ்கூறு நல்லுலகு சமயங்கள் ஆறு என இயம்புகிறது. சிவனியம் மாலியம் என்ற இரண்டும், குமரனியம்(கெளமாரம்), ஆனைமுகம் (காணபத்தியம் கதிரவம் (செளரம்) காளியம் (சாக்தம்) என்னும் நான்கொடு ஆறாயின. இவற்றில் இது நல்லது இது தீயது என சொல்பவர்கள் மலையைப் பார்த்து குரைக்கும் நாய் போன்றவர்கள் என்கிறார் திருமூலதேவ நாயனார். “
நம்பும் மதம் என்று ஒன்று இருப்பதைப் போலவே நம்பா மதமும் இங்கிருப்பதைக் காண்கிறோம். கடவுள் ஒருவரா, பலரா என “குழம்பும் மதத்தினர்க்கு”, கம்ப ராமாயண யுத்த காண்ட கடவுள் வாழ்த்தில் கம்பர் கூறும் விளக்கம் இவ்வாறு உள்ளது.
ஒன்றே என்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கின் பலவேயாம்;
அன்றே என்னின் அன்றேயாம்
ஆமென் றுரைக்கின் ஆமேயாம்’
இன்றே என்னின் இன்றேயாம்
உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம்ம!.i
இந்தக் கூற்றுப்படி கம்பர் காலத்திலும் சமய வாணரோடு கடவுள் இல்லை என்பாரும் நம்பிக்கை இல்லாரும் இருந்தனர் என்பதாலேயே அவர்களையும் கம்பர் ஏற்று மொழிகிறார் எனக் கொள்ள வேண்டி உள்ளது.
ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகி, விருப்பு வெறுப்பு இலாதவன், ஐம்புலன் வென்றான், பிறவி நீக்கி எனக் கடவுளுக்கு பல்சமயப் பொதுப் பெயர்களையே திருவள்ளுவரும் அளித்துள்ளார். திருக்குறளை முழுக்க முற்றும் அறிந்து ஆராய்ந்தவர்கள் வள்ளுவரை ஒரு இல்லற ஞானி, சித்தர், மருத்துவர், விவசாயி, அறிவியல் அறிஞர் எனப் பன்முகத் திறமையும் அவருக்கு இருப்பதை ஏற்கின்றனர். இந்த வள்ளுவரே கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளும்போது கடவுள் இல்லை எனச் சொல்பவர்கள் தங்களை வள்ளுவரை விடவும் அறிவு செறிந்தவர்கள் எனக் கொள்ளும் ஆணவத்தினால் “மெய்ப்பொருள்” காணத் தவறி விடுகின்றனரோ என ஐயமுறத் தொன்றுகிறது.
கடவுள் இல்லை என்பவர்கள் கூறும் காரணங்களை நாம் ஒரு சிறிய பட்டியல் இட்டோம் என்றால்:
அ. உடல் நலம், மன நலம், மதி நலம் உள்ளாரும் நலம் இல்லாதாரும் மனிதரிடையே
கானக் கிடைக்கின்றனர்.
ஆ. நல்லவர் நீதிமான் எனப் படுபவர் வறுமை, நோய், பிறரால் துன்புறுதல் முதலியவற்றால் வருந்தும்போது கடவுளிடம் முறையிட்டும் கடவுள் அவர்களைக் காக்க இயலாமை; அதே நேரத்தில் தீயோர் எல்லா வகையிலும் இன்புற்று நீடூழி வாழ்கின்றனர்.
இ. கடவுள் கட்புலனாகாமல் இருக்கின்றார். புறக் கண்ணுக்குப் புலப்படுவதில்லை என்பது கட்டுக் கதை போல் உள்ளது.
ஈ. பெருவெள்ளம், நில நடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய் முதலிய பல்வகை பேரிடர்கள் மனித குலத்தை அழிக்கும்போது கடவுள் காப்பது இல்லை.
உ. கடவுள் பற்றிப் பேசும் மதங்கள் ஒன்றுக் கொன்று முரணான பல கருத்துக்களை வழங்கி வருவதுடன் தங்கள் கடவுளே உண்மைக் கடவுள் என மார் தட்டிக் கொள்கின்றனர்.
ஊ. விலங்கினங்கள், பறவையினங்கள் ஆகியவை “உணவு வட்டம்” என்ற பெயரில் ஒன்றை ஒன்று கொன்று தின்னும்படி வாழ்க்கை அமைந்துள்ளது. கடவுள் காப்பது இல்லை.
எ. கடவுளை நம்பினோர் பலவகை நோண்புகள் இருந்து, செபித்து, அழுது ஆராட்டியம் செய்து உருக்கமாய் இறைவனை வேண்டினாலும் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு வராத கடவுள்,அவர்கள் விரும்புவதைத் தருவதும் இல்லை.
மேற்காணும் கூற்றுகட்கு நேரிடையான பதில்களைக் கூறாமல் கடவுளை நம்புவோர் “கடவுள் உண்டு” என்பதற்கு சான்றாகப் பின்வரும் கூற்றுகளை முன் வைக்கின்றனர்.
அ. சூரிய குடும்பத்தில் உள்ள வான் கோள்கள் அத்தனையும் இடைவிடாமல் ஒழுங்கு தவறாமல் இயங்கி வருவதால் அவற்றை இயக்கி வருபவர் ஒருவர் இருக்கிறார்.
ஆ. கோள்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளாமல் நீள்வட்டப் பாதையில் இயங்கிடவும், சுழலும்போது அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காமலும் ஒவ்வொன்றையும் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந்துள்ளது.
இ. கணக்கிலா நெடுங்காலமாக பகலில் கதிரவனும் இரவில் நிலவும் விளக்காய் அமைந்து வருவது.
ஈ. பிற கோள்களைப் போல் சுற்றிடாமல் ஒரே இடத்தில் இருக்கும் கதிரவன் சமமான ஒளி அத்தனை திசைக்கும் பரப்பும் வகையில் உருண்டை வடிவம் கொண்டு, அளப்பரிய நெடுங்காலம் எரிந்தும், எரியாவி குன்றாமல் இயக்குபவர் ஒரு பரம்பொருளாய் இருக்க வேண்டும்.
உ . காலமும் இடமும், முதலும் முடிவும் இல்லாதவை என்பதால், இப்போதுள்ள மக்கள் உலகில் தோன்றுவதற்கு முன் எண்ணிலடங்கா உயிரினங்கள் தோன்றி ஒழிந்திருக்க வேண்டும்.
ஊ . பல்லாயிரங்கோடி மக்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்தாலும் அவர்களை அடையாளம் காணும் வண்ணம் வேறுபட்ட முகவடிவும், கை ரேகையும் கொண்டுள்ளது அறிவியல் பேராற்றல் நிரம்பிய ஒருவரது செயலே.
எ. ’கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது மறு உலக வாழ்வில் நிலை வாழ்வைப் பெறுகின்றனர் என்பது இன்றும் மெய்ப்பிக்கப்படுகின்றது.
புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை என்று முக நூலில் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.
“உங்கள் ஊரில் நடராஜர் சிலை திருட்டுப் போய் விட்டதாமே? எவ்வளவு மதிப்பிருக்கும்?
“திருட்டுப் போகிற சாமிக்கு மதிப்பெதற்கு?
இது நகைச்சுவை என எந்த கோணத்தில் எடுத்துக் கொள்கி|றார்கள் என்பது புரியாத புதிராய் உள்ளது. இதைப்போலவே “ நகைச்சுவை நேரம் மற்றும் சிறுகதைகள்” எனும் வலை தளத்தில் நடிகர் கமலஹாசன் இப்படிக் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
“துப்பாகிகளாலும் வெடி குண்டுகளாலும் மதக் கலவரங்களாலும் மட்டுமே ஒரு கடவுள் தன்னுடைய மதத்தை நிலை நிறுத்த முடியும் என்றால் எனக்கு அந்தக் கடவுளே தேவை இல்லை”
எந்தக் கடவுளும் தன் மதத்தை நிலை நிறுத்திட முன்வந்ததும் இல்லை. அதற்கென இந்த நடிகர் கூறும் எந்த உத்தியையும் கைகொள்வதும் இல்லை. இவை மனிதரின் உத்திகள். ஏனெனில் மதங்கள் அத்தனையும் அன்பையே போதிக்கின்றன.. “ அன்பே சிவம்” அன்பே தூய ஆவி” என்றுதான் பெரு மதங்கள் அனைத்தும் அடிக்கோடிட்டு கூறுகின்றன. முக்கிய பிரமுகர், மிக முக்கிய பிரமுகர் என ஆகி விட்டவர்கள் , ஆக்கப்பட்டவர்கள் தங்கள் நுனிப்புல் மேயும் அறிவுத் திறத்தில் கடவுள் பற்றிய கருத்துக்களைக் கூறுவது, வானத்தைப் பார்த்து கல்லெறிவதற்கு ஒப்பாகும். அது கடவுள் தம்மை சென்று சேர்வதுமில்லை, சேராமல் மீளவும் சொன்னவர் மீதே வீழாமல் போனதுமில்லை.
(வளரும்)