பீகார்காரன்

எல்லாமே மாறி இருந்தது.... மாற்றம் ஒன்று தான் மாறாததை போல மாற மாற மாறிக் கொண்டேயிருந்த எல்லாவற்றிலும்... ஒரு வித புயலின் தாக்கம் இருந்து கொண்டேயிருந்தது.... இருப்பதும் இருக்கிறது என்பது போல இல்லாத வெளிச்சமென புயல் போல வந்த உலகமயமாக்கலின் தேடலில் சட்டென்று காட்சி மாறியது..

எல்லாம் வண்ணங்களின் நீட்சியாகிக் கொண்டிருக்க இருசக்கர வாகனத்தில் எரி பொருள் பெட்டியின் மீது 3 அல்லது 4 வயது கொண்ட ஒரு குழந்தை அமர்ந்திருக்க...பின் இருக்கையில் கட்டட வேலைக்கு கொண்டு செல்லும் இரும்பு சட்டிகள் இரண்டுடன் ஒரு பெண் அமர்ந்திருக்க, ஒழுங்கற்ற தாடி கொண்ட முறுக்கு மீசை கொண்ட ஒரு இளைஞன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்...

வண்ணங்களற்ற ஆடையில் வண்ணமே அல்லாத காட்சியாய் இருந்தது அவர்களின் காட்சி..வண்ணம் கொண்ட புயலின் தீரா தூக்கலின் தீர்க்கம் கண்டு கொள்ளாத சிக்னலில், ஒரு புள்ளியில் இருந்து பீகார்காரன் ஒருவன் கையில் நாய்க்குட்டிகள் பொம்மைகள் கொண்ட கூடையோடு அந்த வண்டியின் அருகே சென்றான்.. சற்றும் தயங்காத குழந்தை சட்டென பின்னால் திரும்பி எட்டிப் பார்த்து தன் அம்மாவிடம்.. "நாய்க்குட்டி பொம்மை வேணும்" என்று கை நீட்டி பொம்மையைக் காட்டி ஜாடையில் கேட்டது...கேட்ட முக பாவனையே பிச்சை எடுபப்து போலதான் இருந்தது...அம்மாவும ஒரு நொடி கூட யோசிக்காத தருணத்தில் "காசில்லடா.." என்று சத்தமாக சொன்னாள்... எதுவுமற்ற முகபாவனையில்..... அந்தக் குழந்தை அம்மாவைப் பார்த்தபடி எதோ சொல்லி விட்டு.. பின் நாய்க்குட்டி பொம்மைகள் இருந்த கூடையைப் பார்த்து சகஜமாய் ஏதோ திட்டியது போல வாயசைத்தது..அந்த பொம்மை இனி கிடைக்காது என்று புரிந்து கொண்ட முகத்தைக் கொண்டிருந்த அந்தக் குழந்தை...... பின் குனிந்து கொண்டது.... வண்டி ஓட்ட தொடங்கிய அந்த தகப்பன் எதுவுமே கண்டு கொள்ளாத தோரணையில் இருந்தான்...

அந்த தாய் பின்னால் திரும்பி நாய்க்குட்டி பொம்மையையே பார்த்துக் கொண்டு போனாள்... வண்ணமே வேண்டாத கோபத்துக்குள் ஒரு உலகை உடைத்து விட வேண்டும் என்ற புயலின் பின்னால் மனம் அலை ஆனதை யாரும் கண்டு கொள்ளவே வேண்டாம்...

இத்தனையும் கண்டு கொண்டிருந்த நான் ஒரு பீகார்காரனாகிப் போனது தான் பெரும் வலி......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (27-Jun-15, 3:00 pm)
பார்வை : 377

மேலே