இதயம்
மெய்யெனும் ஆலையின்
மின்சார அறையே…
ஆலையெங்கிலும் ஒளி பாய்ச்சி
நீ மட்டும் இருண்டிருக்கிறாய்..!
என் உயிர்த்துடிப்பே
வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல்
துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு
என்ன கைமாறு செய்வேன்?
சிறு உடற்பயிற்சி….?
சிறு சுவாசப்பயிற்சி…?
சிறு யோகாசனம்…?
ஏதேனும்...?
அன்றி,
புகையும்...போதையும்…?
என் கடவுளின்
கர்ப்ப கிரகமே
உன் பூஜைக்கு
எதை அர்ச்சிப்பேன்?
கருணை மலர்கள்..?
அன்றி
கயமை குணங்கள்..?
என் கைக்குழந்தையே
உனக்கு என்ன ஊட்டுவேன்?
மலர்ச்சியின் மணம்?
மவுன தவம்?
புரட்சியின் திறம்?
புதுமையின் நிறம்?
அன்றி,
மயக்கத்தின் சுகம்?
மாறாத பயம்?
என்ன கடன்பட்டனை சொல்
இதயமே நானுனக்கு ...? (2013)
('கடவுளின் நிழல்கள்' நூலிலிருந்து)