புறகு - அறிவியல் புனைவு - சிறுகதை

நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள். அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.

நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!) ‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.

அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடையில் எந்திரத்திற்கும் வாஞ்சை வரும்படி மிளிர்ந்தாள் நிலா! மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவித்தலின் போதும் இதே நிறத்தில்தான் ஆடை அணிந்திருந்தாள். இன்று நடந்தது போல நினைவிருக்கிறது அது! ஏழு வயது நிலா. அழகு + அப்பாவித்தனம். கொஞ்சம் பயந்திருந்தாள். எத்தனை கேள்விகள் கேட்டாள்?

“வலிக்குமா?”

”இல்ல!” அழுத்தமாய் சொன்னாள் அம்மா, இருபதாவது முறையாக இதே கேள்வி!

“அண்ணா சொன்னானே… பின்கழுத்துல, மண்டைக்குள்ள, காதுக்குள்ளலாம் ஊசி ஊசியா குத்தி மின்சார துடிப்பு பாய்ச்சுவாங்கனு…”

”நிலா…”

ஒவ்வொரு பதிலுக்கும் பத்து கேள்விகள் முளைத்தன அவளிடம்! அதன் பின் எத்தனை சுட்டியாய் மாறிவிட்டாள் அவள். இரண்டாயிரம் ஆண்டு ஆராய்ச்சியின் பலன் இது. ஏழு வயதுவரை குழந்தைகள் கல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். உண்டு உறங்கி விளையாடி ஆரோக்கியமாய் வளர்ந்தால் போதும். ஏழு வயது ஆன பின் மையக் கட்டுப்பாட்டுத் தலைமை விதிக்கும் ஒரு நாளில் குழந்தைக்கு எழுத்தறிவித்தல் நடக்கும். உயிரியல், உளவியல், கணினி கலந்த ஒரு செயல்பாடு அது. தேர்ந்தெடுத்த இரண்டு அல்லது மூன்று மொழிகளில் படிக்கும்-எழுதும் அறிவு நேராக குழந்தையின் மூளையில் பதியப்படும். ழ-கதிர் அலைகளாக செய்தி மூளைக்குள் செலுத்தப்படும். மொத்தம் மூன்றே நிமிடம் – ‘படிப்பறிவு’ பெற்றுவிடுவர், அறியாமையில் இருந்து அறிவின் முதல்படிக்குச் சென்றுவிடலாம்!

எட்டு வயதில் நிலா என்னென்ன படித்தாள்… அண்டவியல், அணுக்கரு குவாண்ட இயற்பியல், துணைக்கோள் பயிர்மேலாண்மை, செர்க்கோ மொழியியல் (செர்க்கோ – ஆண்டிரோமெடா பேரடையில் வசிக்கும் ஒர் வளர்ச்சியடைந்த இனம்,) மானுட மருத்துவம் இன்னும் இன்னும்…

”நான் அணுக்கரு இயற்பியலாளி ஆகப் போறேன்” என்பாள், “குவார்க்கு, க்ளூவான் பத்திலாம் இன்னும் தெரிஞ்சுக்கனும்…”

“பேசாம, நான் மொழியியலே படிக்கவா? வேற வேற நட்சத்திரத்துக்குப் போய் அதன் கிரகத்துல இருக்குற இனங்கள் பற்றி ஆராயலாம்…” மாதம் ஒரு கொள்கை மாறும்!

எழுத்தறிவித்த மூன்றாவது ஆண்டில் (பத்து வயதில்) தொழில்நிர்ணயம் செய்வர். மூன்று ஆண்டுகளில் அக்குழந்தை படித்த விஷயங்களால் அதன் மூளை ஒருவித தயார் நிலைக்கு வந்திருக்கும். மூன்று ஆண்டும் ஒரு பிரத்யேக மீக்கணினி மூலம் குழந்தையின் ’அவ்வை’ (அறிவு விரிவு அளவை) அலசப்படும். மூன்றாவது ஆண்டின் முடிவில் அதற்கு ஏற்ற தொழில் முடிவாகும். இந்த ‘அவ்வை’ மீக்கணினி ஒரு சிறிய பதக்கத்தின் வடிவில் குழந்தையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். இதன் தகவல்கள் அவ்வப்போது வீட்டின் முதன்மைக் கணினிக்கும், அக்குழந்தை வசிக்கும் கோளின் கட்டுப்பாட்டுத் தலைமைக்கும், அங்கிருந்து மையக் கட்டுப்பாட்டுத் தலைமைக்கும் அனுப்பப்பட்டு குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

பத்து வயதில் ழ-கதிர் மூலம் குழந்தைக்கு அதற்குரிய தொழில்சார்ந்த அறிவு முழுமையாக பதியப்படும். ஓராண்டு களப்பயிற்சிக்குப் பின் அவன்/அவள்/அது (இனி ‘குழந்தை’ இல்லையே!) பரந்த மானிடத்தற்குத் தன் சேவையைச் செய்ய தயார். பதினொன்றாம் வயதில் தொழிவல்லுநர்!

சில மாதங்களுக்கு முன் நிலா மருத்துவராக ஆவலாய் இருந்தாள், அவளது ‘அவ்வை’ “மொழி வல்லுனர்” என்று காட்டிக்கொண்டிருந்தது, இரண்டு வாரங்களில் அதுவும் ‘மருத்துவர்’ என்றது… கடந்த இரண்டு மாதமாக அது ‘மருத்துவர்’ என்றே இருக்கிறது (அவ்வை-யின் அலசல் முடிவுகள் உடனுக்குடன் வீட்டின் முதன்மை சுவர்த்திரையில் தெரியுமாறு அம்மா ஆணை கொடுத்திருந்தாள்!) மூன்றாண்டுகளில் அது தொடர்ந்து ஒரே நிலையைக் காட்டியது இதுவே அதிகம்!

“ரவிக்கு இந்தளவுக்கு மாறிட்டே இருக்கலல?”

”குழந்தை பக்குவம் அடைய அடைய அவ்வையின் கணிப்பும் சீராகும்!”

என்ன இருந்தாலும் நிலா கொஞ்சம் அதிகமாகவே சுட்டிப்பெண்தான். இதோ இன்று இறுதியாக ஆழமாக ஒருமுறை அவளது மூளையை அலசி அவளுக்கான வாழ்நாள் தொழிலை முடிவுகட்டப் போகும் நாள். அம்மாவே அவளைத் தயார் செய்துகொண்டிருக்க, பத்து வயது நிலா ஆழ்ந்த சிந்தனையில் கொஞ்சம் முதிர்ச்சியின் அழகோடு சிலை போல அமர்ந்திருந்தாள். தன் கழுத்தில் இருந்த அந்த வெளிர் நீல ‘அவ்வை’ பதக்கத்தை பற்களுக்கு இடையில் வைத்து மெல்ல கடித்துக்கொண்டிருந்தாள் (ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது இது பழக்கம்!)

“அத கடிச்சுட்டே இருக்காத நிலா, ஏற்கனவே அது ஒழுங்கா வேல செய்யுதா இல்லயானு தெரியல” அம்மா அவளை கொஞ்சம் அச்சுறுத்தும் நோக்கத்துடனேதான் சொன்னார்,

“அம்மாஆஆ…”

“என்னடி இழுக்குற? சொல்லு?”

“நான் என்ன ஆகப் போறேன்?”

”அநேகமா மருத்துவர், அப்படித்தான உன் அவ்வை ரெண்டு மாசமா காட்டிட்டு இருக்கு!”

“எனக்கு அது வேண்டாம் இப்ப!”

“நீ எத்தனவாட்டி ஆசையை மாத்திட்ட, கணக்கே மறந்து போச்சு நிலா எனக்கு!”

“இல்லம்மா… என் பேரு ஏன் நிலானு வெச்சீங்க?”

“சொல்லிருக்கேனே… அப்பாவோட மூதாதைகள் இருந்த கிரகத்தோட துணைக்கோளோட பேரு அது… அவரு சொல்லி நான் அதைப் பற்றிப் பார்த்தேன், எனக்குப் பிடிச்சுது, அதையே உனக்குப் பெயரா வெச்சுட்டோம்!”

”ம்ம்… நானும் நிலாவைப் பற்றிய கோப்புகளைலாம் பார்த்தேன்… எனக்கும் அதை ரொம்ப பிடிச்சுப் போச்சு… பூமிலேர்ந்து பார்க்க எவ்ளோ வெள்ளையா, குளிர்ச்சியா, வட்டமா அழகா…. ஏவ்ளோ கவிதை எழுதியிருக்காங்க… இலட்சக்கணக்கா துணைக்கோள்கள் இருக்கு, ஆனா அதெல்லாம் ஒரு பெரிய கல், ஆனா ‘நிலா’ அப்படியில்லை… அது…”

“ஆமா ஆமா… கிளம்பு…”

“எனக்கு மருத்துவர் ஆக வேண்டாம்…” நிலாவின் பதக்கத்தில் இருந்த புள்ளி போன்ற சிறிய எலக்ட்ரான் விளக்கு வழமையான பச்சையைவிட்டு நீல நிறத்தில் ஒளிரத் தொடங்கியிருந்தது…

”ம்ம்ம்… சரி, நீ என்ன ஆகலாம்னு கணினி சொல்லும், வா போய் தெரிஞ்சுக்கலாம்…”

”இல்ல…” நிலா அம்மாவின் கையை உதறினாள் “எனக்கு வேண்டாம்!”

“நிலா…” அம்மா தனது அச்சத்தைத் தன்னை அறியாமல் முகத்தில் காட்டினாள், இபோதுதான் அவள் அவ்வையைக் கவனித்தாள், நீல ஒளிப்பொட்டு இப்போது விட்டு விட்டு ஒளிர்ந்தது, “நி…லா…” நிலா மீண்டும் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

”நி- நிலா…” அம்மா லேசாக விம்மி அழுதாள். நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவைச் சமாதானம் செய்ய முயன்றாள், “நீ சொல்றபடியே கேட்குறேன் மா, மருத்துவரே ஆயிடுறேன், அழாத ம்மா…”

“இ- இல்லமா…” லேசாக மூச்சுத் திணறியது அம்மாவிற்கு, நிலாவிற்கும் படபடப்பு அதிகரித்தது. “வாம்மா போலாம்…”

“இ- இல்லமா, நாம அங்க போக முடியாது… போகக் கூடாது…” அம்மாவின் கண்ணீர் கன்னம் உதடு தாடை என்று மெல்ல ஓடை போல வழிந்தது, நிலா துடைத்துவிட்டாள்…

‘கவனிக்கவும். நிர்வாகத்தின் காவலர் வருகின்றனர். அவர்கள் வரும்வரை வீட்டு உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கவும். கையில் எதுவும் வைத்திருக்கக் கூடாது. எச்சரிக்கை: நிர்வாகத்தின் கட்டளை, மீறினால் உயிர்வாழும் அனுமதி ரத்தாகும்’ எந்திரக் குரல் சுவரிலிருந்து ஒலித்தது. அம்மா நிலாவைக் கட்டிக்கொண்டு நன்றாகவே அழுதாள்.

நிலா எதுவும் புரியாமல் விழித்தாள். அவள் கண்களிலும் காரணமே அறியாமல் கண்ணீர் வழிந்தது. அம்மாவைத் தேற்ற முயன்று கொண்டிருந்தாள். “ஏம்மா…”

அம்மா சட்டென அழுவதை நிறுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். நிலா எதற்கோ தயாரானாள்.

“பாரு…” அம்மா சுவர்த்திரையை நோக்கி கைகாட்ட, நிலா திரும்பிப் பார்த்தாள், அவளது அவ்வை இப்போது மருத்துவம், மொழியியல் என்று எதையும் காட்டவில்லை, நீல நிறத்தில் ‘புறகு’ என்ற சொல் பளிச்-பளிச்சிட்டது. நிலா புரியாமல் அம்மாவைப் பார்த்தாள்.

“புறகு-னா?”

“எதுக்கும் ஒத்துவராதவனு அர்த்தம்!”

“புரியல ம்மா…”

“கேளு நிலா, ஒரு கிரகத்துல இருந்த நம்ம இனம் இன்று சில நூறு பேரடைகள்ல, பல ஆயிரம் கோள்கள்ல இடம்பெயர்ந்து வாழுது, இதுக்கு காரணம் நம்ம அறிவை நாம பெருக்கிக்கிட்டதுதான்… அறிவைப் பெருக்கிக்கொள்ளும் தேடல்ல நாம இயற்கையை மீறி பல விஷயம் செய்தோம், அதுக்கெல்லாம் கிடைத்த பயன்தான் நமக்கு இப்ப இருக்குற கல்விமுறை, பிறந்த பத்து ஆண்டுல ஒரு மனிதனை ஒரு துறையின் வல்லுநரா மாற்றும் முறை… என்னதான் இருந்தாலும் இது இயற்கையை மீறியதுதானே? இயற்கை நம் எல்லோரையும்விட பெரியது! அதுக்கான முறைன்னு ஒன்று எப்பவும் இருக்கும்… அப்படித்தான் இந்த கல்விமுறைலயும் சில சிக்கல் இருக்கு…”

நிலா தன் அகலக் கண்கள் விரிய அம்மாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். சுவரில் நீலவொளி ‘புறகு’ கொஞ்சம் அதிகமாக துடித்தது. எந்திரக்குரல் மீண்டும் தன் எச்சரிக்கையை அறிவித்தது. அம்மா இன்னும் விரைவாக தன் பேச்சைத் தொடர்ந்தாள்,

”ஒரு மனிதர் ஒரு துறைலதான் வல்லுநர் ஆக முடியும்னு இந்த முறை வலியுறுத்துது, அப்படித்தான் எல்லாரும் ஆகுறாங்க. ஆனா, எப்பவாவது இந்த விதி மீறப்படுது. பல துறைலையும் ஆற்றல் உள்ள மனிதர்கள் மிக அரிதா தோன்றுவாங்க. அவங்களுக்குத்தான் ‘புறகு’னு பெயர்…” நிலா நிமிர்ந்து உட்கார்ந்தாள்,

“அப்படினா…” பேசத் தொடங்கியவளை அம்மா கை காட்டி நிறுத்தினாள்,

“நீயும் அதான்! இந்தக் கல்விமுறைக்குப் புறம்பானவள், புறகு! இம்முறையைவிட மேம்பட்டது உன் மூளை. இதன் அலசல்களுக்கு அப்பாற்பட்டது… இவர்களுக்குப் புரியாத ஒரு புதிர் நீ… அதனாலத்தான்…” அம்மாவின் கண்கள் மீண்டும் கண்ணீரில் மின்னியது,

“அதனால? என்னை என்ன பண்ணுவாங்க?”

“மானிடத்தின் மகத்தான வளர்ச்சிக்கு உன்னைப் பலியாக்கிடுவாங்க! என் அண்ணனைப் பண்ணது போல…” இப்போது அம்மா நன்றாகவே அழுதாள்,

“அம்மா அழாதீங்கம்மா….” நிலா வாஞ்சையுடன் கட்டிக்கொண்டாள், “உங்க அண்ணாவா?” அம்மா தலையசைத்துத் தொடர்ந்தாள், கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்,

“ஆமா! அவனும் புறகுதான். அவனைக் கொண்டு போய் ஆராய்ச்சிங்குற பேர்ல கிட்டத்தட்ட அவனையும் ஒரு கணினியாவே மாத்திட்டாங்க… நிஜமாவே கணினி – சாப்பாடில்லாம, தூக்கமில்லாம, உணர்ச்சி இல்லாம அவன் மூளை மட்டும்… ஆனா, அவனால மனித குலத்தின் அறிவு பெருகினது என்னவோ உண்மைதான்… அதுக்கு நாங்க கொடுத்த விலை ஒரு உறவு! மறுபடி அதே விலையைக் கொடுக்க நான் தயாரில்லை நிலா…”

“ஆனா அம்மா…” இருவருமே சுவர்த்திரையைப் பார்த்தார்கள், ‘புறகு’ ‘புறகு’, ‘புறகு’…

‘காவலர் வந்துவிட்டனர், கதவைத் திறந்துவிட்டுக் கையை மேலே உயர்த்தியபடி சுவர் அருகில் நிற்கவும்’ என்றது எந்திரம், “ச்சீ சனியனே!”

“அவங்களுக்குத் தெரிஞ்சு போச்சே ம்மா… அவ்வை மையக் கணினியோட தொடர்புல இருக்கு… இனி என்னை எங்க ஒளிச்சு வெக்க முடியும் உங்களால?” ஏனோ நிலா அழவில்லை, அஞ்சவில்லை. ஒருவிதமாய் அவள் தயாராகியிருந்தாள். தான் தனியானவள் என்று அவள் உணர்ந்தே இருந்தாள்.

’காவலர் வந்துவிட்டனர். கதவைத்…’ எந்திரக்குரல் மீண்டும் அறிவித்தது,

“முடியும், உன்னை ஒளிக்க முடியும்… வந்திருக்குற காவலர்களுக்கு இந்த வீட்ல ஒருத்தர் ‘புறகு’ இருக்காங்கனுதான் தெரியும், அது யார்னு தெரியாது…” பேசிக்கொண்டே தன் கழுத்தில் இருந்த ஒரு மெல்லிய சங்கிலியைக் கழற்றி நிலாவின் கழுத்தில் போட்டாள் அம்மா.

’காவலர் வந்துவிட்டனர். கதவைத்’ எந்திரக்குரலின் பின்னணியில் கதவைத் திறக்க முயலும் அரவம் கேட்டது, காவலர் தங்கள் மீக்கடவுச்சொல்லால் கதவின் பூட்டுகளைத் திறந்துகொண்டிருந்தனர்.

”நாங்கலாம் போனவுடனே நீ அப்பாக்கு அழைத்து நடந்ததைச் சொல்லு, உடனே கிளம்பி அவர் அலுவலகம் போயிடு, அப்புறம் அவர் உன்னைப் பார்த்துப்பார்…” பேசிக்கொண்டே அம்மா தன் மணிக்கட்டு கணினிக்கு ஆணைகள் பிறப்பித்துக்கொண்டிருந்தாள். மீக்கடவுச்சொல் இருந்தும் காவலர்களால் இன்னுமா கதவைத் திறக்க முடியவில்லை என்று நிலா ஆச்சரியப்பட்டாள். அம்மா எதற்கோ தயாரானாள்.

‘காவலர் வந்துவிட்டனர்…’ எந்திரம் மீண்டும் மீண்டும் ஜெபித்தது. நீல நிற ‘புறகு’ மேலும் ஒளிர்ந்தது… நாசூக்கான ஒரு போர்க்களம் போல இறுக்கமான ஒரு அமைதி பரவியது… அம்மா கதவிற்கு முன் நின்றுகொண்டிருந்தாள்… கையில் சிறிய லேசர் கருவி… எங்கிருந்து கிடைத்தது?

“சொன்னதைச் சரியா செய் நிலா… நல்லப் பொண்ணா இருக்கனும்… சரியா… அம்மாக்கு உன்னை எப்பவுமே ரொம்ப பிடிக்…” கதவு திறக்கப்பட்டு காவலர் பதுங்கிப் பதுங்கி உள்ளே வந்தனர்…

”நிர்வாகத்தின் பெயரால் ஆணை, அசையாமல் இருங்கள். கையில் இருப்பதைக் கீழே போட்டுவிட்டு கைகளை மேலே…” அந்தக் காவலரும் எந்திரத்தனமாகவே பேசத் தொடங்கினார்,

அம்மா ஏளனமாகச் சிரித்த்தாள். லேசரை இயக்கியிருந்தாள், குறி சரியில்லை, ஒரு காவலரின் கேடய உடுப்பில்பட்டுப் பிரதிபலித்துச் சுவரில் ஓட்டை போட்டுவிட்டது. வீட்டின் பாதுகாப்புக் கணினி உயிர்பெற்று அலரத் தொடங்கியது. வரிசையாக பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கியது.

கிட்டத்தட்ட அம்மா லேசரை இயக்கிய அதே நொடியில் காவலர் ஒருவரும் தன்னிச்சையாக தனது ‘திகைப்புத் துப்பாக்கியை’ இயக்கியிருந்தார். அம்மா சலனமின்றி கீழே சரிந்தாள்.

“இவங்கதான்… ஏதோ ஒருவகை நிலைபுலக் கருவி உதவியோட இத்தனநாளா தன் அவ்வையின் செயல்பாட்டை முடக்கித் தப்பிச்சிருக்காங்க, இப்போ அது செயலிழந்து போச்சு போல, அவ்வை வேலை செஞ்சு நமக்குத் தகவல் கொடுத்திருக்கு” கைப்பேசி போன்ற ஒரு கருவியை அம்மாவின் கழுத்தருகில் காட்டியவாறே சொன்னார் அந்தக் காவலர்.

அவர்களில் சிலர் அம்மாவைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர். சிலர் வீட்டின் பாதுகாப்புக் கணினியை இயல்பு நிலைக்கு மீட்க செயல்பட்டுக்கொண்டிருந்தனர். ஒரு அதிகாரி தலைமைக் கட்டுப்பாட்டிற்குத் தகவல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருவர் நிலாவின் அருகில் வந்தார்,

“பயப்பட ஒன்னுமில்ல பாப்பா, அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல, அதான் கொண்டு போறோம். நீ வீட்டுக்குள்ளையே இரு, உங்க அப்பாக்குத் தகவல் தருவோம், அவர் வந்துடுவாரு, நாளைக்கே நீ வந்து உன் அம்மாவைப் பார்க்கலாம்” அவர் வாஞ்சையோடுதான் சிரிக்க முயன்றார், அவர் முகத்திற்கு அது ஒத்துவரவில்லை.

கடைசி அதிகாரியும் வெளியேறினார். நிலா தன் கழுத்தில் இருந்த இரண்டு சங்கிலிகளையும் அதன் பதக்கங்களையும் பார்த்தாள். அவ்வையில் எந்த ஒளியும் இல்லை. அம்மா போட்டுவிட்ட பதக்கம் மட்டும் சிகப்புப் பொட்டாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது…

(முற்றும்)

எழுதியவர் : விசயநரசிம்மன் (27-Jun-15, 9:03 pm)
பார்வை : 2244

மேலே