எங்க ஊரு திருவிழா

மஞ்சள் குங்குமத்தால்
மங்கலமாய் நீராடி,,
மாவிலை தோரணத்தால்
மூங்கில்களை அலங்கரித்து ,,
ஆண்களும் பெண்களும்
ஆனந்த கும்மியிட்டு ,,
விசிலும், குழவியும்,
விண்ணை ஆர்ப்பரிக்க,,
தோரணையாய் தொடங்கிடுமே
தோரணை மரம் தூக்குவதுடன்,,
முத்தழகில் எங்களை காக்கும்
எங்க ஊரு
முத்தாலம்மன் கோவில் திருவிழா !!..


அங்காளி, பங்காளி,
மாமன், மச்சான் என
உறவுகளால் இல்லம் நிரம்புகையில்,,
உள்ளுக்குள் தோன்றும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு
மிகப்பெரிய பங்குண்டு
மாமன் பெற்ற மயிலுக்கு!!..


கோவிலை சுற்றி பந்தல் போட்டு,,
வாசலில் வாழை கட்டி,,
மாவிலை தோரணம் கட்டி,,
மாவினால் கோலமிட்டு,,
மின் விளக்குகளால்
வீதிகளை அலங்கரித்து,,
முத்தாலம்மன் அவளின்
மூன்று நாள் விழாவிற்காக,,
வாடகைக்கு எடுத்திடுவோம்
வானவர்களிடமிருந்து சொர்க்கத்தை!!..


விஜய், அஜித்தின் தோள்களில்
தோழமையோடு கை போட்டு,,
விழாவிற்கு வருவோரை
விருந்தோம்பலுடன் வரவேற்போம்,,
வீதிகளில் கட்டிவிட்ட
விளம்பர ப்ளெக்சில் நின்றுகொண்டு!!..


மஞ்சளில் நீராடி,,
மங்கலமாய் பட்டுடுத்தி,,
சந்தனம் குங்குமமிட்டு,,
சங்கு கழுத்தில் நகையணிந்து,,
மலர்களால் அலங்கரித்த
மஞ்சம் தனில் அமர்ந்து,,
முத்து போல் ஜொலித்திடுவாள்
எங்க ஊரு முத்தாலம்மா!!..


கோவிலுக்கு நேந்துவிட்ட
கிடாக்களை பலிக்கொடுத்து,,
அம்மனுக்கு அர்ச்சனை செய்து,,
ஆலயத்தின் முன்பாக
ஊர்கூடி பொங்கல் வைத்து
உறவுகளை வளர்த்திடுவோம்!!..


சேலை, சுடி, தாவணி என
சிங்காரமாய் உடை அணிந்து,,
மாவிலக்கு எடுத்துக்கொண்டு
ஊர்வலமாய் பவனிவரும்
மங்கைகளை காண
வேட்டியை மடித்துக்கட்டி,
வீராப்புடன் நடந்திடுவோம்!!...


குறவன் மகள் வள்ளிதனை
குமரன் மணந்த கதையினை
ஆயிரம் முறை கேட்டாலும்,,
வள்ளி திருமணம் நாடகத்தை
விடிய விடிய பார்த்திடுவோம்!!..
இரட்டை அர்த்த வார்த்தை கேட்டு
இலைமறைவாக சிரிப்பவளை
ஓரமாக அமர்ந்துகொண்டு
ஓரக்கண்ணில் ரசித்திடுவோம்!!..



கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
பொய்க்கால் குதிரை, தேவராட்டத்தோடு,,
காளி, கருப்பு, பூதம்,
குறவன், குறத்தி என
விதவிதமாய் வேடமிட்டு,,
விண்ணுலகம் அதிர
தப்பெடுத்து அடிக்கையில்
ஆடாத கால்களும்
தானாக ஆடிடுமே !!..


பூலோக மாதாவை
பூஞ்சோலை அனுப்பிவிட்டு,,
மஞ்சள் தண்ணி கையில் எடுத்து
மாமன் மகள் விரட்டயிலே,,
துள்ளி குதித்து ஓடினாலும்
துரத்தி வந்து
ஊத்தடி என
உள்ளுக்குள்ளே ஏங்கிடுவோம் !!..


மங்கை ஊற்றிய மஞ்சள்நீர்
சட்டை அளவில் காய்ந்தாலும்,,
மனதினிலே ஈரத்தோடு,,
மூன்று நாள் சுவாரஸ்யங்களை
மூன்று வருடம் அசைபோடுவோம்!!..

எழுதியவர் : சரவணா (25-Jun-15, 1:45 pm)
பார்வை : 2169

மேலே