மயிலாட மனையாட- யதார்த்த நகைச்சுவை

...............................................................................................................................................................................................
அது திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமத்தின் பக்கம் வீடெடுத்து நாங்கள் குடியிருந்த நேரம். நான், என் கணவர், எங்கள் கைக்குழந்தை திவ்யா, கூட என் தாயாரும்..
என் அம்மா புளியோதரை மிக அருமையாக சமைப்பார்கள். அன்று மதியம் நானும் என் கணவரும் குழந்தையோடு வெளியே போய் விட்டு தெருவில் வந்து கொண்டிருந்த போதே புளியோதரை வாசம் மூக்கைத் துளைத்து பசியை ஏடாகூடமாய்த் தூண்டி விட்டது.
ஒரு தட்டில் புளியோதரையைப் பரப்பி முன்னறையில் ஆற வைத்திருந்தார் அம்மா.
அப்போது “டொம் டொம்” என்று குளியலறைக்குள்ளிருந்து தட்டும் சத்தம்...
இந்நேரத்தில் குளியலறையில் யார்?
குளியலறைக் கதவைத் திறந்தவுடன் சரட்”டென்று எங்களைத் தள்ளி விட்டு உரிமையோடு உள்ளே பாய்ந்தது மயிலொன்று. ஆண் மயில்..! கணக்கற்ற கண்கள் உள்ள தோகையை விறகுக்கட்டை போல் அடுக்கிக்கொண்டு, மிக அழகாக மயில் நிறத்தில் மயிலைப் போலவே இருந்தது....! ரமண மகரிஷி ஆசிரமத்து வளர்ப்பு போலும்..!
தட்டில் வைத்திருந்த புளியோதரையை அள்ளி அள்ளித் தின்றது.
நாங்கள் திறந்த வாய் மூடாமல் அப்படியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மா மாத்திரம் பெருமை பொங்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் பக்கத்தில் வைத்தார்.
எல்லாப் புளியோதரையையும் பருக்கை விடாமல் மொக்கி விட்டு தண்ணீரையும் குடித்தது மயில். பசியோடிருந்த எங்கள் அனைவரையும் ஒரு ராஜ பார்வை பார்த்து விட்டு வயிற்றைத் தள்ளிக் கொண்டு குளியலறை பக்கம் நடந்தது. கண்களாலேயே கதவைத் திறக்கச் சொல்லி அங்கிருந்த திறப்பு வழியாகப் பறந்து போனது.
மீதி இருந்த புளியோதரை எங்களுக்குப் போதாது என்பதால் அதை அப்படியே எடுத்து வைத்து விட்டு வேறு அயிட்டம் சாப்பிட வேண்டியதாயிற்று.
அடுத்த நாள் எஞ்சியிருந்த புளியோதரையை அவனில் வைத்து சூடு படுத்திய போது அதே போல் வந்து விட்டான் பையன்...! அதாவது மயில் பையன்..!
வந்தவன் சும்மா வர வேண்டியது தானே?
என்னவோ இவன் சாப்பிட்டதற்கு நாங்கள் பணம் கேட்ட மாதிரியும் பணமில்லா விட்டால் மாவரைக்கச் சொன்ன மாதிரியும் அல்லது அதற்குச் சமமாக எதையாவது கொடுக்கச் சொல்லி வற்புறுத்திய மாதிரியும்....
ஒரு நல்ல கருநாகத்தை அலகில் தூக்கிக் கொண்டு வந்திருந்தான்....! உ...உ...உயிருள்ள கருநாகம்...! அப்படியே எங்கள் முன் போட்டான்..!
நாங்கள் ஆளுக்கொரு மூலையாக அலறி அடித்து ஓடினோம். நான் தூளிப் பிள்ளையை தூக்க ஓடினேன். என் கணவர் பாம்பை அடிக்க சுற்று முற்றும் பார்த்து எதுவும் கிடைக்காமல் மயில் பையனையே பாம்பின் மேல் தூக்கிப் போட்டார்.
“மயில் கண்ணா, ராஜா, முருகா.. இதெல்லாம் வேணான்டா.. நோ தாங்க்ஸ்..! வெளிய எடுத்துட்டுப் போடா... ”
எல்லோரும் கெஞ்சிக் கூத்தாடியது அவனுக்கு வினோதமாய் இருந்திருக்க வேண்டும்..! நாக்கு செத்த மனுசப் பசங்கள்.. ! ஆளுங்களுக்குத் தெரியுமா அரவத்தின் ருசி?
பாம்பைத் தூக்கிக்கொண்டு வெளியே போனான்.
திரும்ப அவன் மட்டும் வந்து புளியோதரை சாப்பிட்டான்.
இம்முறை நாங்கள் நின்று வேடிக்கை பார்க்கவில்லை. நாங்களும் அவனோடு சாப்பிட உட்கார்ந்து கொண்டோம். சாம்பார் சாதம், ரசம் சாதம் கூட கொஞ்சம் கொஞ்சம் வைத்தோம். அப்பளத்தை பிரியமாய்க் கொத்தினான்.
ஒரு மயிலோடு அமர்ந்து சாப்பிடுவது எங்களுக்கு அதுதான் முதல் முறை. (எங்களுக்கு மாத்திரம் ரொம்பப் பழக்கமா என்று கேட்காதீர்கள்.)
பளபளக்கும் அதன் உடலும் பூனையைப் போல் “ க்யாங்.. க்யாங் ” என்று கத்துவதும், பயமில்லாத குட்டி விழிகளும், கொண்டையும், மண்டையும்... தூ...தூ..! தூ..! (ஒன்றுமில்லை; திருஷ்டி கழிக்கிறோம்.. திவ்யாவை அப்படித்தான் செய்வோம்)
ஆக, இவனுக்காக புளியோதரை பண்ணி வைத்து விட்டு சாப்பாட்டு நேரத்தில் காத்திருப்பதும், வரத் தாமதமானால் நாங்கள் அத்தனை பேருமே “க்யாங் க்யாங்” என்று கத்துவதும் வாடிக்கையானது. அக்கம் பக்கத்தினர் எங்களை ஒரு மாதிரி பார்த்தனர்.
ஒரு வாரம் கழிந்தது.
இந்த ஒரு வாரத்தில் மயில் எங்கள் வீடு முழுக்க நடை பயின்று வந்தது. திவ்யா மயிலிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள். அவள் தூளியில் படுத்திருந்தால் மயில் பையன் தூளியையே சுற்றி சுற்றி வருவான். அலகால் தூளித்துணியை இழுத்து ஆட்டி விடுவான். நான் பயந்து போவேன்- குழந்தையை கொத்தி விட்டால் என்ன செய்வது? என் அம்மா கலங்க மாட்டார்.. நான் என் தாயாருக்குப் பத்தாவது பிள்ளை. கனிந்த தாய்மையில் என் தாய் சொல்லுவார், “ அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா.. அண்ணன் தங்கச்சின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க.. நீ சின்னப் பிள்ளையில உங்க அண்ணன்ங்க கிட்ட வாங்காத கிள்ளா? விடு ”
மயில் எப்போது திவ்யாவுக்கு அண்ணனானது?
என் மடியில் உட்காருகிற போட்டியில் மயில் பையனுக்கும் திவ்யாவுக்கும் குழாயடிச் சண்டையே நடக்கும். அந்த சமயம் என் கணவர்தான் வந்து மயில் பையனை வாரி அணைத்துக் கொண்டு போவார். அவர் முதுகில் கை வைத்து மசாஜ் செய்தால் பையன் கால்களை ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு அவ்வளவு சுகமாகத் தூங்குவான்... ரமணாசிரமத்தில் கல்லுடைக்கிற வேலை செய்து களைப்போ என்னவோ?
பீரோவில் அடைபட்டால் மூச்சுத் திணறும் என்று நிறைய தமிழ் சினிமாக்களைப் பார்த்து நானும் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பீரோவிலும் தூங்க முடியும் என்று காட்டியவன் மயில் பையன்.
நாங்கள் அலுவலகம் சென்ற நேரங்களில் இந்தப் பையன் கண்ணாடி பீரோவில் பட்டுப் புடவைகளைத் தள்ளி விட்டு இரண்டு மணி நேரம் நன்றாகத் தூங்குவானாம் - அம்மா சொன்னார்.
நானும் அன்று பார்த்தேன். பெரிய பீரோதான். மேல்தட்டில் உடலும் அலமாரிக்கும் கதவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் தோகையையும் விட்டுக்கொண்டு நன்றாகத்தான் தூங்கினான். “கதவை சாத்திடணும்; இல்லாட்டி கீழே விழுந்துடுவான்” என்று சொல்லி அம்மா கதவைச் சாத்தினார்கள்.
நண்பகல் கழிந்த பிறகு எழுந்திரிக்கும் பயல் தோட்டத்துக்குப் போய் வேப்பங் கிளையை ஒடித்து ஒடித்து சுவைப்பான் - பல்லு விளக்குகிறானோ? “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்று இவனுக்கு எப்படி தெரியும்? அப்புறம் சுடு மண்ணில் பப்பரப்பா என்று இறகுகளைத் தழைத்து படுத்து விடுவான். ஒழுங்காக இறகு கோத மாட்டான். இங்கொரு இழுப்பு, அங்கொரு கொத்து அவ்வளவுதான். மேக்கப் ஓவர். பிறகு விர்ர்ர்ர்..........
ஒருமுறை என் சின்ன மாமியார் வந்திருந்தார். கொஞ்சம் பார்வை குறைவானவர்; பீரோவைப் பார்த்து விட்டு “ அடடா, மயில் நிற பட்டுப்புடவை எங்க வாங்கின? ” என்று கேட்டார்.
அது மயில் நிறப் பட்டுப் புடவையல்ல, மயிலேதான் என்று சொல்லி, பயலைப் பிடித்து கையில் கொடுத்தோம். அவர் விழிகள் விரிந்ததைப் பார்க்க வேண்டுமே? ஒரு ஆள் உள்ளே நுழையலாம்...!
ஒரு முறை இவனைத் தேடிக்கொண்டு ஆசிரமத்து சாமியார் வந்து விட்டார். மயிலை யாராவது கொடுமைப்படுத்துகிறார்களா என்று பார்க்க வந்தாராம். நானும் என் கணவரும் டிவிக்கு பக்கவாட்டில் சேர் போட்டு, ஒரு பறவையைப் போல கழுத்து வளைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். இவன் எங்கள் மடியில் நேராக உட்கார்ந்து கொண்டு “ பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ” படம் பார்த்துக் கொண்டிருந்தான் – என்னவோ அந்தப் படம் அவனுக்குப் பிடிக்கும்... ! சாமியார் சிரித்து விட்டார், “ ரொம்பப் படுத்தறானோ? ” என்றார்.
கொஞ்ச நாள் கழித்து ஜோடி மயிலை அழைத்து வந்தான். இந்தம்மாவுக்குப் பரிசு கொடுக்க என் கணவரின் ஷேவிங் செட்டை தூக்கிக் கொண்டு இவன் பறந்து போனது வேறொரு கதை. அவள் சுத்த வாயாடி- “ குயாங் குயாங் குயாங் ” என்று ஒரே கத்தல். அவள் உயரத்துக்கு வீட்டுச் சுவரில் இருக்கிற அத்தனை சுண்ணாம்பையும் தின்று தீர்த்து விட்டாள்.
இப்போதெல்லாம் என் கணவர் வாசலில் குளித்து விடுகிறார். நானும் அம்மாவும் சமையலறையில்...!
குளியலறைக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? அங்குதானே இவர்கள் குஞ்சு பொரித்து, பராமரித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
..............................................................................................................................................................................................